காதலிக்க நேரமில்லை விமர்சனம்
Kadhalikka Neramillai Movie Review in tamil
காதலிக்க நேரமில்லை விமர்சனம்
பெங்களூரில் வேலை செய்கிறார் சித்தார்த்(ரவி மோகன்). அவருக்கு நிச்சயதார்த்தம் நின்றுவிடுகிறது. காதலி செய்த துரோகத்தை நினைத்து வேதனையில் இருக்கிறார். இதையடுத்து திருமணம், குழந்தைகள் மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விடுகிறார்.
இந்நிலையில் சித்தார்த், அவரின் நண்பர்களான சேது(வினய்), கவுடா(யோகி பாபு) ஆகியோர் விந்தனுவை ஃப்ரீஸ் செய்வது குறித்து பேசுகிறார்கள். ஓரினச்சேர்க்கையாளரான சேதுவுக்கு தாயில்லாமல் குழந்தை பெற விருப்பம். தாயில்லாமல் குழந்தை எப்படி என கவுடா தயங்குகிறார். அவர்கள் மூன்று பேரும் பேசும் காட்சி முகம் சுளிக்கும்படி இல்லை. மிகவும் எதார்த்தமாக இருக்கிறது.
ஸ்ரேயாவோ(நித்யா மேனன்) தனக்கு துரோகம் செய்த கணவரை பிரிகிறார். அதன் பிறகு விந்தனு தானம் பெற்று தாயாக முடிவு செய்கிறார். அவர் செயற்கை முறையில் தாயாக முடிவு செய்து மருத்துவமனைக்கு செல்வதை மிகவும் லேசாக காட்டியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. விந்தனு தானம் பெற்று கர்ப்பமாகிறார். இந்நிலையில் வேலை விஷயமாக பெங்களூர் செல்லும் இடத்தில் சித்தார்த்தை சந்திக்கும் ஸ்ரேயாவுக்கு அவர் மீது ஃபீலிங்ஸ் வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
சரியான ஆட்களை தேர்வு செய்து காதலிக்க நேரமில்லை படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் கிருத்திகா. காதல் காட்சிகளில் ரவி மோகன் அசத்துகிறார். வினய் கொடூர வில்லனாக இல்லாமல் நல்ல நண்பனாக வந்திருப்பது ரசிக்க வைக்கிறது. நித்யா மேனன் வழக்கம் போன்று அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஸ்ரேயா என்பது வெறும் கதாபாத்திரம் என தெரிந்தும் கூட அவருக்காக நம்மை கவலைப்பட வைக்கிறார்.
நிச்சயதார்த்தம் அன்று திருமணத்தை நிறுத்தும் பெண், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் மற்றொரு பெண் என கதாபாத்திரங்கள் துணிச்சலை காட்டுகிறது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க முடிந்தாலும் படம் முடியும் போது யாரும் எதிர்பார்க்காதது நடக்கிறது. திரைக்கதையில் மைனஸ் இருந்தாலும் அதை மறக்க வைத்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
காதலிக்க நேரமில்லை- சந்தோஷமாக பார்க்கலாம்
What's Your Reaction?