குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா?

Kulanthaigal Arockiyam

Jan 24, 2025 - 21:18
 0  0
குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா?

குழந்தை அழுது கொண்டே

 இருக்கிறதா?

 

Crying Babies

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

மனநலம் பாதிக்கும்

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும் தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

கற்றுக்கொள்ளும் திறன்

இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

சத்தமில்லாத மரணம்

இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து

இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில் தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.

குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்

குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அரவணைப்பு முக்கியம்

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow