Protein தேவைக்கு தினசரி 2 முட்டைகள் மட்டும் போதுமா? ஆய்வு சொல்வது என்ன? - PROTEIN INTAKE
ஒருவரின் வாழ்க்கை முறையைப் பொறுத்து புரதத் தேவைகள் மாறுபடும். 70 கிலோ எடையுள்ள விளையாட்டு வீரருக்கு தினமும் 84 முதல் 140 கிராம் புரதம் தேவைப்படலாம்.

முட்டை புரதச்சத்தின் வளமான மூலமாகும். மனித உடலுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் முட்டையில் கிடைக்கின்றது. வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின், செலினியம் மற்றும் கோலின் என முட்டையில் காணப்படும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாடு, வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன.
முட்டை புரதத்திற்கான அடிப்படை ஆதாரமாக இருந்தாலும், இவற்றில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை என்பதால், புரதச்சத்திற்காக முட்டையை மட்டும் எடுத்துக்கொள்வது உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, ஒரு முழு முட்டையில் 6 முதல் 7 கிராம் புரதம் வீதம் என இரண்டு முட்டை எடுத்துக்கொண்டால் 12 முதல் 14 கிராம் புரதம் கிடைக்கின்றது.
ஆனால், இது போதுமானதாக இருப்பது இல்லை. அன்றாட புரதம் தேவைக்கான ஒரு பகுதியை மட்டுமே நிவர்த்தி செய்கிறது. சராசரி மனிதனுக்கு ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. உதாரணமாக, 70 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு குறைந்தது 56 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இது முட்டையில் இருந்து கிடைப்பது இல்லை.
ஒரு நபருக்கு எவ்வளவு புரதம் தேவை?: ஒருவரின் வாழ்க்கை முறையைப் பொறுத்து புரதத் தேவைகள் மாறுபடும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பவர்கள், ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அல்லது அதிக வளர்சிதை மாற்றம் தேவைகளைக் கொண்டவர்களுக்கு அதிக புரதம் தேவைப்படுகிறது. உதாரணமாக, விளையாட்டு வீரர்களுக்கு, ஒரு கிலோ உடல் எடைக்கு 1.2 முதல் 2.0 கிராம் புரதம் தேவைப்படுகிறது.
அதாவது 70 கிலோ எடையுள்ள விளையாட்டு வீரருக்கு தினமும் 84 முதல் 140 கிராம் புரதம் தேவைப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இரண்டு முட்டை அவர்களின் புரதத் தேவைகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பூர்த்தி செய்யும். இந்நிலையில், முட்டையுடன் இறைச்சி, மீன், பால், பருப்பு வகைகள் அல்லது தாவர அடிப்படையிலான புரத உணவுகள் மூலம் புரதத் தேவையை பெற முடியும். அதுமட்டுமல்லாமல், மற்ற ஊட்டச்சத்துகளையும் பெற முடியும்.
புரதம் உட்கொள்ளல் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இது பசியைக் கட்டுப்படுத்துவதோடு, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலமும், இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதன் மூலமும் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதால், முட்டையுடன் அதிக புரதம் கொண்ட மற்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
காலை உணவிற்கு இரண்டு முட்டைகள் போதுமா?: காலை உணவாக இரண்டு முட்டைகள் ஒரு திடமான புரத அடித்தளத்தை வழங்குகின்றன. ஆனால் உகந்த தசை பராமரிப்பு மற்றும் ஆற்றல் மட்டங்களுக்கு போதுமானதாக இருக்காது. புரத உட்கொள்ளலை அதிகரிக்க தயிர், சீஸ், முழு தானியங்கள் அல்லது நட்ஸ் போன்ற பிற புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் முட்டைகளை இணைப்பது சிறந்தது. அதிக புரதப் பொருட்களுடன் முட்டைகளை இணைப்பது நீடித்த ஆற்றல் அளவை உறுதி செய்கிறது, பசியின்மையைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த தசை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இருப்பினும், தினசரி இரண்டு முட்டை சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என பலரும் அச்சப்படுவார்கள். இந்நிலையில், முட்டையில் கொழுப்பு இருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அவை இரத்தத்தில் கொழுப்பின் அளவுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற குறிப்பிட்ட சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள், முட்டை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். மற்றவர்களை பொறுத்தவரையில், தினமும் இரண்டு முதல் மூன்று முட்டைகள் சாப்பிடுவது பாதுகாப்பானது என்கின்றனர்.
What's Your Reaction?






