பெருந்தலைவர் காமராஜர் கட்டுரை

பெருந்தலைவர் காமராஜர் அல்லது நான் விரும்பும் தலைவர், கல்வி கண் திறந்தவர், தேசிய தலைவர் என்ற தலைப்பில் கட்டுரை, நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொன்னால் கீழுள்ளவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

Aug 6, 2023 - 19:38
Aug 6, 2023 - 19:39
 0  2210
பெருந்தலைவர் காமராஜர் கட்டுரை
பெருந்தலைவர் காமராஜர்
முன்னுரை:
செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்பச் செயற்கரிய செயல்கள் புரிந்து செயல் வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர்.பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பாரதப் 
பெருநாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராசர். தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர். 
தோற்றமும் இளமையும் :
              காமராசர் 1903, சூலை 15-ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார். தந்தை குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மையார். தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டார். தம் மாமாவின் கடையில் வேலை செய்தார். செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், அரசியலறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார். அவையே அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின. 
 
விடுதலைப் போரில் காமராசர் :
 
விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராசர். அண்ணல் காந்தி படிகளின் அறைகூவலை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்துகொண்டார். அண்ணலின் ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம், 1942-இல் நடந்த ஆகஸ்டுப் புரட்சி முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டார். தமது பன்னிரண்டாம் அகவையில் அடிமட்டத் தொண்டராய் அரசியலில் நுழைந்த காமராசர் 8 ஆண்டுகள் சிறையில் அல்லற்பட்டார். 
 
முதலமைச்சராய்க் காமராசர் ஆற்றிய 
கல்விப் பணிகள்:
 
செயல்வீரராய் விளங்கிய காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராய் விளங்கினார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்ற புகழ் பெற்றதாக இருந்தாலும் தமிழக மக்கள் அனைவரும் கற்றவராகவில்லையே என்று காமராசர் வேதனைப்பட்டார். அதனால், ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தார். கல்வியின் அருமை பெருமைகளை அறிந்திருந்த காமராசர் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களை உருவாக்கித் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு
அடிகோலினார்.
 
நாட்டுப்பணி :
 
தமிழகமெங்கும் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்வளத்தைப் பெருக்கினார்; நிலவளத்தை உயர்த்தினார்; நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்; மின் உற்பத்தியைப் பெருக்கித் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடையச் செய்தார்; ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வைப்பு நிதி ஆகிய முப்பெருந் திட்டங்களைக் கொண்டுவந்தார்.
 
படிக்காத மேதை :
 
ஆட்சி, கட்சி, பொதுவாழ்வு அனைத்திலும் கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர் காமராசர். எந்தச் சிக்கலையும் எளிதில் தீர்க்கும் அறிவுக் கூர்மை படைத்தவர். நான் பாடப் புத்தகத்தில் புவியியலைப் படிக்கவில்லை. ஆனால், நாட்டில் எத்தனை ஏரி குளங்கள் உள்ளன. அவற்றின் நீர்வளத்தை உழவுத் தொழிலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரியும்” என்று கூறுவார். இதனால், காமராசர் “படிக்காத மேதை” எனப் போற்றப்படுகிறார். 
 
காமராசரின் பண்புநலன்கள் :
 
காமராசர் உயர்பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர். காட்சிக்கு எளியவர்; சுருக்கமாய்ப் பேசுபவர்; செயலில் வீரர்; தமக்கென வாழாது நாட்டுக்காக வாழ்ந்த தியாகி; வாழ்நாள் முழுவதும் செல்வ வாழ்க்கையில் நாட்டமின்றி வாடகை வீட்டிலே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மலாவார். 
 
முடிவுரை :
 
எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப் பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்குகின்றார். அவரது வாழ்க்கைநெறி இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றத் தக்கதாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow