பொன் மழை - Pon mazhai kavithai
Mazhai kavithai
பொன் மழை
சித்திரத்தில் நீ சிரிக்க...!
நித்திரையை நான் தொலைக்க...!
கண்கள் திறந்திட மறுக்க...!
கடைக்கண்ணால் நான் பார்க்க
கார்முகில் கூரை மறைக்க
கண்ட கனவை நான் விவரிக்க...!
வான் வரைந்த சித்திரமோ!
வந்து சேர்ந்தாய் புவி நிரம்ப
வண்ண வண்ண நிலத்தில் நீ நடந்து
உருளுகிறாய் கடலை நோக்கி.
..
வர்ணங்களை மேனியெங்கும் அள்ளிப்பூசி
புது வர்ணஜாலம் காட்டிடுவாய் !
வர்ணமேனியை கடலில் நனைத்து
வானம் வர்ணஜாலம் காட்டுதடி!!
ஏழை கண்ணீரில் உதித்தவளோ!!?
பருகும் தண்ணீராய் பிறந்தவளே !!
அருவியாய் நீ சிரித்து உலகை
ஆனந்த படுத்த வந்தவளோ !!
புன்செய் நன்செய் வயல்வெளியில்
நீ நடந்தால் தென்றல் வந்து மோதுமடி!
பாலையெல்லாம் ஈரமாக்கி
பசுமைதனின் வயிறு நிரப்பி...!
வந்து சேர்ந்தாய் சமுத்திரத்தில்
ஏழை கண்ணீர் மிகுதியால்
கடல் தண்ணீரும் கரிக்குதோ!!?
வர்ணமெல்லாம் பூசி
சமுத்திரத்தில் கலந்து பின்
வான் நிறத்தை நீ அடைந்தாய் !!
கண்டது கனவல்ல! நிஜமென்று
வாடைகாற்று என் வாசல் தட்ட
மெதுவாய் நான் திறக்க
மின்னல் வெட்டி...
கொட்டுகிறாய் வெண் மழையே !!
What's Your Reaction?