மீன் வளர்ப்புக்கு தெர்மாகோல் பெட்டி, பிளாஸ்டிக் டப் போதும்; கண்ணாடி தொட்டி அவசியமில்லை
எல்லோருக்குமே அழக அழகான வண்ண வண்ண நிறங்களில் மீன்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கண்ணாடி தொட்டி, மோட்டார் செட், மின் செலவுகளை கணக்கிட்டு மீன் வளர்ப்பதை தவிர்ப்போம். மீன் வளர்ப்பதற்கு கண்ணாடி தொட்டிக்கு பதிலாக பலவற்றை பயன்படுத்தலாம். சொல்லப்போனால் கண்ணாடி தொட்டியை விட மீன் நன்றாக வளர்வதற்கு மாற்று இடங்கள் உள்ளன.

சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீட்டில் ஆர்வமுடன் வீட்டில் வளர்க்க கூடிய உயிரினங்களில் மீன்களும் ஒன்று. சிலர் வாஸ்து பார்த்து மீன் வளர்ப்பவர். பெரும்பாலானோர் ஆசைக்காகவும், வீட்டில் அழகாக காட்சிப்படுத்தவும் மீன் வளர்ப்பார்கள். துருதுருவென நீந்தி விளையாடும் மீன்களை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நாமும் வீட்டில் மீன் வளர்க்கலாம் என்ற ஆசை இருக்கும். எனினும் மீன் வளர்ப்பு என்றால் கண்ணாடி தொட்டியை மட்டுமே பயன்படுத்த நினைக்கிறோம். கண்ணாடி தொட்டி இன்றி மாற்று வழிகளிலும் மீன் வளர்க்கலாம். கண்ணாடி தொட்டியில் மீன் வளர்த்தால் எளிதில் பார்க்க முடியும், அழகை ரசிக்கலாம் என கருதுகிறோம். இது உண்மை என்றாலும் கூட தெர்மாகோல் பெட்டி, டீ கடையில் உள்ள பிஸ்கட் பாட்டில் ஆகியவற்றிலும் நன்றாக மீன் வளர்க்க முடியும். கண்ணாடி தொட்டியை தவிர்த்து வேறு வழிகளில் மீன் வளர்ப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தெர்மாகோல் பெட்டி
தெர்மாகோல் பெட்டி எளிதில் கிடைக்ககூடியது. கப்பல்களில் உணவுகளை பதப்படுத்தி அனுப்ப தெர்மாகோல் பெட்டி பயன்படுத்துவார்கள். சதுரம், செவ்வக வடிவங்களில் கிடைக்கும் தெர்மாகோல் பெட்டியில் அரை அடி நீளமுள்ள பெரிய பெரிய மீன்களை வளர்க்கலாம்.
தண்ணீர் பாட்டில்
ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டிலில் மாலி, தங்க மீன், கப்பி மீன்கள் ஆகியவற்றை வளர்க்க முடியும். நிறைய பேர் பைட்டர் மீனை தண்ணீர் பாட்டில் வளர்ப்பது உண்டு.
குளிக்கும் பிளாஸ்டிக் டப்
100 ரூபாய்க்கு கிடைக்கும் பிளாஸ்டிக் டப்பில் 5 செ.மீ நீளமுள்ள பல வகையான மீன்களை வளர்க்க முடியும். மேல் புறத்தில் இருந்து மட்டுமே மீன்களை காண முடியும். எனினும் கற்கள் போட்டு சிறிய குளம் கூட அமைக்கலாம். பச்சைப்பாசி வளர்வதற்கு பக்கெட் உதவும். இதை மீன்கள் சாப்பிட்டு நன்கு வளரும்.
பெயிண்ட் பக்கெட்
மீன் நீந்துவதற்கு ஏதுவாக பெயிண்ட் பக்கெட் உதவும். இதில் கப்பி மீன்கள் வளர்க்க முடியும். அவற்றின் இனப்பெருக்கமும் அதிகரிக்கும்.
ஃபிரிட்ஜ் அக்குவாரியம்
பழைய பயன்படுத்தாத அல்லது பழுதான ஃபிரிட்ஜ் இருந்தால் அவற்றை அக்குவாரியமாக மாற்றி மீன்கள் வளர்க்க முடியும். இதில் மோட்டார் அமைத்து சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வளர்க்க இயலும்.
பலருக்கும் சிமெண்ட் தொட்டியில் மீன் வளர்க்கலாமா என்ற சந்தேகம் உள்ளது. மீன் கடைகளில் காட்சிக்காக மட்டுமே கண்ணாடி தொட்டியில் வைக்கிறார்கள். அவை கொண்டு வரப்படும் இடம் அனைத்துமே சிமெண்ட் தொட்டி தான். ஓரளவு வெளிச்சமுள்ள இடத்தில் சிமெண்ட் தொட்டி வைத்து அதில் மீன்களை பெருக்கி அதிலிருந்து கடைக்கு மீன் அனுப்புவார்கள்.
தண்ணீர் கேன், சிறிய பவுல் ஆகியவற்றில் மோட்டார் இன்றி மீன் வளர்க்க முடியும்.
What's Your Reaction?






