பால் குடித்தால் உடல் எடை குறையுமா, அதிகரிக்குமா? ஆய்வில் வெளியான பதில் இதோ! - MILK HELPS IN WEIGHT LOSS
உடல் எடையை குறைத்த பிறகு, உணவில் அதிக பால் பொருட்களை உட்கொள்பவர்களின் எடை திறம்பட கட்டுப்படுத்தப்படுவதாகவும், இடுப்பு சுற்றளவும் குறைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம்மில் பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறோம். உடற்பயிற்சியுடன் கூடுதலாக, பல்வேறு உணவு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, எடையை குறைக்க நினைப்பவர்கள், உணவுக் கட்டுப்பாடில், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாமா? சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து உட்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், உடல் எடையை குறைக்க பால் குடிக்கலாமா? கூடாதா? என்ற கேள்விகளும், பால் குடித்தால் எடை அதிகரிக்கும் என்ற கருத்துகளும் பரவி வருகின்றது.
ஆனால், பால் உண்மையில் எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் நிபுணர்கள் . 2019 ஆம் ஆண்டு ஜெர்னல் நியூட்ரிஷன் (Journal Nutrition) இதழில் பால் நுகர்வு மற்றும் எடை இழப்பு என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் பால் எடை இழப்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது.
தசை குறையாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், உணவில் அதிக புரதச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பாலில் உள்ள அதிகப்படியான புரதம், உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. தினசரி உண்ணும் உணவில், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு கிளாஸ் பசும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
- கலோரி - 122 கிராம்
- புரதம் - 8.23 கிராம்
- கார்போஹைட்ரேட் - 12 கிராம்
- கொழுப்பு - 4.66 கிராம்
- கால்சியம் - 309 மில்லிகிராம்
- மெக்னீசியம் - 29.4 மில்லிகிராம்
- பொட்டாசியம் - 390 மில்லிகிராம்
- துத்தநாதம் (Zinc) - 1.05 மில்லிகிராம்
- ஃபோலேட் - 4.9 மைக்ரோ கிராம்
- கோலைன் - 44.6 மில்லிகிராம்
- வைட்டமின் பி12 - 1.35 மைக்ரோ கிராம்
- வைட்டமின் ஏ - 203 மைக்ரோ கிராம்
- வைட்டமின் டி - 111 ஐயு (International Units)
இருப்பினும், பசும் பாலில் உள்ள கொழுப்பு எடையை அதிகரிக்கும் என பலர் கூறுவதற்கு, பசு மற்றும் ஆட்டுப் பால் மட்டுமின்றி, தேங்காய் பால் போன்ற தாவர அடிப்படையிலான பாலிலும் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ( skimmed milk) குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்.
பாலில் உள்ள கொழுப்பு மற்றும் அதீத புரதம், வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுவதாக ஆய்வு கூறுகிறது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை (lactose intolerant) இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைத்தால் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
What's Your Reaction?