பெண் தேவதைகளின் வெண்ணிற சிறகுகள்

காலங்காலமாக கதைகளில்
கால்கள் தரையில் படாமல்
காற்றில் அசைந்து வரும்
பெண் தேவதைகளும்…
அவர்தம் வெண் சிறகுகளும்
கற்பனையாக இருக்கலாம் !
ஆனால்..
பெண்களில் தேவதைகள்
இருப்பது கற்பனை அல்ல...!
வெண்ணிற சிறகுகள்
பெண் தேவதைகளின் அடையாளமா ?
அங்கமான உறுப்பா? அல்லது
எண்ணங்களின் தொகுப்பா?
யோசிக்க வேண்டிய ஒன்று.!
தேவதைகளின் மனதிலிருக்கும்
தெரியப்படுத்த இயலாத
தனிப்பட்ட விருப்ப உணர்வுகளே
அந்த சிறகுகள் !
பறவைகளின் சிறகுகளை
பார்க்க முடிவது போல…
பெண்களின் விருப்ப சிறகுகள்
கண்ணுக்கு தெரியவில்லை
என்பதே உண்மை!
கூண்டுகளில் வாழுவதற்கு
சிறகுகள் எதற்கு என்று
சிலர் கழற்றி வைத்திருப்பர் !
அன்றி சூழ்நிலை காரணமாக
துண்டித்துக் கொண்டிருப்பர் !
அல்லது யாரேனும்
துண்டித்தும் விட்டிருப்பர் !.
சிறகுகள் இருந்தும்
பறக்க முடியாமல்...
முடமாக, ஜடமாக
சுவர்கள் நான்கிற்கிடையில்
அவர்கள் அடங்கி விடுகிறார்கள்!.
கதைகளில் காணும்
தேவதைககளுக்கு
சிறகுகள் இருப்பது போல...
குடும்பத்தில் வாழும்
பெண் தேவதைகளும்
சந்தோஷ சிறகை அசைத்து
மகிழட்டுமே !
What's Your Reaction?






