காரசார பூண்டு சட்னி செய்முறை - Tamil Recipe
Tamil recipe
காரசார பூண்டு சட்னி செய்முறை
காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதும், வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் வேலைக்கு கிளம்புவது என்று காலையில் அனைவரின் இல்லங்களிலும் பரபரப்பாக வேலை நடக்கும். இந்த பரபரப்பான சூழலில் காலையில் டிபன் செய்யும் பொழுது அந்த டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு என்ன செய்வது என்ற போராட்டம் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஒருநாள் செய்ததை திரும்பவும் மறுநாள் செய்தால் போர் அடிக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் போர் அடிக்காமல் ஒருமுறை செய்து வைத்த சட்னியை ஒரு மாதம் வரை வைத்துக் கூட சாப்பிட முடியும். அந்த அளவிற்கு அதன் சுவையில் மெய்மறந்து போய் விடுவார்கள். அந்த அப்படிப்பட்ட ஒரு சட்னி பற்றி தான் இப்பொழுது இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
-தேவையான பொருட்கள்
பூண்டு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
பெரிய வெங்காயம் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு உளுந்து – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை முதலில் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக காய்ந்த மிளகாயின் காம்புகளை ஆய்ந்து அதையும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். புளியில் இருக்கக்கூடிய கொட்டை தூசுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து அதை நான்கு ஐந்தாக நறுக்கி அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பை போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக நைசாக அரைக்க வேண்டும். - Advertisement - நன்றாக அரைத்த பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் மட்டும்தான் இதற்கு ஊற்ற வேண்டும். அப்பொழுதுதான் இதன் சுவை நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு உளுந்து போடவேண்டும். கடுகு நன்றாக வெடித்ததும் வெந்தயத்தை போட வேண்டும். வெந்தயம் நன்றாக சிவந்து மனம் வர ஆரம்பிக்கும். பிறகு கருவேப்பிலையை போட்டு அரைத்து வைத்திருக்கும் பூண்டு சட்னியை அதில் ஊற்றி விட வேண்டும். குறைந்த தீயில் வைத்து அந்த எண்ணெயிலேயே பூண்டு சட்னி வேக வேண்டும். பச்சை வாடை முற்றிலும் நீங்கி அதன் நிறம் மாறி வற்ற வேண்டும். இது கிட்டத்தட்ட ஊறுகாய் பதத்திற்கு இருக்க வேண்டும். இப்படி எண்ணெய் தனியாக பிரிந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் பூண்டு சட்னி தயாராகிவிட்டது.
இந்த பூண்டு சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாத வகைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நாம் தண்ணீர் ஊற்றாமல் செய்வதால் இது கெட்டுப் போவதற்குரிய வாய்ப்புகளே இல்லை என்பதால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதையும் படிக்கலாமே:தேங்காய் கொத்தமல்லி சட்னி இந்த அவசர உலகத்தில் கடைகளில் இருந்து இதுபோன்ற பொருட்களை வாங்காமல் வீட்டிலேயே நம் கை பட ஒரே ஒரு நாள் மட்டும் செலவு செய்து தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். ஒரு மாதம் வரை எந்த வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
What's Your Reaction?