நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு
Nellaiappar Kovil yanai death

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு
- யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர்.
- யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 56 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உள்ளது.
வயது முதிர்வு காரணமாக இந்த யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக யானை கீழே படுத்து உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென்று கீழே படுத்தது. ஆனால் அதன் பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை.
யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதுகுறித்து பாகன்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை தலைமை டாக்டர் முருகன், நெல்லை வனகால்நடை டாக்டர் மனோகரன், மதுரை வனகால்நடை டாக்டர் கலைவாணன், நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் செல்வமணிகண்டன், நெல்லை வனச்சரகர் சரவணகுமார் ஆகியோர் உடனடியாக கோவிலுக்கு வந்து யானையை பார்வையிட்டனர். இந்த மருத்துவ குழுவினர் யானையின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலையில் 2 பெரிய கிரேன்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினார்கள்.
சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது.
யானையை எழ வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.
What's Your Reaction?






