தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கோலாகல கொடியேற்றம்.. ஆகஸ்ட் 5ல் தங்கத் தேரோட்டம்

தூத்துக்குடி: உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441 வது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.

Jul 26, 2023 - 10:51
Jul 26, 2023 - 10:50
 0  11

தூத்துக்குடி: உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441 வது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


                                   தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

 இந்த ஆண்டு 441வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடந்தது. தொடர்ந்து ஆலயம் எதிரே அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது.

                              இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக 10ஆம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும். கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் வெளிநாட்டு, வெளிமாநில இறைமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான குமார் ராஜா "தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது.

தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார். பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பனிமய மாதா சப்பரபவனி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொடியேற்றம் மற்றும் திருவிழாவினை முன்னிட்டு ஆலயம் மற்றும் வளாகப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow