செல்வமகள் சேமிப்பு திட்டம்... கணக்கு தொடங்க வேண்டுமா? மூன்று நாள் சிறப்பு மேளா!
Selvamagal Semippu thittam news in tamil

செல்வமகள் சேமிப்பு திட்டம்... கணக்கு தொடங்க வேண்டுமா? மூன்று நாள்
சிறப்பு மேளா!
பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக இருக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக மூன்று நாள் சிறப்பு மேளா வருகின்ற 21, 28 மற்றும் மார்ச்,10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரித்தி எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பத்து வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெண்குழந்தைகளுக்கென கணக்கை தொடங்கலாம்.
ஒரு பெண் குழந்தைக்கு ஒரு செல்வமகள் கணக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். குழந்தைகளின் பெற்றோர்கள் அதிக பட்சமாக தங்களின் இரு பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் கணக்குகளைத் தொடங்கலாம்.
அதேபோல, இரட்டை பெண் குழந்தைகள் அல்லது ஒரே சமயத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் அதிக கணக்குகள் தொடங்க விதிவிலக்கு தரப்படும். செல்வமகள் கணக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பதும் கூடுதல் வசதியாக இருக்கும்.
தபால் நிலையங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வங்கிகளிலும் செல்வமகள் கண்ணகை பெற்றோர்கள் தொடங்கலாம். குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை ஒரு நிதியாண்டில் கணக்கில் செலுத்தலாம். தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 8.2% வட்டி அளிக்கப்படும்
வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை இதில் கிடைக்கப்பெறும். இந்த திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகள் தங்களது உயர் கல்விக்காக, 18 வயது அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு 50 % தொகை எடுக்க அனுமதி இருக்கிறது. அதே போல 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு திருமணத்திற்காக கணக்கில் இருந்து தொகையை எடுக்கலாம். 15 ஆண்டுகாலம் முதலீடு காலமாகவும், 21 ஆண்டு முதிர்ச்சி காலமாகவும் இருக்கிறது.
தற்போது இந்த திட்டத்தில் கீழ் வரும் பிப்ரவரி 21, 28 மற்றும் மார்ச், 10 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு மேளா நடக்கவிருக்கிறது. அஞ்சலகங்களில் இதற்கென சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும். சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ் சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சிறப்பு மேளா நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், ரூ.8,351 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது.
What's Your Reaction?






