நடைப்பயிற்சிக்கு முன் 'வார்ம்-அப்' ஏன் செய்ய வேண்டும்? அவசியம் என்ன? - IMPORTANCE OF WARM UP

உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தும்.

Apr 12, 2025 - 10:56
 0  1
நடைப்பயிற்சிக்கு முன் 'வார்ம்-அப்' ஏன் செய்ய வேண்டும்? அவசியம் என்ன? - IMPORTANCE OF WARM UP

அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவோம். காரணம், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக, நடைபயிற்சி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த செலவும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு எளிதான பயிற்சியாகும். அதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சியை தேர்வு செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்ம்- அப் செய்வது அவசியம் என்கிறது NCBI.

அனைத்து வகையான உடற்பயிற்சிக்கு முன்னரும், ஏன் நடைப்பயிற்சி செய்வதற்கு முன்னர் வார்ம் அப் செய்வது இதயத் துடிப்பை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளை தளர்த்த உதவுவதாக நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தசை நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதற்கும் மூட்டு இயக்கம் அதிகரிப்பதற்கும் நன்மை பயக்கும்.

நன்மைகள் என்னென்ன?: உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தும். இது தசை செயல்திறனை அதிகரிக்கவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவும். கார்டியோ பயிற்சிகளால் ஏற்படும் இதயம் தொடர்பான அழுத்தத்தைத் தடுப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்

வார்ம் அப் செய்வது உடல் வெப்பநிலையை அதிகரித்து தசைகளை வலிமையாக்குகிறது. இது சுளுக்கு போன்ற நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். கூடுதலாக, வார்ம் அப் மகிழ்ச்சியின் ஹார்மோன்களான எண்டோர்பின்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். இது மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கவும், கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தவும் உதவும். ஒட்டுமொத்த மனநிலையை ஆதரிப்பதற்கும் வார்ம் அப் பயிற்சி நன்மை பயக்கும். மன அழுத்தத்தில் இருந்தால், வார்ம் அப் செய்வது உடனடி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

எவ்வளவு நேரம் வார்ம்-அப் செய்ய வேண்டும்?: உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களாவது வார்ம் அப் செய்ய வேண்டும். இது ஆக்ஸிஜன் விநியோகத்தை 20 முதல் 30 சதவீதம் வரை மேம்படுத்த உதவும். அதுமட்டுமல்லாமல், இது ஒட்டுமொத்த உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகளை மேம்படுத்தவும் உடற்பயிற்சி திறனை அதிகரிப்பதற்கும் நன்மை பயக்கும். 15 நிமிடங்களுக்கு மேல் வார்ம் அப் செய்த பின் உடற்பயிற்சி செய்தால் உடல் விரைவில் சோர்வடையும். அதனால் அதிகப்பட்சமாக 10 நிமிடங்களுக்கு வார்ம் அப் செய்வது சிறந்தது.

நடைப்பயிற்சியின் முழு பலனை பெற எப்படி நடப்பது?: நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்வதற்கு பதிலாக, 30 முதல் 45 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடப்பது பல நன்மைகளை தரும். 30 நிமிடங்களுக்கு வேகமாக நடக்க முடியவில்லை என்றால், முதல் 15 நிமிடத்திற்கு மெதுவாக நடந்து, அடுத்த 15 நிமிடம் வேகமாக நடக்க வேண்டும். இதை சுழற்சி முறையில் செய்ய வேண்டும். இந்த நடைப்பயிற்சியை தினசரி செய்து வர, பல நலன்களை பெறலாம். அதே போல, மேடான பாதையில் நடப்பது அதிக கலோரிகளை குறைக்க உதவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.