தென்காசி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கனவை நிறைவேற்றி, விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றார்

விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற, பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் கனவுகளை நனவாக்க முன்வந்தார்.

Jan 21, 2025 - 14:35
Jan 21, 2025 - 14:34
 0  3
தென்காசி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கனவை நிறைவேற்றி, விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றார்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் மைக்கேல் ராஜ். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் 5-ம் வகுப்பு பாடம் நடத்தும்போது மாணவ- மாணவிகளிடம் சாதாரணமாக உங்களின் விருப்பம் என்னவென தலைமையாசிரியர் மைக்கேல் ராஜ் கேட்டதற்கு, 'விமானத்தில் செல்ல வேண்டும்' என மாணவர்கள் பதில் கூறியுள்ளனர். மாணவர்கள் விளையாட்டாக கூறிய பதிலையே அவர்களின் வாழ்வில் மெய்ப்பட நிரூபித்து காண்பித்து மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர், "எங்கள் பள்ளியில், ரைட் சகோதரர் பற்றிய பாடத்தை 5-ம்வகுப்பு மாணவர்களுக்கு நடத்திக்கொண்டிருந்தேன். ரைட் சகோதரர்களின் விருப்பம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை குறித்து விளக்கி பேசுகையில், மாணவர்களிடம் பொதுவாக உங்களுக்கு என்ன ஆசை உள்ளதென கேட்டேன். அப்போது 'நாங்களும் விமானத்தில் பறக்க வேண்டும், எங்களை அழைச்சிட்டு போக முடியுமா?' என வாஞ்சையோடு கேட்டனர். இதனை தொடர்ந்து, பல வகுப்புகளிலும் இதுபற்றி விவாதித்தோம். விமானப்பயணம் மாணவ மாணவிகளுக்கு நிறைவேறாத ஏக்கத்தை தந்து அது படிப்பில் பிரதிபலித்து விடக்கூடாது என்ற எண்ணம் என்னுள் ஆழமாக பதிந்தது. ஆகவே, மாணவ மாணவிகளை அவர்களின் விருப்பப்படியே விமானத்தில் அழைத்துச் செல்வதென முடிவு செய்தேன்.

இதுபற்றி பள்ளியின் மற்ற ஆசிரியர்களிடமும் கருத்துகளை கேட்டேன். அனைவருமே இந்த திட்டத்திற்கு முழு சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து விமானத்தில் எங்கு பயணம் செய்யலாம் எங்கெங்கு சுற்றிப் பார்க்கலாம் என விவாதித்தோம். ஒருவழியாக, மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

அங்கு பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, மெரீனா பீச், அறிவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று இதை கல்வி சார்ந்த சுற்றுலாவாகவும் மாற்றத் திட்டம் வகுத்துக் கொண்டோம். இதனைத் தொடர்ந்தே மாணவ மாணவிகளிடம் பயணத்தை உறுதிசெய்து தகவல் தெரிவித்தோம். இதைக்கேட்டு உற்சாகமடைந்த மாணவ மாணவிகள் விமானத்தில் பயணம் செய்வதை எதிர்நோக்கி ஆர்வமாகினர். இந்த ஆர்வத்தால் படிப்பிற்கு எந்த குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவருக்கும் சிறியதாக டாஸ்க் கொடுத்தோம்.

யாரெல்லாம் ஒன்று முதல் 20 வரையும் 16-ம் வாய்ப்பாடு வரையும் முழுவதுமாக மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார்களோ அவர்களை விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினோம். இதை சொன்னநாள் முதலே மாணவர் மாணவிகள் குஷியாகி போட்டிப்போட்டு வாய்ப்பாடு படிக்க ஆரம்பித்தனர். ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 20 பேருமே ஒன்று முதல் 16ஆம் வாய்ப்பாடு வரை முழுவதுமாக படித்து ஒப்புவித்தனர். முன்னதாக, மாணவர்களுக்கு இந்த டாஸ்க் கொடுப்பதற்கு முன்னதாகவே அதாவது 3 மாதத்திற்கு முன்பாகவே, அனைவரையும் அழைத்துச்செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்கள் 20 பேர், ஆசிரியர்கள் 8 பேர் என 28 பேர் சென்னை செல்வதற்கு இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்து விட்டேன். இருப்பினும், சுற்றுலாவை எதிர்பார்த்து பள்ளி நாள்களை வீணாக்கிவிடக் கூடாது என்பதற்காக வாய்ப்பாடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதையும் மாணவர்கள் சரியாக செய்து முடித்த திருப்தியோடு அவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல தயாரானோம்.

திட்டமிட்டப்படி நேற்று அதிகாலை அனைவரையும் ரயில் மூலமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அழைத்து வந்தோம். அங்கிருந்து, விமான நிலையத்திற்கு வேன் பயணம். இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானத்தின் மூலம் சென்னைக்கு புறப்பட்டோம். சென்னை வந்து சேர்ந்ததும், இரண்டு வேன்களை வாடகைக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் திட்டத்தை செயல்படுத்தினோம்.

எங்கள் முதல்நாள் திட்டத்தின் படி பிர்லா கோளரங்கம், செம்மொழிப் பூங்கா, மெரினா பீச் ஆகியவற்றை பார்த்தாயிற்று. இரண்டாம் நாளில் வள்ளுவர் கோட்டம் பார்க்க புறப்பட்டோம். அங்கு வேலைப்பாடுகள் நடப்பதால் வெளியே இருந்தபடியே ரசித்து விட்டு தலைமை செயலகம், நீதிமன்றம், தலைவர்கள் சமாதி ஆகியவற்றை பார்த்த கையோடு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறோம். இன்றைய நாள் முடிவில் இரவில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஊர் திரும்புகிறோம்.

மாணவ மாணவிகளைசுற்றுலா சென்ற மாணவ மாணவிகளிடம் விமான பயணம் குறித்து கேட்டோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தலைமை ஆசிரியர் எங்களிடம், 'உங்கள் விருப்பம்' என்னவென கேட்டபோது ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு ஆசையை சொல்ல ஆரம்பித்தோம். அப்போது எல்லோருக்கும் பொதுவான ஆசை என்னவோ அதை கூறுங்கள் என ஆசிரியர் மறுபடியும் விளக்கிச் சொன்னார். எனவே, நாங்கள் அனைவரும் கலந்துபேசி ரைட் சகோதரர்கள் போலவே நாங்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும், அழைத்து செல்ல முடியுமா? என எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினோம். பிறகு சில நாள்களிலேயே எங்கள் அனைவரையும் விமானத்தில் அழைத்துச் செல்வதாக தலைமை ஆசிரியர் உறுதியாக சொன்னதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தோம்.

 விமானத்தின் மூலமாக சென்னைக்கு சுற்றுலா அழைத்து வரும் இந்த திட்டத்திற்கு பலரும் உதவி செய்துள்ளனர். அதன்படி துபாயில் உள்ள எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக இதற்கு நிதி திரட்டினேன். இந்த பயணத்திட்டம் குறித்து முன்னரே எனது ஆசிரியர் நட்பு வட்டத்திலும் தெரிவித்திருந்ததால் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள, இங்கிருக்கும் எனது உறவினர்கள், சுற்றத்தார், குடும்பத்தினர் என பலரும் அவர்களால் இயன்ற பண உதவி செய்தனர். 20 மாணவ-மாணவிகள், 8 ஆசிரியர்கள் உட்பட 28 பேருக்கு விமான டிக்கெட் செலவு மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஆனது. இது தவிர இரண்டு நாள்கள் பயணத்திட்டத்திற்கும் மூன்றுவேளை சாப்பாடு, வாடகை வேன், நுழைவுக் கட்டணம், இதர செலவுகள் என அனைத்துக்கும் நண்பர்கள், உறவினர்கள், சக பேராசிரியர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர். அதன்படி, தற்போது மாணவர்களின் ஆசை நிறைவேறி உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளின் ஆசை மெய்ப்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' என்றார்.

பொங்கல் விடுமுறையில் சுற்றுலா செல்ல இருக்கிறோம் என அடுத்தக்கட்டமாக தகவல் சொன்னதிலிருந்து மகிழ்ச்சியில் நாங்கள் யாரும் சரியாக தூங்கவில்லை. ஒவ்வொரு நாளும் விமானத்தில் எப்போது பயணம் செய்யலாம் என பொங்கல் விடுமுறை எதிர்பார்த்து நாள்களை எண்ணிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் திட்டமிட்டபடி மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கிளம்பியபோது எங்களுக்குள் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. வானத்தில் மேகங்கள் மிதக்கும் பஞ்சு கூட்டங்கள் போல தெரிந்தது. அதனை விமானத்தின் இறக்கைகள் தொட்டு செல்லும் போது நாங்களே மேகத்தை தொட்டு பிடித்து விளையாடிய உணர்வு ஏற்பட்டது. விமானத்தில் ஏறிய சில மணி நேரங்களிலேயே சென்னைக்கு வந்ததும் எங்களோடு விமான ஓட்டிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தை கேட்டு எங்களை அனைவரும் பாராட்டி உற்சாகப்படுத்தினர். இதில் எங்களுக்கு புதுவித அனுபவத்தை தந்தது. மேலும் சென்னையில் நாங்கள் எதிர்பார்க்காத இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்சென்றதில் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்களின் விருப்பத்தினை நிறைவேற்றிய ஆசிரியர்களுக்கும் அதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி" என்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow