Walking vs Cycling: நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்... எடை குறைப்புக்கு எது சிறந்தது?
அதிக எடை பல நோய்களுக்கு மூல காரணமாக இருக்கலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலர் இந்த பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இது இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்கும். அதனால் தான் ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு உடற்பயிற்சி அவசியம்.
சமீப காலங்களில் மக்கள் குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது தற்போது மிகவும் பிரபலமாகி வரும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பாரம்பரிய உடற்பயிற்சி முறைகளுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இவை இரண்டும் உடலில் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், எடை குறைப்புக்கு இவற்றில் எது சிறந்தது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியின் முக்கிய பயிற்சிகளில் ஒன்றாகும். இதற்கு உங்களுக்கு தேவையானது ஒரு நல்ல ஜோடி ஷூக்கள் மட்டுமே. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வது உங்கள் தோரணை, முதுகுவலி மற்றும் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவுகிறது. மேலும், நடைப்பயிற்சி ஆனது உங்கள் சகிப்புத் தன்மையை மேம்படுத்துகிறது.
சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள்
சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இது முழு உடலின் தசைகளிலும் வேலை செய்கிறது. சைக்கிள் ஓட்டுதல் தசை வலிமையை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. அத்துடன் உடல் கொழுப்பையும் எரிக்கிறது. இதுதவிர உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
சைக்கிள் ஓட்டுதலின் குறைவான தாக்கம் உங்கள் மூட்டுகளில் அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது முழங்கால் அல்லது இடுப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. சகிப்புத்தன்மையை மேம்படுத்த விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இதயம் மற்றும் நுரையீரலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் தொடை எலும்புகளுக்கு நன்மை அளிக்கிறது.
நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல்: எது சிறந்தது?
சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி இவை இரண்டும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சிறந்த உடற்பயிற்சி என்றாலும், உடல் எடையை குறைக்க உதவுவதில் இவை இரண்டிற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றை ஒப்பிடுகையில், சைக்கிள் ஓட்டுதல் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. நடைப்பயிற்சியானது நீண்ட காலத்திற்கு உங்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதே சமயம், எடை குறைப்பு உங்கள் இலக்காக இருந்தால், சைக்கிள் ஓட்டுதல் சிறந்த தேர்வாகும்
நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது, சைக்கிள் ஓட்டுவதால் முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகள் குறைவாகவே தேய்கின்றன. குறைந்த தாக்கம் காரணமாக நடைப்பயிற்சி உடன் ஒப்பிடும்போது அதிக நேரம் சைக்கிள் ஓட்டலாம். நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் இரண்டும் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆனால் நடப்பது சிறந்ததா? அல்லது சைக்கிள் ஓட்டுவது சிறந்ததா? என்பதை அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்யலாம்.
What's Your Reaction?