தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் மற்றும் கார ரெசிபிக்கள் |Diwali Special Sweetum Kaaram Recipes in Tamil- உங்களுக்காக

பண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் விநியோகித்து, பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி முடிக்கும் சமயத்தில்... 'அடுத்த தீபாவளி சீக்கிரம் வந்துவிடாதா...’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு மற்றும் கார ரெசிபிக்கள். உங்கள் திருவிழா கொண்டாட்டங்களுக்கு சிறந்த சுவைகளை சேர்க்கும்! தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

Oct 21, 2024 - 19:35
Oct 21, 2024 - 19:36
 0  11

1. லட்டு

லட்டு

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

2. கடலைப்பருப்பு சுய்யம்

கடலைப்பருப்பு சுய்யம்

தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ

மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

3. மைசூர்பாகு

மைசூர்பாகு

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

4. காராபூந்தி

காராபூந்தி

தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

5. தேன்குழல்

தேன்குழல்

தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

6. ரவா லட்டு

ரவா லட்டு

தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை  - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

7. ஓமப்பொடி

ஓமப்பொடி

தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

8. பாதுஷா

பாதுஷா

தேவையானவை: மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு,  ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை:  உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து  இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து,  கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

9. காரா சேவ்

காரா சேவ்

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

10. ரஸ மலாய்

ரஸ மலாய்

தேவையான பொருட்கள்: 

  1. 1 லிட்டர் கொழும்பு நிறைந்த பால் (பனீர் செய்வதற்கு)
  2. 4 டேபிள் ஸ்பூன் வினிகர்
  3. 10-12குங்குமப்பூ
  4. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1 லிட்டர் பால்(ரபடி செய்வதற்கு)
  6. 1 கப் சர்க்கரை (ரபடி செய்வதற்கு)
  7. 1+1/2கப் சர்க்கரை (பாகிற்கு)
  8. 1/4 கப் பாதாம், பிஸ்தா, முந்திரி பொடியாக உடைத்தத 

செய்முறை:  முதலில் பாலை கொதிக்க வைத்து, வினிகருடன் சிறிது நீர் சேர்த்து பாலை திரிய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு கலந்து, மெலிதான டவலில் 2 மணிநேரம் வடிகட்டி, கெட்டியான பனீர் பெறலாம். பின்பு, பனீரை மெலிதாக தேய்த்து, உருட்டி தட்டவும். அகன்ற வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கொதிக்க வைத்து, பனீர் வடைகளை போட்டு, மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைக்கவும். பின்னர் பனீரை சுடுநீரில் போட்டு தண்ணீர் பிழியவும். இதே சமயம் பாலை கொதிக்கவிட்டு, பருப்பு வகைகளை 5 நிமிடம் வேக விடவும். பின் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து, பனீர் வடைகளை இப்பாலில் ஊறவைத்து, ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow