Top 10 tamil movies in 2024
தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டுப் புலம்பும் திரை ஆர்வலர்கள் இந்த ஆண்டு வாயை மூடிக்கொண்டார்கள்! ஏனென்றால், தமிழ் சினிமா இந்த ஆண்டில் அதிகமான, தரமான ஆக்கங்களைப் பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. குறிப்பாக, மனித உணர்வுகள் மிக நுணுக்கமாக மோதி, விலகி, இணையும் தருணங்களை எதிர்கொள்ளும் சாமானியக் கதை மாந்தர்களைப் பார்வையாளர்கள் அதிகமும் சந்தித்தனர். அவை புழங்கிய கதைக் களன்களும் அதற்குள் படைப்பாளிகள் கையாண்ட உள்ளடக்கமும் அவர்களின் மனதுக்கு நெருக்கமான, நிறைவான திரை அனுபவத்தைத் தந்தன. ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடிய, கொண்டாடத் தவறிய 2024இன் சிறந்த 10 திரைப்படங்கள், வகைமை சார்ந்து சிறந்து விளங்கிய படங்களின் பட்டியல் ஆகியவற்றைப் பார்ப்போம்.
1. லப்பர் பந்து
கிரிக்கெட்டை ஒரு மதம்போல் கொண்டாடும் இந்தியாவில் அந்த விளையாட்டின் பின்னணியில் துலங்கும் கிராமிய வாழ்க்கையைக் கதைக் களமாக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் தமிழரன் பச்சைமுத்து. அதற்குள் தனிமனித தன்முனைப்பு (ஈகோ), சாதிக்கு எதிரான அரசியல் எனச் சிக்கல்கள் முட்டி மோதும் இடங்களில் பொங்கும் உறவுகளின் உணர்வுத் தோரணங்களில் பார்வையாளர்கள் உருகிப்போனார்கள்.
திரைக்கதை நெடுகிலும் சூழ்நிலை நகைச்சுவை தெறித்து விழுந்தது. முதன்மை மற்றும் துணைக் கதாபாத்திரங்களை எழுதிய விதமும் பெண் கதாபாத்திரங்களுக்குத் தந்திருந்த முக்கியத்துவமும் இயக்குநரை ஒரு தேர்ந்த திரைசொல்லியாக அடையாளம் காட்டின. கதைக்குள் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகள் படமாக்கப்பட்ட விதமும் அவை தந்த அழுத்தமும் அசலான சிக்ஸர்கள்!
What's Your Reaction?