திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வரலாறு (History of Tirunelveli Iruttukadai Halwa)

Jul 31, 2023 - 14:09
Jul 31, 2023 - 14:08
 0  167
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வரலாறு (History of Tirunelveli Iruttukadai Halwa)

திருநெல்வேலியில் உள்ள இருட்டுக்கடை என்னும் அல்வா கடை உலக புகழ் பெற்றதாகும். இருட்டுக்கடை அல்வா என்றாலே உள்ளூர் மக்கள் முதல் வெளியூர் மக்கள்வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறி விடும். அந்த அளவுக்குப் பிரசித்தி பெற்ற இந்த இருட்டுக்கடையானது நெல்லை மாநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய பாடல் பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே அமையப்பெற்றுள்ளது. தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து செயல்பட்டு வரும் இந்த இருட்டுக்கடை பற்றியும், அதன் சுவைமிக்க அல்வாவை பற்றியும் சுவாரசியமான பல தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

இருட்டுக்கடை வரலாறு:(Tirunelveli Iruttukadai Halwa History)

ஏறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அசல் திருநெல்வேலி அல்வா கடை, உலகெங்கிலும் உள்ள மக்களால் “இருட்டுக்கடை” என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறது. முன்னர் இந்தியாவின் வட மாநிலத்திலிருந்து வணிகம் செய்வதற்காகத் தமிழகத்தின் தென்பகுதியான திருநெல்வேலிக்கு வந்த ராஜஸ்தானை சேர்ந்த சிங் குடும்பத்தினர், அவர்கள் ஊரின் அல்வாவை இங்குத் தயார் செய்துள்ளார்கள்.

அவ்வாறு தயார் செய்யப்படும் அல்வா இங்குப் பாயும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரின் சுவையால், அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது. இதனையே நாம் ஒரு வணிகமாக மாற்றி அல்வாவை செய்து விற்பனை செய்தால் என்ன என்று யோசித்த அந்தக் குடும்பத்தினர் தொடங்கிய கடை தான் இந்த "இருட்டு கடை" என்று கூறுகிறார்கள்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்(About Tirunelveli Iruttukadai Halwa owner):

இருட்டுக்கடை அல்வா ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் முதன் முதலாகத் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. இந்த இருட்டுக்கடை மிகவும் பழமையான கடை ஆகும். இந்தக் கடையானது பெயருக்கு ஏற்றால் போல இருட்டான சூழ்நிலையில் தான் இன்று வரை செயல்படுகிறது. பழைய காலத்து நாற்பது வாட்ஸ் குண்டு பல்பு தான் இன்று வரை கடையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கடையின் அல்வா உலகளவில் பிரபலமாக இருந்தாலும் பழமை மாறாமல் பழைய மரத்தால் ஆன பழைய அடைப்பு கதவுகளை கொண்டுதான் கடை செயற்பட்டு வருகிறது.. இங்குத் தினமும் உற்பத்தியாகும் அல்வாக்கள் சிலமணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன.

குடும்பமாகச் செயல்பட்டு இந்தக் கடையை நிர்வகித்து வரும் இவர்கள், இந்த அல்வா தயார் செய்ய எந்தவிதமான நவீன இயந்திரங்களையும் பயன்படுத்துவதில்லை. தங்கள் குடும்பத்தைச் சேராத வேறு யாரையும் பணியில் அமர்த்தவில்லை. கோதுமையை ஊறவைத்து பால் எடுக்க இன்றும் பழைய உரலையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அல்வாவில் கோதுமை, நெய், சர்க்கரை தவிர வேறு எந்தவிதமான பொருட்களோ, ரசாயன நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை. இதெல்லாம் கூட இந்த அல்வாவின் சுவை மாறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடை பழைய பாரம்பரிய முறைப்படி இன்னும் அதே பழைய கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இங்குப் பயன்படுத்தப்படும் பணத் தட்டில் தொடங்கி அல்வா சுமந்து செல்லும் கொள்கலன்கள் வரை அனைத்தும் பழைய பாரம்பரியம் மிக்கவையே என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டுக்கடை அல்வா என்ற பெயர் காரணம் (The Reason for the Name is Iruttukadai Halwa)

இருட்டு கடை என ஆரம்பித்த சமயத்தில் ஒரே ஒரு விளக்கு மட்டும் பயன்படுத்தி வந்தனர். மாலை வேளை என்பதால் ஒரு காண்டா விளக்கு இருந்தாலும் கடை இருட்டாகத்தான் இருந்துள்ளது. கடை இருட்டாக இருந்த காரணத்தால் இந்த கடைக்கு இருட்டுகடைஅல்வா என்று அழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது இந்தக் கடை சாயும் சாயங்காலம் சுமார் 5.30 மணிக்கு மேல் திறக்கப்படும். இரவில் மட்டுமே இந்த அல்வாக் கடையில் அல்வா கிடைக்கும் என்பதால் இருட்டுக்கடை அல்வா என்ற வழக்கச்சொல்லாகவும் அமைந்துவிட்டது.

பாரம்பரியத்துடன் நடத்தப்படும் இருட்டுக்கடை அல்வா

பாரம்பரியத்துடன் நடத்தப்படும் இந்தக் கடைக்கு எனத் தனி ரசிகர்கள் வட்டமே உள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்தக் கடைக்கு எனப் பெயர் பலகை கூடக் கிடையாது.

திருநெல்வேலிக்கு வருகை தரும் வெளியூர் அன்பர்கள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள், நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உட்படஏராளமான மக்கள் இருட்டுக்கடை அல்வா
கடையை தேடி வருகின்றனர். இந்தப் பெயர் பலகை கூட இல்லாத கடையில் இன்றும் வந்து அல்வா வாங்குவதற்காக வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.. ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே திறந்திருக்கும், சுமார் 5.30 மணிக்கு மேல் திறக்கப்பட போகும் இந்தக் கடையை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள் பலர் பல மணி நேரம் முன்பே வந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் காணமுடிகிறது.

பரபரப்பான கீழ ரத வீதியில் கூட்டத்தைப் பார்த்து வெளியூர் மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்குச் சாலையின் ஓரத்தில் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் அல்வா வாங்க இங்கு வாடிக்கையாளர்கள் குவிந்து விடுவதால், அவர்களை ஒழுங்குபடுத்த காவலர்கள் கூடப் பாதுகாப்புக்கு நிற்பார்கள். தினமும் மாலை வேளையில் மட்டுமே திறக்கப்படும் இந்தக் கடைக்குத் திருநெல்வேலியில் வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.. தினமும் பாரம்பரியம் மாறாமல் ஒரே அளவு அல்வா தயார் செய்யப்படுவதால், கூட்டத்தைப் பொறுத்து அல்வா சீக்கிரமே விற்று தீர்ந்து விடும்.

அன்று முதல் இன்று வரை ஒரே தரமான இருட்டுக்கடை அல்வா

கூட்டம் அதிகம் வருகிறதே என்பதற்காக மாற்றிக்கொள்ளாமல் அல்வா தயார் செய்யும் அளவை குறைத்தல் கூட்டல் என இல்லாமல் ஒரே அளவு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படாமல், அன்று முதல் இன்று வரை தரத்தை மட்டுமே தங்களின் அடையாளமாகக் கொண்டு இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. தரமான மற்றும் சுவையான திருநெல்வேலி அல்வாவை வழங்கி வரும் இந்த இருட்டுக்கடை நிறுவனத்திற்கு ஜனாதிபதியின் விருதும் கிடைத்துள்ளது. அல்வாவில் எவ்வித மாற்றமும் இல்லாமல், புதுமைகளைப் புகுத்தாமல் ஒரே தரமான கோதுமை அல்வாவை மட்டுமே பயன்படுத்தி வியாபாரம் செய்து வருகிறார்கள் என்பதால் புகழ் மாறாமல் இன்று வரை நிலைத்து இருக்கிறது. .இந்தக் கடையின் அல்வாவின் சுவைக்கு இங்குப் பாயும் தாமிரபரணி தண்ணீரும் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருட்டு கடை தயாரிக்கும் ஒரே தயாரிப்பு கோதுமை அல்வா மட்டுமே. "அல்வாவை எப்பொழுதும் அதன் தூய்மையான வடிவத்தில்" தரமானதாக அன்று முதல் இன்று வரை வழங்கி வருகிறார்கள். இவர்கள் தயாரிக்கும் அல்வாவின் சுவையில் மாற்றம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் இவர்கள், அல்வாக்களில் முந்திரிப் பருப்புகள் கூடப் பயன்படுத்துவதில்லை. கோதுமை, சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றால் மட்டுமே இன்று வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

அல்வாவுடன் புதிதாக ஏதாவது பொருட்களைச் சேர்ப்பது என்பது , அல்வாவின் உண்மையான சுவைக்குத் தடையாக இருக்கும் என்று கடை உரிமையாளர்கள் இன்று வரை கருதுகின்றனர். இதனால் தான் அன்று முதல் இன்று வரை இந்த இருட்டு கடை அல்வாவின் சுவை மாறாமல் நமக்குக் கிடைக்கிறது. இந்த இருட்டுக்கடை தவிர திருநெல்வேலியில் சுவைமிக்க அல்வாவை விற்பனை செய்யும் கடைகளாகச் சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி விலாஸ், சந்திர விலாஸ் போன்ற பாரம்பரிய கடைகளும் உள்ளன. எனினும் அந்தக் கடை அல்வாக்கள் வேறுவித தனி சுவையுடன் இருக்கும். அதனால் இருட்டுக்கடை அல்வா என்றும் தனி பவுசுடன் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

இங்கு நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருட்டு அல்வாகடைவின் வாடிக்கையாளர்கள் ஆகவும் மாறிவிடுகின்றனர். இதுதவிர உள்ளூர் மக்களும் பலர் தினமும் வந்து இங்கு 100 கிராம் அல்வாவை சூடாக வாழை இலை துண்டில் வாங்கி சுவைத்து மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரை முகம், சுளிக்காமல் 100 கிராம் அல்வாவை துண்டு போட்டு வாழை இலையில் வைத்துத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்முகத்துடன் அளித்து வருவது என்பது உரிமையாளருக்கே உள்ள தனி சிறப்பு. இத்தனை சிறப்புகள் மிக்க இந்தத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே…!!!

திருநெல்வேலி அல்வாவின் ரகசியம் ( Secret of Tirunelveli Halwa)

இருட்டுக்கடை அல்வா என்பது கோதுமை சர்க்கரை மற்றும் நீங்கள் சரியான அளவில் செய்யப்படுகிறது மற்ற எந்த இடத்தில் அல்வா வாங்கினாலும் திருநெல்வேலி அல்வாவின் சுவையே நீங்கள் தர முடியாது அதற்கு முக்கியமான ரகசிய காரணம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாபநாசம் முதல் அம்பாசமுத்திரம் வரை பாய்ந்தோடி வரும் வற்றாத தாமிரபரணி நீரின் சுவையில் அல்வா தயார் செய்யப்படுகிறது.

இருட்டுக்கடை அல்வா திறப்பதற்கான நேரம் (Iruttukadai Halwa Shop Opening Time)

தினமும் மாலை 5.30 மணிக்கு இந்த கடை திறக்கப்படுகிறது.ஆனால் மக்கள் நாலு மணியிலிருந்து கடைக்கு முன்பாக வரிசையில் நிற்க தொடங்கிவிடுகின்றனர்.எட்டு மணிக்கு முன்பாக அல்வா முழுவதும் விற்று தீர்ந்து விடும்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு எப்படி அடைவது (How to Reach Tirunelveli Iruttukadai Halwa shop)

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில்தான் இடதுபுறத்தில்  கடை அமைந்துள்ளது. நெல்லையப்பரை தரிசித்து முடித்தபிறகு கடையில் அல்வா வாங்கி கொண்டு ஆறு மணிக்கு புறப்பட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டால் நமக்கு தெய்வத்தின் ஆசியோடு சேர்த்து அல்வாவையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பலாம்.

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் எண் 12 63 32 ல் பயணம் செய்யலாம். மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடை திறந்து இருப்பதால் அதை மனதில் கொண்டு நேரத்திற்கு முன்பாக சென்றால் மட்டுமே இருட்டுக்கடை அல்வாவை நாம் பெற முடியும்.. சிலசமயம் ஏழு மணிக்கெல்லாம் அல்வா விற்று தீர்ந்து விடும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.