பாவேந்தர் பாரதிதாசனாரின் பொங்கல் கவிதைகள்
Bharathi thasan Pongal kavithai
பாவேந்தர் பாரதிதாசனாரின் பொங்கல் கவிதைகள்
தைத்திங்கள் முதல் நாள் என்றார்!
தமிழர்கள் திருநாள் என்றார்!
புத்தமு தாக வந்த
பொங்கல் நாள் என்றார்க் கின்றார்!
கைத்திற ஓவி யங்கள்
காட்டுக வீட்டில் என்றார்!
முத்தமிழ் எழுக என்றார்!
முழங்குக இசைகள் என்றார்!
கொணர்கவே புதிய செந்நெல்
குன்றாக என்றார் ! பெண்கள்
அணிகள், பொன் னாடை யாவும்
அழகாகக் குவிக்க என்றார் !
மணமலர் கலவை கொண்டு
மலைஎனக் குவிக்க என்றார்
கணுவகல் கரும்பும் தேனும்
கடிதினிற் கொணர்க என்றார் !
எழுத்தாளர் பொங்கல் வாழ்த்தே
எழுதுக ஏட்டில் என்றார் !
பழச்சுமை வருக என்றார் !
பட்டியல் எழுதிச் சென்று
வழக்கத்துக் கடைச்ச ரக்கு
வாங்கிவந் திடுக என்றார் !
முழுக்குலை வாழை மாவின்
தோரணம் முடிக்க என்றார் !
எழுந்தது கீழ்க்க டல்மேல்
இளங்கதிர், மூசைத் தங்கம்
பொழிந்தது! விண்ணும் மண்ணும்
பொலிந்தது தமிழர் நாடு!
வழிந்தது பொங்கல் பொங்கி!
வாழ்த்தினர் பரிதி தன்னைத்
தழைத்தது நெஞ்சில் இன்பம்,
தமிழர்கள் பொங்கல் உண்டார்,
வாழிய பொங்கல் நன்னாள்
வாழிய திராவி டந்தான்!
வாழிய புதுமை நூற்கள்? வாழிய தமிழ்க் கலைகள்!
சூழிய மணிமு கில்கள்!
துலங்குக நன்செய் யாண்டும்
ஆழ்கடல் மிசை எழுந்த
அழகிய பரிதி வாழ்க
----------------------------------------------------------
பொங்கல் வாழ்த்து
(அகவல்)
பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே.
உண்ணும் விழிகள் உவக்கும்ஓ வியமே,
முன்னைக்கு முன்னர் முளைத்தமூ தொளியே,
இந்நாள் மட்டும் இளமைமா றாமல்
புதிது புதிதெனப் போற்றும் பரிதியே,
இந்நாள் புதுமையிற் புதுமை இயற்றினாய். !
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க, நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே,
ஆடல்வா ழியநின் அழகு வாழிய!
புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து
தித்திக் கும்பால் செம்மையின் அளாவ
அலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல
இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை,
பொங்கிடப், "பொங்கலோ, பொங்கலென் றார்த்தே
புரைதீர் வெல்லம், புலிப்பல் போன்ற
ஏலம், பருப்புச் சேலத்து நறுநெய்
நன்று சேர்த்துக் குன்றென இறக்கித்
தேன்பெய்து, முக்கனி சேர்த்து விருந்துடன்
ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்
திருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி
அருள்தேக் குழவர் வாழ்த்தி அந்தமிழ்
வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி
மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே!
----------------------------------------------
திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து
(எண்சீர் விருத்தம்)
அகத்தியனும் காப்பியமும் தோன்று முன்னர்!
அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்!
மிகுத்தகடல் குமரியினை மறைக்கு முன்னர்!
விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்
பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப்
பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துக்
திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில்
திராவிடநாடு எனப்போற்றும் என்றன் அன்னாய்,
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள்,
போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செய்தமிழால் வானிலெல்லாம் செதுக்கிவைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.
தெலுங்குமலை யாளங்கன் னடமென் கின்றார்
சிரிக்கின்றாய் அன்னாய்நின் மக்கள் போக்கை!
நலங்கெட்டுப் போனதில்லை, அதனா லென்ன?
நான்குபெயர் இட்டாலும் பொருள் ஒன்றன்றோ?
கலங்கரையின் விளக்குக்கு மறுபேர் இட்டால்
கரைகாணத் தவறுவரோ மீகாமன்கள்?
இலங்குதிரு வே, வையம் செய்த அன்னாய்
எல்லாரின் பேராலும் உனக்கென் வாழ்த்தே!
தமிழகமே, திராவிடமே, தைம்முதல் நாள்
தனிலுன்னை வாயார வாழ்த்துகின்றேன்.
அழிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை
எனும் உணர்வால் வாழ்துகின்றேன்; வாய்ப்பேச்சல்ல.
அன்றொருநாள் வடபுலத்தைக் குட்டு வன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில் இலையி லிட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான். அதைப்போ லத்தான்
இன்றுண்டேன்; அன்றுன்னை வாழ்த்தி னான்போல்
நன்றுன்னை வாழ்த்துகின்றேன் எனைப் பெற்றோயே
நல்லுரிமை உன்மூச்சில் அகன்ற தில்லை
பொன்னேஎன் பெருவாழ்வே அன்பின் வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத்தேன் நன்றுவாழ்க.
----------------------------------------------------
பொங்கல் பொங்கிற்றா!
(கலிவெண்பா)
உலகுநலம்காண உழவன் விதைத்தும்
இலகு மணிக்கதிர் ஏறப்-பொலிதோள்
கவிழக் கதிரடித்துச் சேர்த்திட்ட செந்நெல்
குவித்து நிமிர்ந்தான்! குளியில்-அவிழ்த்த
கதிர்ச்செல்வன் தானும் கடல்மேல் நிமிர்ந்தான்!
"இதுகேள் உழவனே, இந்த-முதுவையத்
தாட்சிஉனக் காகுக, என்று கதிரவன்
மாட்சியுடன் வாழ்த்தி மகிழ்கின்றான்-கேட்ட
உழவன். 'நிறைநாளின் செல்வனே உன்றன்
எழில்வாழ்க." என்னுமோர் வார்த்தை மொழிகின்றான்.
துய்ய உடம்புதான் சோர்வதே இல்லாமல்
வையகம் வாழ்ந்திட வாழும் அம்-மெய்யு ழவன்,
பொன்னின் புதுப்பரிதி வாழ்த்தியுளம் பூரித்துச்
செந்நெல்கொண் டில்லத்தே சேர்த்திட்டான்-என்னே!
உயர்நெல்லைத் தீட்டும் உலக்கைப்பா டல்கள்!
அயில்விழிமாதர் அடுப்புயர்த்த பானைப்-பெயலான
பாலோடு முத்தரிசி மேலெழுந்து பாடி வர
ஏலங்கற் கண்டுநெய் இட்டபடி -- மேலும்
தழுவித் தேன் பன்னீர் சுளைக்கனி யாவும்
இழைய இழையத், தமிழால் -- அழகுறவே
பொங்கலோ பொங்கல் என ஆர்த்தார்க்குச் செங்கரும்பும்
தங்கம்நேர் மஞ்சள் விளைச்சலும் -- எங்கணும்
மாவிலைத் தாரும் மலியக், குருத்தி லையைத்
தாவி விரித்திட்ட தையலர்கள்-ஆவலொடும்
அள்ளிவட் டித்திட்ட பொங்கல் அமிழ்தத்தைப்
பிள்ளைகள், பேரர், பெருமான்கள்-உள் அன்பார்
அன்னைமார் எல்லோரும் ஆரஉண்டார்கள்!
ஒருவீடு போலத் தெருவீ டுகளும்,
தெருவீ டுகள்போலத் தென்னாட் டிருக்கின்ற வீடெல்லாம் இன்ப விளையாட்டாம், வீட்டிலுள்ள
மாடுகன் றுக்கெல்லாம் மாச்சிறப்பாம்! சோடிப்பாம்!
மங்காத செந்தமிழீர் வாரீர் நும் வீட்டில்பால்
பொங்கிற்றா? வாழ்க பொலிந்து. !
------------------------------
பொன்னாடு வெல்கவே!
(எண்சீர் விருத்தம்)
உண்டாயா நீபொங்கல்? வீட்டிற்பால் பொங்கிற்றா?
உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர்
பண்தழைத்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன்
பழநாட்டார் உள்ளத்தின் ஒலிஅதுதான் தம்பி!
பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று
பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்திலுள்ள
எண் தவிர்த்தார் எல்லாரும், ''எங்கள்திராவிடந்தான்
என்றுவிடு தலையடையும்'' என்கின்றார் அன்றோ!
பனியில்லை; குளிரில்லை; இருள்கிழித்துக் கொண்டு
பகலவன்தான் தலைகாட்டப் பல்காட்டி வாழ்த்தி
இனியில்லை மடமைஎன ஆர்த்தாயே தம்பி
இரு! பார்இ தோஅறிவுக் கண்ணாடி பூண்பாய்!
முனைக்குமரி விந்தியத்தின் இடைப்பாங்கு வாழும்
முத்தமிழர் எல்லாரும், இத்திரா விடந்தான்
இனியடிமைத் தளையறுத்து விடுதலையே கொள்ள
ஏற்றசெயல் செய்கின்றார் தெரிகின்றது அன்றோ!
தைத்திங்கள் முதல்நாளின் திருவிழா, என்றன்
தனிமையினை நீக்கித், திராவிட ரெல்லாரும்
எத்தாலும் ஒன்றொன்று காட்டிற்றுக் கண்டாய்!
இனத்துநினை வெல்லாம்உன் மனத்தளவே அன்றோ?
முத்துநிறை கீழ்க்கடல், மேற்கடல், தெற்கேகுமரி
முன்வடக்கில் விந்தியமாம் மேவுதிரா விடர்கள்
ஒத்திந்த நாட்டினது விடுதலைக்கே என்றும்
உழைக்கின்றார் நிலங்குலுங்க! உற்றறிநீ தம்பி!
என்நாடு பிரிகெனப் பணிசெய்கின் றாய்நீ
எதிர்ப்போனும் அதைத்தானே செய்கின்றான் தம்பி!
பொன்னாடு திராவிடமாம் என்கின்றாய் அஃது
புன்நாடென் றுரைப்பானும் பொன்னாடென் போனே!
தென்னாட்டிற் கிளர்ச்சியினைச் செய்கின்றாய் நீதான்
சிரித்தபடி நிற்பானும் அதைத்தான்செய் கின்றான்
இன்னதனை நீயுணர மாட்டாயா தம்பி?
இனிவெற்றிக் கொடியேற்றல் ஒன்றுதான் பாக்கி!
மடமைஎன ஒன்றுண்டு! வாய்பெரிது! கையில்
வாள்ஒன்று வைத்திருக்கும் சிறைவீட்டு வாயிற்
படிமீது நிற்கும்! பல் லாற்பல்லை மெல்லும்
பார்என்று கூச்சலிடும்! போர் நிறுத்தக் கெஞ்சும்!
விடேன்என்று மேற்செல்வாய்! விடுதலையைச் செய்வாய்
வீறிட்டும் பாயும்உன் உடற்குருதி யால்உன்
கடமைசெய்வாய்! அம்மடமை தலைகவிழ்ந்து போகும். கண்மூடி யிருந்திட்டால் மண்மூடும் உன்னை!
உன்நாட்டை மீட்கநீ உயிர்நீக்கப் பெற்றால்
உயிர்நீங்கச் செய்தானும் உன்நாட்டை மீட்டோன்!
தென்னாட்டிற் பிறந்தாயா? இல்லையா? நீஇத்
திருநாட்டின் மறவனா? இல்லையா? வீரர்
கல்நாட்டிக் கல்நாட்டிக் காலமெலாம் குருதிக்
கடலேமுக் கடலாகப் புகழ்நாட்டி னார்இப்
பொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்!
புதியதிரா விடம் வாழ்க பொங்கலோ பொங்கல்!
--------------------
தைத்திருநாளே மகிழ்ச்சி கொண்டு வா
(எண்சீர் விருத்தம்)
அரிசில்லை விறகில்லை கறியில்லை நல்ல
அரசில்லாக் காரணத்தால் இவ்வளவு தொல்லை!
வரிசையொடு வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள்!
மன்னவர்கள் அந்நாளில் முறைசெய்த தாலே!
பரிசில் பெறும் தமிழ்ப்புலவர் அந்நாளில் வாழ்ந்தார்
பைந்தமிழ்வாழ்ந் ததுவாழ்ந்த திப்பெரிய வையம்
வருவாய்நீ தைப்பொங்கல் திருநாளே வாவா!
வறுமைஅறத் துன்பமற மகிழ்ச்சி கொண்டு வாவா?
வெட்டவெளி வானத்தை மாணிக்கம் ஆக்கும்
செங்கரும்பு நாட்டினிலே வெல்லமில்லை; வாழ்வை
எட்டிக்காய் ஆக்கிவிட்டார் ஆளவந்தார்! மானம்
இருப்பதாய்ச் சொல்கின்றார் அறிவற்ற பேச்சே!
எட்டுகின்ற பாங்கெல்லாம் தமிழர்புகழ் அன்றி
இல்லாமை என்னுமொரு பேச்சிருந்த தில்லை
மட்டற்ற செல்வமே ''தைப்பொங்கல் நாளே''
வறுமையறத், துன்பமற நீ வந்தாய் வாவா!
தமிழ் இகழ்ந்தார் கல்சுமக்கும் படிசெய்த இந்தத்
தமிழ் நாட்டில் தமிழர்க்கோர் ஆதரவும் இல்லை;
தமிழறியார் ஆளுகின்றார் அதனாலித் தொல்லை,
தமிழ்அறிந்தார் ஆட்சியினைக் கண்டார் அந்நாளில்!
கமழ்கின்றகருத் துண்டா இந்நாளில்? இன்று
கண்குழிந்த ஆளவந்தார், வடநாட்டின் அடியார்!
அமிழ்தேவா! தைப்பொங்கல் திருநாளே வாவா,
அகமகிழ்ச்சி கொண்டுவா எல்லார்க்கும் இங்கே!
ஏர்தட்டா துழுதுழுது பயன்விளைக்கும் உழவர்
எழில்நாட்டின் முகத்தினிலே அழகில்லை, நாட்டை
ஓர்தட்டாய்த் தட்டிப்போய்த் தாம்வாழ எண்ணும்
ஆளவந்தார் செய்கையினால் உற்றதிந்தத் தொல்லை
போர் தட்டும் முரசொலிக்கத் தமிழ்நாட்டில் இந்நாள்
பொதுத்தொண்டு வெல்கவே வெல்கவே என்று
மார்தட்டி வந்தாய்நீ தைப்பொங்கல் நாளே
வறுமையறத் துன்பமற மகிழ்ச்சிகொண்டு வாவா!
இருட்கடலும் ஒளிக்கடலே! புதுப்பரிதி, முகத்தை
எதிர்காட்டி ஆயிரம்செங் கதிர்க்கைகள் நீட்டி
அருட்பெருக்கால் வருகின்றாய் ஆண்டுக்கோர் நாளே! அன்னையே தமிழரெல்லாம் உன்னருமை மக்கள்!
பிரிக்கின்றார் எம்மையெல்லாம் யாம்பிரிய மாட்டோம்!
பிழைசெய்தார் யாம்சிறிதும் பிழைசெய்ய மாட்டோம்!
உருப்பட்டோம் உன்வரவால்! பொங்கலோ பொங்கல்!
உயர்வாழ்வு நிலைநிற்க! வாழியநீ வாழி.!
--------------------------------------
பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என்றுபா டுங்கள்
மன்றிலா டுங்கள்
எங்கள்நா டெங்கள்
அன்புநா டென்று
நன்றுபா டுங்கள்
பொங்கியா டுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
தங்கமே தங்கம்
மண்டுநீ ரெங்கும்
இங்கும்வா னெங்கும்
நன்றுகா ணுங்கள்
மிஞ்சியா டுங்கள்
சிந்துபா டுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
எங்கும் ஆதந்து
லந்தபா லுங்க
ரும்பினோ டும்க
லந்துமே பொங்க
நைந்தவா கும்ப
ழங்கள் தே னுங்க
லந்துவா னுங்க
மகிழ்ந்தவா றுண்ட
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
இங்குநா மின்று
கண்டபே ரின்பம்
என்றுமே கொண்டி
லங்குவோம் நம், பி
றந்தநா டும், கி டந்த சீ ரும்பொ
ருந்தவே நன்று
முந்தையோர் கண்ட
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
What's Your Reaction?