ஜிம் போகாமலேயே தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்...
Weight Loss Tips In Tamil: உலகளவில் பெரும்பாலானோர் அவதிப்பட்டுக் கொண்டும் ஒன்று என்றால் அது தொப்பை தான். இந்த தொப்பை வந்துவிட்டால், தினசரி செயல்பாடுகளை செய்வதில் கூட சிரமத்தை சந்திக்க நேரிடும். குனிந்து ஒரு பொருளை எடுக்க முடியாது, மாடிப்படி ஏற முடியாது, சிறு தூரம் கூட நடந்தால் மூச்சிரைக்கும்.

மேலும் தொப்பையை ஒருவர் குறைக்க முயற்சிக்காமல் இருந்தால், நாளடைவில் அது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட வைத்துவிடும். இந்த தொப்பையைக் குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன.
அதில் நிறைய பேர் தேர்ந்தெடுக்கும் வழி உடற்பயிற்சி. ஏனெனில் உடற்பயிற்சியின் மூலம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை திறம்பட எரிக்கலாம். இதன் மூலம் விரைவில் தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும். அதற்காக பலர் இந்த உடற்பயிற்சியை சரியாக மேற்கொள்ள ஜிம்மில் சேர்ந்து, உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அனைவராலும் இப்படி ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாது. ஆனால் வெறும் உடற்பயிற்சி மட்டும் ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவாது. அத்துடன் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் ஒருசில முக்கியமான மாற்றங்களையும் செய்ய வேண்டியது அவசியம். இப்போது ஜிம் செல்லாமலேயே பானைப் போன்று வீங்கியிருக்கும் தொப்பையைக் குறைப்பதற்கான சில வழிகளைக் காண்போம்.
1. சர்க்கரையை தவிர்க்கவும்
தொப்பையில் உள்ள கொழுப்பைக் கரைக்க வேண்டுமானால், முதலில் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காத டீ அல்லது ப்ளாக் காபி குடிக்கலாம். மேலும் எந்த உணவுப் பொருட்களை கடையில் வாங்கினாலும், அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து வாங்கி உட்கொள்ள வேண்டும். மொத்தத்தில் உணவில் சர்க்கரை சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
2. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணவும்
தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுக்க வேண்டியது அவசியம். இந்த சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, தசைகளின் அடர்த்தி அதிகம் குறையாமல் தொப்பையை குறைக்கலாம்.
3. கொழுப்பைக் கரைக்கும் பானங்கள்
கொழுப்பைக் கரைக்கும் பானங்களும், உணவுகளும் நிறைய உள்ளன. அவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், தொப்பையைக் குறைக்கலாம். அதில் க்ரீன் டீயில் கொழுப்பைக் கரைக்கும் ECGC உள்ளது. இது தவிர ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள், ஆப்பிள் சீடர் வினிகர், ஆலிவ் ஆயில், முட்டைகள் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
4. தூக்கம் அவசியம் தொப்பை அல்லது உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், முதலில் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எவர் ஒருவர் ஒரு நாளைக்கு 7 மணிநேரத்திற்கும் குறைவான அளவில் தூக்கத்தை மேற்கொள்கிறாரோ, அந்நபரின் உடலில் கார்டிசோல் அதிகம் வெளியிடப்பட்டு, கொழுப்புக்கள் அதிகம் தேங்க வழிவகை செய்துவிடும். மேலும் இது பசியுணர்சைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, உடல் எடை அதிகரிக்க வழிவகை செய்துவிடும்.
5. போதுமான அளவு நீர்
மனிதன் ஆரோக்கியமாக இருக்கவும், உயிர் வாழவும் தண்ணீர் மிகவும் இன்றியமையாது. முக்கியமாக உடல் எடையைக் குறைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கை வகிக்கிறது. உடல் நல்ல நீரேற்றத்துடன் இருந்தால் தான், உடல் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் மற்றும் வயிறு நிரம்பிய உணவு எழும் மற்றும் அதிகளவு கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும்.
வயிற்றில் கொழுப்புக்கள் ஏன் குவிகின்றன?
எனவே தொப்பையைக் குறைக்க கண்மூடித்தனமாக கண்ட வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக, முதலில் வயிற்றில் கொழுப்புக்கள் ஏன் குவிகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரது உள்ளுறுப்பு கொழுப்பு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இந்த வகை கொழுப்புக்கள் இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கின்றன. மேலும் ஒருவரது உடலில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை மிகவும் முக்கியமான காரணிகளாகும். தொப்பையைக் குறைக்க நினைக்கும் ஒருவர் இவற்றை சரிசெய்தாலே, ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமலேயே தொப்பையைக் குறைக்கலாம்.
What's Your Reaction?






