ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேளுங்கள்!

நம்மில் பலர் இன்றைக்கும் தனது வறுமைக்கும் சோகத்திற்கும் விதியையும் கடவுளையும் நொந்து நொந்து நூல் அறுந்த பட்டம் போல் பயன் இல்லாது போவதைப் பார்க்கின்றோம்.

Apr 10, 2025 - 13:45
 0  2
ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேளுங்கள்!

நமது துன்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் பிறர் மேல் பழியையோ- காரணத்தையோ கற்பிப்பதைத் தவிர்த்து, உங்களை முன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

துன்பத்திற்கு விடிவு தானாக வந்துவிடும். உங்களது எண்ணங்களின் பிரசவிப்புகளில் கோளாறு இருப்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

மனம் காயப்படுத்தப்படாது இருப்பதற்கு எண்ணங்கள் பச்சோந்தியாக இருக்கக் கூடாது. கவரிமான் சாதியாக இருக்க வேண்டும்.

ஒரு செயலை செய்யத் துவங்குவதற்கு முன்னர் அதன் உண்மை நிலையை முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும். தெரிந்து கொண்ட உண்மை நிலையால் நாம் சந்திக்க நேரிடும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்யுங்கள்.

சுகமாக தீங்கு விளைவிக்காத வழியைக் சாதகமாக கண்டறியுங்கள்.

இறுதியாகக் கண்டறிந்த வழியில் வாய்ப்பு, வசதி இவற்றை கணக்கிட்டுச் செய்யத்துவங்கினால் எதிர் வரும் துன்பச் சுமையைத் தூக்கி எறிந்து விடலாம்.

வையகத்தில் வாழ்ந்து காட்டிய சரித்திர நாயகர்கள் எல்லோருமே இவ்வாறே சிந்தித்துச் செயல்பட்டார்கள்.

ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டுக் கேட்டுச் சிந்தித்ததால்தானே இன்றைக்கும் சாக்கரட்டீசும், ஈரோட்டு வேந்தரும் போற்றப்படுகின்றார்கள்.

உண்மை நிலையை வெளிக்கொணர்வது எப்படி? ஒரு செயலை செய்யத் துவங்குவதற்கு முன்னர் ஆய்ந்து அறிந்து சிந்தித்துச் செயல்படுகின்றோம். தீர்க்கமான தீர்வானமுடிவுக்கு வருவதற்குள் பல்வேறு குழப்பங்களை பல நேரங்களில் நாமே வலிந்து வரவேற்றுக் கொள்கின்றோம்.

இப்படிச் செய்யலாமா? இல்லை அப்படிச் செய்யலாமா? என்று நம்மை நாமே வருத்திக்கொண்டு. குழப்பத்தில் குட்டைக்குள் நாம் புதைந்து போவதாலேதான் துன்பம் கலபமாக நம்முள் ஒட்டிக் கொள்கின்றது.

நாம் எடுக்கின்ற முடிவுக்குரிய செயலின் தன்மையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கற்றுத் தெரிந்தோ கேட்டுப் புரிந்தோ பார்த்துப் பழகியோ இருத்தல் அவசியம்.

உதாரணமாக கல்லூரித் தேர்வு அடுத்த ஏழு நாட்களில் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். இடைப்பட்ட ஏழு நாட்களில் தேர்வுக்குரிய பாடங்களை பகுதி பகுதியாகப் படித்து புரிந்து வைத்துக் கொண்டால் தேர்வில் வெற்றி நிச்சயம். சனிக்கிழமை வரை புத்தகத்தைப் பிரித்துப் பார்க்காமேலேயே பொழுதைக் கழித்து விட்டு திங்களன்று வரும் பரீட்சைக்கு ஞாயிறு அன்று புத்தகத்தைப் பிரித்துப் படித்தால் ஒன்றும் புரியாது.

எதையுமே பரிசீலித்து காலத்தை ஒதுக்கிச் சிந்தித்தால் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

நம்மில் பலர் சிந்திப்பதற்கே உடன்படுவதில்லை. எல்லாமே அவசரம்; வேகம். சாக்ரட்டீஸ் கூட நம்மைப் பார்த்து சிந்திக்கக் கற்றுக்கொள் என்றான். ஒரு செய்தியை செயல்படுவதை பல்வேறு கோணங்களில் சிந்தித்தால்தான் அதன் இருபுறங்களும் பளிச்செனத் தெரியும். அப்போதுதான் நியாயங்கள் சார்ந்த செயலுக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ள இயலும்.

நடுநிலை தவறாமை எதிர்மறைவு விளைவுகளை உண்டாக்காமை எல்லோராலும் ஏற்றுக்கொள்கின்ற பொதுநலன் இவற்றை கருத்தில் கொண்டு உண்மை நிலையை கண்டறிதல் வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.