சாவித்திரியும் நானும் - Tamil stories

Tamil stories

Dec 6, 2024 - 15:57
 0  4
சாவித்திரியும் நானும் - Tamil stories

சாவித்திரியும் நானும்

 

 

 ஹலோ, பல்லவி”

அப்பா எங்க இருக்கீங்க?”

நான் ரயில்வே ஸ்டேசன் முன்னாடி இருக்குற ஆட்டோ ஸ்டேன்ட் பக்கத்துல நிக்கிறேன்”

அப்பா உள்ள வர்றீங்களா ஃபர்ஸ்ட் பிளாட்பார்ம்க்கு”

இதோ வர்றேன், நீ எங்க இருக்க” 

ரெண்டு பேக்கும் ரொம்ப வெய்ட்டா இருக்கு அதான் ஃபர்ஸ்ட் பிளாட்பார்ம்லயே இருக்கேன், நீங்க வர்றீங்களா?

இதோ வர்றேன், ஃபர்ஸ்ட் பிளாட்பார்ம்ல எங்க இருக்க?”

ஆவின் பாலகம் முன்னாடி சேர் இருக்கும்ல அங்க தன் உக்காந்துருக்கேன்”

சரி இதோ வந்தர்றேன்” என அழைப்பை துண்டித்தார்.

டீ காபி, டீ காபி” என சொல்லியவாறு நடைமேடையின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நடந்து கொண்டிருந்தனர் டீ விற்கும் மூன்று நடுத்தர வயது ஆண்கள். நடைமேடையின் ஒரு ஓரத்தில் *ஆவின் பாலகம்* என எழுதி இருந்த கடையின் முன் மக்கள் கூட்டம் நெரித்துக் கொண்டு நின்றது, வழியில் வெறுமனே நடந்து செல்பவர்கள் கூட அங்கு சென்று அந்த பாலை குடிக்கத் தூண்டும் அளவு அந்த இடத்தையே சூடான சுண்டிய பாலின் வாசம் நிறைத்திருந்தது. 

பல்லவி” என ஒரு பெண்ணின் குரல் கேட்டது, இங்கு எந்த பெண்ணை எனக்கு தெரியும்! யாராக இருக்கும் என்று பின்னால் திரும்பி பார்த்தாள். பல்லவியின் முகம் முழுக்க ஆச்சரியமும் சிரிப்புமாக நிறைந்தது. 

நீங்க….. நீங்க, எப்படி இருக்கீங்க, எப்படி இங்க” என உள்ளிருந்து எழுந்த ஆனந்த குரலில் சற்றே பதட்டத்துடன் கேட்டாள் பல்லவி.

நான் நல்லா இருக்கேன், வேல விஷயமா ஒரு சின்ன டிரிப், நீ என்ன இங்க உக்காந்திருக்க”

காலேஜ் முடிஞ்சுது, அதான் ஊருக்கு பொட்டிய கட்டீட்டேன், ரொம்ப வெயிட்டா இருந்தது அதான் அப்பா உள்ள வரட்டுமேன்னு இங்க உட்கார்ந்திருக்கேன்”

அப்படியா…. வாழ்த்துகள், பட்டதாரி ஆயிட்டிங்க”

தாங்க் யூ சோ மச், உங்களுக்கு எத்தனை மணிக்கு ட்ரெயின்”

“9 மணிக்கு தான்”

அப்போ சரி, பொறுமையா பேசலாம், டீ குடிக்கிறீங்களா!?” என உற்சாகம் பொங்க பேசிக் கொண்டிருந்தாள் பல்லவி. 

உடம்பு இப்ப எப்படி இருக்கு பல்லவி?” 

இப்ப நல்லா இருக்கேன்” 

அன்னைக்கு உங்கள மீட் பண்ணினது, நம்ம பேசிட்டு இருந்தது எல்லாம் அப்பப்போ நினைச்சு பார்ப்பேன், ஒரு ஏழு எட்டு மணி நேரத்துல ஒரு மேஜிக் பண்ணிட்டு போயிட்டீங்க…” 

பல்லவியின் உற்சாகம் நிறைந்த பேச்சைக் கேட்டு புன்னகைத்துவிட்டு

நானும் உன்ன ஆட்டோ ஏத்தி விட்டுட்டு அவசரமா போயிட்டேன், சரியா சொல்லிட்டு போகலையோன்னு தோனுச்சு, அப்பப்போ டிரெயின்ல டிராவல் பண்றப்போல்லாம் உன் நியாபகம் வரும்” என்றார் அந்த பெண்.

எப்பவாவது மறுபடியும் உங்கள பார்க்க மாட்டேன்னான்னு யோசிச்சிருக்கேன், இன்னைக்கு அதுவா நடந்துருச்சு” என்றாள் பல்லவி.

ரெண்டு பேரும் கோயம்புத்தூர் தான், எங்க போயிறப் போறோம், கண்டிப்பா எப்பவாவது நம்ம மீட் பண்ணியிருப்போம், அது இன்னைக்கே நடந்துருச்சு, ஹாப்பி டூ சீ யூ அகைன்” என சொல்லி அந்த பெண் சிரித்தார். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்த நேரத்தில் பல்லவியின் அப்பாவும் அங்கு வந்து சேர்ந்தார். அப்பாவை பார்த்ததும்,

அப்பா, அன்னைக்கு எனக்கு டிரெயின்ல ஹெல்ப் பண்ணினாங்கன்னு சொன்னேன்ல, அது இவங்க தான்”

பல்லவியின் அப்பா அந்த பெண்ணை பார்த்து சிரித்து விட்டு “பொண்ணு சொன்னா… நீங்க ரொம்ப ஹெல்ப் பண்ணினீங்கன்னு, தாங்க்ஸ் மேடம்” என சொன்னார், “அதெல்லாம் பரவாயில்ல சார், பிளீஸ் டோண்ட் மென்ஷன்” என சொல்லி அந்த பெண்ணும் புன்னகைத்தார்.

இப்ப தான் பார்த்தோம் அதுக்குள்ள கிளம்ப வேண்டியதா ஆயிருச்சு, இனி எப்ப மீட் பண்ணுவோம்” என சொல்லி பல்லவி வருத்தப்படவும் “இதுக்கு ஏன் சோகமாகுற பல்லவி, என் மொபைல் நம்பர் எடுத்துக்கோ, நேரம் கிடைக்கும் போது பேசிக்கலாம், ஒரே ஊரு தான் வாய்ப்பிருந்தா மீட் பண்ணலாம்” என சொல்லி தன் கைப்பேசி எண்ணை பல்லவியிடம் கொடுத்து பல்லவியின் எண்ணையும் வாங்கிக் கொண்டு, பல்லவியை கட்டி தழுவி விடை கொடுத்தார் அந்த பெண், அவர் சென்ற திசையில் திரும்பி பார்த்தபடியே நடந்தாள் பல்லவி, கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கூட்ட நெரிசலில் மறைந்தார்.

இரவு 7.00 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் மக்கள் திரளால் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. நீலமும் வெள்ளையும் சிவப்புமான வண்ணங்களில் “கோயம்புத்தூர் சந்திப்பு” என எழுதியிருந்த ரயில்நிலைய முன்பக்க கேட்டை அடைந்தனர் பல்லவியும் அவள் அப்பாவும். அங்கிருந்து ஆட்டோ பிடித்து தங்கள் வீட்டை நோக்கி சென்றனர். 

பல்லவியின் நினைவு முழுக்க அன்றொரு நாள் இரவு தாத்தாவுடன் இதேபோல ஆட்டோவில் சென்றதும், அன்றைய ரயில் பயணமும் தான் ஓடிக்கொண்டிருந்தது.  

      ********************************

தாத்தா”

சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர், அங்கு பல்லவியும் அவளுடன் ஒரு நடுத்தர வயது பெண்ணும் நின்று கொண்டிருப்பதை பார்த்தார். பல்லவியிடமிருந்து அவள் தோள் பையை வாங்கி அவர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவில் வைத்து விட்டு, சீக்கிரம் வீட்டிற்கு சென்று சேர்ந்தால் போதும் என்பது போல பல்லவியை பார்த்து “வந்து உக்காருடா, போலாம்” என சொல்ல பல்லவியும் சென்று உட்கார்ந்தாள். தலை வலியும் ரயிலில் வந்த களைப்பும், சரியாக சாப்பிடாததும் சேர்த்து வாட்டியது அவளை. ஆட்டோவில் ஏறி பல்லவி வெளியே நின்றிருந்த அந்த பெண்ணிடம் லேசாக சிரித்துக் கொண்டே தலையாட்டினாள், அந்நேரம் அந்த பெண்ணின் கைப்பேசி அழைக்க, அதை எடுத்து காதில் வைத்துக் கொண்டே பல்லவியை நோக்கி கையசைத்துவிட்டு, எதிர்ப்புறம் திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தார் அந்த பெண். 

ஆட்டோவில் செல்ல செல்ல கண்களை மூடி தாத்தாவின் தோள் மீது லேசாக தலையை சாய்த்தாள் பல்லவி, அவள் கண்கள் மூடியிருந்தாலும் அன்றைய ரயில் பயணம் முழுக்க அவள் கண்ட காட்சிகளையும் பேசிய பேச்சுக்களையும் ஆழ் மனதில் அசைபோட்டபடி இருந்தாள்.

*************************************

அவசர அவசரமாக கல்லூரிக்கு செல்ல குளித்துக் கொண்டிருந்த பல்லவிவேகமாக குளித்து உடை மாற்றி குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.

ஏற்கனவே நேரமாகியிருந்ததால் வேகமாக ஒப்பனை செய்து, தலைமுடியை ஒரு கிளிப்பில் ஒதுக்கிக் கொண்டு, மேசை மீது பரப்பிக் கிடந்த புத்தகம் பேனா என அனைத்தையும் தன் தோள் பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, பூட்டையும் சாவியையும் ஒரு கையில் எடுத்துக் கொண்டு, தோள் பையை மற்ற கையிலும் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். 

அவசரமாக வெளியே வந்தவளுக்கு லேசாக தலை சுற்றுவது போல தடுமாறினாள். கதவை ஒரு கையில் பிடித்து, கீழே விழாமல் நிற்க முயன்றாள்….. ஒரு நிமிடம் அப்படியே நின்றவள் பிறகு நிதானமானாள். அவசர அவசரமா எல்லாவற்றையும் செய்ததால் வந்த தடுமாற்றம் என எண்ணியவள், கதவை பூட்டிவிட்டு கல்லூரிக்குள் சென்றாள்…

வகுப்பறையை அடைந்து முதல் இரண்டு வகுப்புகள் நன்றாகவே சென்றது, லேசான அசதியை உணர்ந்த அவள், மூன்றாது வகுப்பில் அசௌகரியமாக உணர்ந்தாள். நேராக உட்கார முடியவில்லை, முதுகெலும்பு முழுவதும் கம்பியை வைத்து முறுக்குவது போல வலியை உணர்ந்தாள், கூடவே தலைவலியும், எச்சில் விழுங்கும் போது  தொண்டையிலும் லேசாக வலி ஏற்பட்டது…. உடல் முழுவதும் ஏதோ பாரத்தை தூக்கி வைத்தது போல கனத்தது….

வகுப்பில் உட்காரவும் முடியாமல், எழுந்து வெளியே செல்லவும் முடியாமல், அசௌகரியத்தை வெளிப்படுத்தவும் முடியாமல், கண்களில் கண்ணீர் ததும்ப உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்த விரிவுரையாளர்

பல்லவி, ஆர் யூ ஓகே”

அவ்வளவு தான் அணை போட்டு வைத்திருந்த பல்லவியின் கண்கள், மடைதிறந்து கொட்ட ஆரம்பித்தது….

அவள் ஏன் அழுகிறாள் என கேள்வி எழுப்ப நினைக்காமல், அவராகவே ஒரு ஊகத்திற்கு  வந்து,

இஃப் யூ வான்ட், யூ கேன் கோ டூ ஹாஸ்டல் பல்லவி” என்றார்.

தன்னால் இனி உட்கார முடியாது என உணர்ந்தவள் விரிவுரையாளரிடம் சொல்லி தன் வகுப்பு தோழி நிலாவை தன்னுடன் துணைக்கு அனுப்புமாறு கேட்டாள், அவரும் அனுப்பி வைத்தார்.

பல்லவியும் நிலாவும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள், அறையின் கதவை திறந்து கட்டிலில் சரிந்தாள்.. காலை உணவு சாப்பிடாமல் கல்லூரிக்கு சென்றதன் களைப்பு, உடலில் ஏதோ கோளாறு, எல்லாமாக சேர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது அவளை….

பசி மறந்து, சுற்றிலும் நடப்பது உணராமல் உறங்கிக் கொண்டிருந்தாள், எவ்வளவு நேரம் உறங்கினாள் என தெரியவில்லை, அப்படி ஒரு உறக்கம்…..

அவள் தலையணைக்கு அருகில் வைத்திருந்த கைப்பேசியின் சத்தம் கேட்டு மெல்ல கண் விழிக்க முயன்றாள்…. கண்கள் திறக்க கடினமாக இருக்கவே, கைகளால் தடவி கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்று பேச துவங்கினாள்.

பல்லவி….” என அவள் அம்மாவின் குரல் கேட்டது.

என்னம்மா இந்நேரம் கால் பண்ணியிருக்க” என களைப்பில் பல்லவி கேட்க…

ஏது இந்நேரமா!? எப்பவும் இந்த நேரத்துல தான கூப்பிடுவேன்” என அம்மா பதிலளித்தார்..

பல்லவிக்கு தூக்கி வாரிப் போட்டது… “இவ்வளவு நேரம் தூங்கீட்டனா” என முணுமுணுத்துக் கொண்டே கண்களை திறந்து எதிர் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தாள், அது 6.05 மணி என காட்டியது… 

பல்லவி என்ன ஆச்சு, குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு” என கவலையுடன் அம்மா கேட்க,

காலையிலிருந்து நடந்ததை நிதானமாக விளக்கிச் சொல்லிக் கொண்டே, மெல்ல எழுந்து சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள்….

எதையோ யோசித்த அம்மா சட்டென சொன்னார், “சரி நீ கிளம்பி வீட்டுக்கு வா.. நாளைக்கு காலையில ட்ரெயின் இருக்குல்ல” 

இல்லம்மா நாளைக்கு எப்படி வர முடியும், இன்னும் ரெண்டு நாள் கிளாஸ் இருக்கு, டிக்கட் கூட புக் பண்ணல, திடு திப்புனு வான்னு சொன்னா எப்படி வர்றது” என இவள் சொல்லவும்.

உடம்பு சரியில்லன்னு சொல்ற ஹாஸ்டல்ல சாப்பாடும் சரியிருக்காது, ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வா, அங்க தனியா எப்படி சமாளிப்ப”

அதெல்லாம் சமாளிச்சிருவேன்மா, நிலா இருக்கால்ல” 

என்னத்த சமாளிப்ப, சின்ன தல வலிக்கே சுருண்டு படுத்துருவ, இப்ப உடம்பு சரியில்லன்னு கிளாஸ்ல இருந்து பாதியில வந்துருக்கன்னா சுத்தமா முடியாமத்தான வந்துருப்ப” என சற்று உயர்ந்த குரலில் அம்மா சொன்னார். 

இல்லம்மா…. அதெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன், லேசா தல வலி தான்”

நிலா இருக்காளா பக்கத்துல, ஃபோன குடு…”

இல்லம்மா நான் இப்ப தான் தூங்கி எந்திச்சேன் நிலா வெளிய இருக்கா போல, ரூம்ல ஆள காணும்…”

உன் குரலே அசதியா இருக்கே… எனக்கு இதொன்னும் சரியா படல, ஒழுங்கா வீட்டு கெளம்பி வா, என்ன ஏதுன்னு பார்த்துட்டு போனா போது…”

என்னம்மா, இந்த சின்ன….” என பல்லவி ஏதோ சொல்ல துவங்க,

நீ என்ன பெக்கல, நான் தான் உன்ன பெத்தேன், நான் சொல்றத நீ கேட்டா போதும், கிளம்பி வான்னா வர வேண்டியது தான” என சற்று கடுமையான குரலில் அம்மா சொன்னார்.

ம்…” என்று மட்டும் பதிலளித்தாள் பல்லவி. 

உடம்பு சரியில்லாம ஹாஸ்டல்ல இருக்க வேண்டாம், உன் மேல உள்ள அக்கறையில தான சொல்றேன், சொன்னா கேளு, நாளைக்கு காலைல 11.45 க்கு மங்களூருல இருந்து கோயம்பத்தூர் வர்ற இன்டர்சிட்டி டிரெயின்க்கு வா, பகல் நேரம் தான் டிக்கட் புக் பண்ணலன்னாலும் வந்துரலாம், கூட்டமும் கம்மியா தான் இருக்கும் இடநாள் தான, அப்பா இல்லைன்னா தாத்தா ஸ்டேஷனுக்கு வந்து உன்ன கூப்பிட்டுப்பாங்க” என விளக்கமாக வழிமுறைகளை அம்மா கூற, எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை பல்லவிக்கு…ஆனாலும் முதல் முறையாக பயணச் சீட்டு முன்பதிவு செய்யாமல் ரயிலில் ஏறுவதை நினைத்து பதட்டமும், பயமுமாக இருந்தது அவளுக்கு.

    *********************************

மாசத்துல ஒரு நாள் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னா கூட 4 நாளைக்கு மேல லீவ் இருந்தா மட்டும் வந்தா போதும்னு சொல்ற என் வீட்டுல உள்ளவங்க எங்க, லேசா காய்ச்சல் தலவலின்னு சொன்னாலே ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வான்னு சொல்ற உன் வீட்டுல உள்ளவங்க எங்க, இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும், நீ என்னடான்னா போக பிடிக்கலன்னு சொல்ற,” என சிரித்த படியே சொல்லிக் கொண்டு பல்லவியின் கையை பிடித்தபடி ரயில் நிலையத்திற்குள் நுழைந்தாள் நிலா. 

ஃபர்ஸ்டே டிக்கட் புக் பண்ணியிருந்தா கூட பரவாயில்ல, இதுவரை ஜெனரல் கம்பார்ட்மண்ட்ல போனதில்ல, சீட் கிடைக்குமான்னும் தெரியல, இவ்வளவு கஷ்டப்பட்டு போறதுக்கு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஹாஸ்டல்லயே தூங்கீருந்தா எல்லாம் சரியாயிருக்கும்” என சலிப்பான குரலில் பல்லவி பதிலளித்தாள். 

பக்கம் பக்கமா வசனம் பேசுவ, இப்ப ஜெனரல் கம்பார்ட்மண்ட்ல போறதுக்கு இவ்வளவு பயப்படுற” என சொல்லி சிரித்தாள் நிலா.

பயமெல்லம் ஒன்னும் இல்ல” என சொல்லிவிட்டு பயணச்சீட்டு எடுக்க சென்றாள் பல்லவி. கொஞ்ச நேரம் வரிசையில் நின்று பயணச் சீட்டு வாங்கிய பின் மங்களூர் முதல் கோயம்புத்தூர் செல்லும் இன்டர்சிட்டி ரயில் நிற்கும் இடம் எது என தெரிந்து கொண்டு இருவரும் மெல்ல அங்கு செல்லவும், ரயிலை அங்கு வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது. அப்போது தான் ரயில் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என்பதால் கூட்டம் இல்லை.

பொறுமையாக ரயிலின் கடைசியில் இருந்த பெண்களுக்கான தனிப் பெட்டியில் ஒரு ஜன்னல் ஓரமாக பார்த்து உட்கார்ந்தாள் பல்லவி, நிலாவிடம் தண்ணீர் பாட்டில் வாங்கித் தர முடியுமா என பல்லவி கேட்க, தண்ணீர் பாட்டில் வாங்க சென்றாள் நிலா. அடுத்த சில நிமிடங்களில் பெண்களுக்கான தனிப் பெட்டியில் பெண்கள் ஒவ்வொருவராக வந்து அமர ஆரம்பித்தனர். ஜன்னலுக்கு வெளியே நின்று பல்லவியிடம் தண்ணீர் பாட்டிலை கொடுத்து விட்டு, “அந்த துப்பட்டாவ எடுத்து தலையில போட்டுக்கோ, காத்து காதுக்குள்ள போகாம பார்த்துக்கோ, ஹைட்ரேட்டடா இரு, ஏற்கனவே தல வலி முதுகு வலி எல்லாம் இருக்கு… பார்த்து பத்திரம்” என அக்கறையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள் நிலா. 

மணி 11.45 ஆனதும் ரயில் புறப்பட்டது, நடைமேடையில் நின்று நிலா கையசைக்க பல்லவியும் லேசாக கையைசத்தாள். ரயிலின் வேகம் கூட கூட மங்களூர் ரயில் நிலையம் பார்வையில் இருந்து மறைந்தது. 

தலையில் முக்காடுடன் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த பல்லவியால் அதிக நேரம் அப்படி உட்கார முடியவில்லை, ஏற்கனவே இருந்த முதுகுவலி சற்று அதிகமானது போல இருந்தது. கூடவே உடலும் வெப்பமடைய ஆரம்பித்திருந்தது, அவள் உடலில் ஏற்படும் அசௌகரியத்தால் நெளிந்து கொண்டிருந்தாள். ஏறுவெயிலில் ரயில் பெட்டி ஏற்கனவே ஒரு நகரும் அடுப்பு போல வெப்பத்தால் தகித்தது, கூடவே பெண்களின் நெரிசல் அந்த வெப்பத்தை இன்னும் அதிகமாக்கியது. ஒவ்வொரு ஸ்டேஷனாக ரயில் நிற்க கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்ததே தவிர அது குறையவில்லை, “இட நாள்ள கூட்டம் இருக்காதுன்னு நினைச்சா, என்ன இது இவ்வளவு கூட்டம்” என மனதிற்குள் வெம்பிக் கொண்டிருந்தாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க இருந்த சில பெண்கள் கையில் குழந்தையுடன் நிற்கும் இரு பெண்களை அழைத்து அவர்கள் உட்கார்ந்திருந்த சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு கதவருகில் சென்று நின்றனர். நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் மங்களூரில் இருந்து ஏறியதால் அவர்களுக்கு சீட் கிடைத்தது, அடுத்தடுத்த ஸ்டேஷனில் ஏறவும் இறங்கவும் செய்யும் பெண்கள் தான் அதிகமும் நின்று கொண்டு வந்தவர்கள். 

ரயிலில் ஏறியதிலிருந்து பல்லவியின் எதிர் சீட்டில் அவளுக்கு நேராக அமர்ந்திருக்கும் பெண் பல்லவியை கவனிக்கிறார். இவளுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை என்று மட்டும் அந்த பெண்ணிற்கு புரிகிறது ஆனால் எதுவும் கேட்கவில்லை, பல்லவி உட்கார்ந்த இடத்திலேயே நெளிந்து நெளிந்து உட்காருவதை பார்த்து “என்னம்மா ஆச்சு” என கேட்டார்.

இல்ல… ஒன்னும் இல்ல” என பல்லவி பதிலளிக்க அதன் பிறகு அந்த பெண் ஒன்றும் கேட்கவில்லை, தன் கையில் வைத்திருந்த புத்தகத்தில் அடுத்த பக்கத்தை புரட்டி படிக்க ஆரம்பித்தார். நெடு நேரம் வெறுமனே உட்கார்ந்திருப்பது பல்லவிக்கு சலிப்பாக இருந்தது, கைப்பேசியில் ஏதாவது பார்க்கலாமென்றால் வீடு சென்று சேரும் வரை சார்ஜ் இருக்க வேண்டும், ஒரு வேளை சார்ஜ் இல்லாமல் கைப்பேசி அணைந்துவிட்டால் அம்மா திட்டி தீர்த்துவிடுவார் என்ற பயம், அதனால் அதிகமாக கைப்பேசியை உபயோகிக்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து பின்னோக்கி ஓடும் மரம் செடி கொடி ஆகியவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், உடல் அலுப்பும் ரயிலின் குலுக்கமும் ஜன்னலோர காற்றும் பல்லவிக்கு லேசாக உறக்கம் வர வைத்தது, சற்றே கண் அயர்ந்தாள் அவள்.

ரயில் பல ஸ்டேஷன்களை கடந்து மதியம் 1.45 மணியளவில் கன்னூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து கண்ணை மூடி படுத்திருந்தவள் நடைமேடையில் மதிய உணவு விற்கப்படும் சத்தம் கேட்டு கண்களை திறந்தாள், உறக்கம் விழித்த உடனேயே சட்டென குரல் எடுத்து கூப்பிட முடியாததால் மதிய உணவு விற்பவர் பல்லவியை கடந்து சென்று விட்டார், பசியின் வாட்டமும் எதுவும் வாங்க முடியாமல் போன ஏமாற்றமும் சேர்ந்து அவள் முகத்தை சோர்வாக்கியது. கையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து குடித்து விட்டு மீண்டும் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்தாள். அந்த பெட்டியில் இருந்த கூட்ட நெரிசல் சற்று குறைந்திருந்தது போல தெரிந்தது, அது மட்டுமே அப்போதைக்கு அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. கொஞ்சம் நெளிந்து உட்கார்ந்தாள் பல்லவி, அப்போது அவள் எதிரில் இருந்த பெண் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள், அந்த பெண்ணும் கண்களை உயர்த்தி பல்லவியை பார்த்தார். பல்லவி நெளிவதையும் முகத்தில் உள்ள சோர்வையும் பார்த்து “உடம்பு சரியில்லையாம்மா” என்று கேட்டார். ஆமாம் என்பது போல தலையசைத்தாள் பல்லவி. “என்ன ஆச்சு” என மீண்டும் கேள்வி வர, நிதானமாக தொண்டையை சரி செய்து கொண்டு “ஃபீவர்” என்று மட்டும் சொல்லி நிறுத்தினாள். “ஏதாவது வேணுமா?” என அந்த பெண் கேட்க, எதுவும் வேண்டாம் என்பது போல தலையசைத்தாள் பல்லவி. ஆனால் பசி அவளது அசௌகரியத்தை மிகைப்படுத்தி உணர வைத்தது அப்பட்டமாக தெரிந்தது. 

மனதை மடைமாற்றினால் ஓரளவு ஆசுவாசமாக இருக்கும் என ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள், ஆனால் எவ்வளவு நேரம் தான் வெளியில் இப்படி பார்ப்பது என தலையை நேராக்கி தன் எதிரில் இருந்த அந்தப் பெண்ணை பார்த்தாள் பல்லவி.

பழுப்பு நிற காட்டன் சுடிதார் அணிந்து, சிறிய கம்மலும் கழுத்தில் மெல்லிய செயினும், கையில் ஒரு வாட்ச்சும் அணிந்து மடியில் தன் தோள் பையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அந்த பெண், சற்றே சதை பிடிப்புள்ள அந்த பெண்ணிற்கு அவை அனைத்தும் மிகப் பொருத்தமாக இருந்தது. தன் அம்மாவை விட மூன்று அல்லது நான்கு வயது தான் குறைவாக இருக்கும் அந்த பெண்ணுக்கு என தோன்றியது பல்லவிக்கு. தன் அம்மாவும் இவரைப் போலவே உடை உடுத்தினால் நன்றாக இருக்கும் என ஒரு கணம் நினைத்தாள். ஜன்னல் வழியே காற்று அந்த பெண்ணின் தலைமுடியை கலைக்க ஒரு கையால் அதை சரி செய்து விட்டு இன்னொரு கையில் புத்தகத்தை பிடித்துக் கொண்டு  கண்களை அதில் மேய விட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த தீவிர பாவம் அவள் அப்படி என்னதான் படிக்கிறாள் என பார்க்க வைத்தது பல்லவியை. 

அந்த புத்தகத்தின் முகப்பு படத்தில், பச்சை பசேல் என்ற தேயிலைத் தோட்டமும் அதில் தேயிலையை கிள்ளிக் கொண்டு ஒரு பெண்ணும் நிற்பது போன்ற படம் அச்சிடப் பட்டிருந்தது, அதற்கு மேலே *எரியும் பனிக்காடு* என எழுதப் பட்டிருந்தது, பல்லவிக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது, ஆனால் அவள் இந்த புத்தகத்தை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறாள். 

பல்லவி தன்னை பார்ப்பதை பார்த்துவிட்டார் அந்த பெண். புத்தகத்திலிருந்து லேசாக கண்களை உயர்த்தி என்ன என்பது போல பல்லவியை பார்த்தார். அந்தப் பெண்ணின் கண்களை பல்லவி நேருக்கு நேர் சந்திக்கவும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து, ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்தாள்.

என்ன ஆச்சும்மா, உடம்புக்கு ஏதாவது செய்யுதா, ஏதாவது வேணுமா?” என எந்த தயக்கமும் இல்லாமல் அந்தப் பெண் கேட்கவும், “ம்ஹும்” என சொல்லி தலையை ஆட்டினாள், பிறகு தலையை ஜன்னல் பக்கமாக திருப்பி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் பல்லவி, அந்த பெண்ணும் தன் புத்தக வாசிப்பை தொடர்ந்தார். வெளியே வேடிக்கை பார்த்தாலும் பல்லவியின் காதில் அவள் அருகே இருந்த பெண்களின் பேச்சு கேட்டது

பார்ட்டி வக தலஷேரியிலொரு செரிய சமரம் உண்டு, அதினு போவா” என்று ஒரு பெண் சொல்ல, “ஞான் வடகரைக்கா போவுன்னே மோளே காணான்” என மற்றொரு பெண் பதிலளித்தார். அவர்கள் பேசிக்கொள்வதில் பெரிய சுவாரசியம் இல்லாதது போல தோன்றியது பல்லவிக்கு, அதனால் அதிகம் அவர்கள் பக்கம் கவனம் செல்லவில்லை. ஏதோ நினைத்தவள் 

கையில் வைத்திருந்த பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்தாள், பின் தன் எதிரில் இருந்த அந்த பெண்ணை பார்த்தாள், அந்த பெண் தன் கையில் வைத்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்திருக்க ரயில் தலஷேரி ஸ்டேஷனை வந்தடைந்தது. அங்கு மேலும் சில பெண்கள் இறங்கினார்கள். ரயில் பெட்டியில் அனைவருக்கும் உட்கார இடம் கிடைத்தது போல தெரிந்தது, கூட்ட நெரிசல் இல்லாமல் கொஞ்சம் காற்றோட்டமாக இருந்தது. முதுகை சற்று சாய்த்து சௌகரியமாக உட்கார்ந்தாள். டீ குடிக்கலாம் என நினைத்து டீ விற்பவர்களை தேடினாள், அவள் கண்களில் யாரும் படவில்லை, ஆனால் சாயா.. காபி.. சாயா.. காபி… எனும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது, அந்த சத்தம் இவளை வந்தடையும் முன் ரயில் கிளம்பி விட்டது.

கைக் கடிகாரத்தை பார்த்தாள் மணி 2.15 என காட்டியது, அன்றைய தினம் நகரவே இல்லை என தோன்றியது பல்லவிக்கு, வயிறு பசித்தது, மீண்டும் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தாள், எப்படியாவது நேரத்தை போக்க வேண்டும் என மீண்டும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஜன்னலுக்கு வெளியேயும் பார்த்துக்கொண்டிருந்தாள், எதிரில் இருந்த பெண் கொஞ்ச நேர இடைவெளி விட்டு புத்தகத்திலிருந்து கண்களை உயர்த்தி பல்லவியை பார்ப்பதும், பிறகு புத்தக வாசிப்பை தொடருவதுமாக இருந்தார், அப்படியே ரயில் கோழிக்கோடு ஸ்டேஷனை அடைந்தது. 

காலையில் ஹாஸ்டலில் ஒரு இட்லி மட்டுமே சாப்பிட்டிருந்த பல்லவிக்கு இப்போது ஏதாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என வயிறு கிள்ளியது, ஏற்கனவே கன்னூரில் மதிய உணவை தவறவிட்டு விட்டாள், இடையில் எங்கும் ஒரு டீ கூட குடிக்க முடியவில்லை, இங்கு ஒரு டீயாவது வாங்கி குடித்தால் தான் கொஞ்சமாவது வயிற்றுப் பசி அடங்கும் என தோன்றியது. அவள் எதிர்பார்த்தது போலவே நடைமேடையில் “சாயா காபி சாயா காபி, கடி…” என சொல்லிக் கொண்டு டீ விற்கும் இரண்டு மூன்று ஆண்கள் ரயிலின் ஜன்னல் பக்கமாக வந்தார்கள், பல்லவி அதில் ஒருவரை கூப்பிடுவதற்கு முன் எதிரில் இருந்த அந்தப் பெண் “சேட்டா ஒரு சாயா” என சத்தமாக சொன்னார். அந்த பெண் வாங்கியதும் நாமும் வங்கிக் கொள்வோம் என நினைத்த பல்லவி அந்த பெண் வாங்கி முடிப்பதற்காக காத்திருந்தாள். டீ விற்பவர் நின்று கெட்டிலில் இருந்த டீயை ஒரு கோப்பையில் பிடித்து ஜன்னல் வழி அந்த பெண்ணிடம் கொடுக்க அதை வாங்கி தனக்கு எதிரில் இருந்த பல்லவியிடம் நீட்டினார், பல்லவி ஆச்சரியத்துடன் பார்த்தாள், அவளுக்கு சற்று தயக்கமாகவும் இருந்தது அதை வாங்கிக் கொள்ள, “வாங்கிக்கோம்மா” என அந்த பெண் பரிவுடன் சொல்ல பல்லவியும் வாங்கிக் கொண்டாள். பர்சிலிருந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து டீ விற்பவரிடம் கொடுத்தார் அந்த பெண். 

பல்லவி அந்த பெண்ணை பார்த்தாள். “ரொம்ப நேரமா ஒரு மாதிரி இருக்க, மதியம் சாப்பிடவும் இல்ல, இப்ப நீ கூப்பிட வாயெடுக்குறதுகுள்ள டீ விக்கிறவர் போயிருவாரோன்னு தோனுச்சேன், இவரும் போயிட்டா அப்புறம் சொர்னூர் போயி தான் நல்ல டீ குடிக்க முடியும், அதான் நானே வாங்கிட்டேன், ம்…. டீ குடி”  என அந்த பெண் சொல்ல, என்ன பேசுவது என தெரியாமல் கையில் வைத்திருந்த டீயை ஒரு மிடறு குடித்தாள் பல்லவி. 

யார் இது? இவர் ஏன் எனக்கு இதை செய்கிறார்? என யோசித்துக் கொண்டே பல்லவி கையில் இருந்த டீயை மெதுவாக குடித்தாள், சூடான டீ தொண்டையில் இறங்கும்போது ஏற்படுத்திய வெதுவெதுப்பு பல்லவியின் அசௌகரித்தை குறைத்தது. டீயை குடித்து முடித்து வெறும் கோப்பையை ஜன்னல் வழியே வெளியே தூக்கிப் போட கையை ஜன்னல் பக்கம் நீட்டிய போது, “எக்ஸ்க்யூஸ் மீ” என எதிரில் இருந்த அந்தப் பெண் பல்லவியை பார்த்துச் சொல்லவும் பல்லவி “என்ன” என்பது போல அவரை பார்த்தாள். “கப்ப அப்படி தூக்கி போடாதம்மா” என சொல்லி தன் தோள் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து பல்லவியின் கையில் இருந்த வெற்றுக் கோப்பையை கசக்கி அந்த காகிதத்தில் வைக்குமாறு சொன்னார் அந்த பெண். பல்லவி அந்தப் பெண்ணை வினோதமாக பார்த்தாள், பல்லவியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு “இப்படி தூக்கி போடுறது நல்ல ஹாபிட் இல்ல, ஸ்டேஷன்ல இறங்கினதும் இத குப்ப தொட்டியில போட்டுக்கலாம்” என சொல்லி அவர்களுக்கு எதிரே இருந்த ஸ்டான்ட்டில் அந்த காகித பொட்டலம் நகர்ந்து போகாதவாரு வைத்தார் அந்த பெண். அவர் பேசியதையும் செய்ததையும் பார்த்து “ம்….” என மனதிற்குள் சற்று அழுத்தமாக சொல்லிக் கொண்டாள் பல்லவி.

யாரென்றே தெரியாத ஒருவர் தன் முகத்தை பார்த்து தனக்கு உதவி செய்ததை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு எதிரில் இருந்த பெண்ணிடம் பல்லவி “தாங்க்ஸ்” என சொல்ல. “இட்ஸ் ஓகே” என சொல்லி புன்னகைத்து விட்டு மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்தார் அப்போது “நீங்க மங்களூரா?” என பல்லவி கேட்டாள்.

இல்ல கோயம்புத்தூர் தான், ஒரு வேலையா உடுப்பி போயிட்டு ரிடர்ன் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன், நீ?” 

நானும் கோயம்புத்தூர் தான்” என சொல்லிவிட்டு சற்று நெளிந்து உட்கார்ந்தாள் பல்லவி.

உடம்பு சரியில்லாம தனியா டிராவல் பன்றயே, கூட யாரையாவது கூட்டீட்டு வந்துருக்கலாம்ல”

இல்ல, லேசா ஃபீவர் தான், ஐ கேன் மேனேஜ்….”

உன் பேரு?”

பல்லவி, உங்க பேரு!”

சாவித்திரி…”

அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் இருவரும் மெளனமாக இருந்தனர். பேச ஆரம்பித்துவிட்டு எதுவும் பேசாமல் இருந்தால் ஏதாவது தவறாக அந்த பெண் நினைத்துக் கொள்வாரோ என எண்ணிய பல்லவி ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காகவே 

என்ன புக் படிக்கிறீங்க” என கேட்டாள்,

எரியும் பனிக்காடு” 

எரியும் பனிக்காடு, பேரே ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு, நாவலா?”

ஆமா நாவல் தான்…”

என்ன மாதிரி கதை…?”

டீ எஸ்டேட் சம்பந்தமான ஒரு கதை தான்…”

என்ன ஒரு கோ இன்சிடன்ட், நானும் ரீசன்ட்டா ‘த சீக்ரட்ஸ் ஆஃப் த டீ கார்டன்”னு (The Secrets of the Tea Garden) ஒரு புக் படிச்சுட்டு இருக்கேன், அதுவும் டீ கார்டன்ல நடக்குற நல்ல ஒரு ரொமான்டிக் த்ரில்லர் நாவல் தான், இந்த புக் எப்படி இருக்கும்?”

இது கொஞ்சம் ட்ராஜடி கதை தான், அண்ட், உண்மை சம்பவத்த தழுவி எழுதியிருப்பாங்க, ரொம்ப ஹெவியா இருக்கும் கதை”

பல்லவிக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது, ஆனால் இது வரை இப்படியான புத்தகத்தை அவள் படித்ததில்லை என்பதால் அதை பற்றி மேலும் கேட்டு தெரிந்துகொள்ள நினைத்தாள்,

இது ரியல் ஸ்டோரியா?, இஃப் யூ டோண்ட் மைண்ட், சுருக்கமா இத பற்றி சொன்னா, நெக்ஸ்ட் டைம் புக் வாங்க போகும் போது நானும் வாங்கி படிப்பேன்” 

கண்டிப்பா, இவ்வளவு ஆர்வமா கேட்டு சொல்லாம எப்படி…. நான் இன்னும் இதோட க்ளைமேக்ஸ நெருங்கல, பட் ஸ்டில், நான் இதுவர படிச்சதுல இருந்து சொல்றேன், இது நம்ம பார்க்கிற தேயிலை தோட்டத்த உருவாக்கின மக்களோட கதை, வேற வேற ஊர்கள்ள இருந்து மக்கள கூட்டீட்டு வந்து அங்க தேயிலை தோட்ட வேலை செய்ய வைக்கிறாங்க பிரிட்டிஷ் ஆட்கள், அப்போ என்னென்ன கொடுமைகள் நடந்துச்சுன்னு பேசுறது தான் இந்த நாவல்”

ஓ…. அப்படியா…” 

ம்…, சில பக்கங்கள் எல்லாம் ரொம்ப ஹெவியா இருக்கும், இன்னும் க்ளைமேக்ஸ் வரல அதுக்கு முன்னாடியே பல இடத்துல கண்ணு கலங்கீரும்” 

அய்யயோ, அப்போ இந்த புக்க என்னால படிக்க முடியாது போலயே…”

ஏன்…?”

ரொம்ப ட்ராஜடி கதைகள் படிச்சா என்னால சில நாளுக்கு தூங்க முடியாது, அதான் அப்படியான புக்ஸ் படிக்கிறதில்ல…”

இதுல ட்ராஜடி மட்டும் இல்ல ஒரு நல்ல காதல் கதையும் இருக்கு… ரொம்ப உயிரோட்டமா இருக்கும்…”

ம்… அடுத்த முற புக் வாங்க போறப்போ இத வாங்க முயற்சி பண்றேன்…” 

சப்ஜெக்ட் புக்ஸ்க்கு நடுவுல எப்படி வேற புக்ஸ் படிக்க டைம் கிடைக்குது?”

ஃப்ரீ டைம் இருந்தா ரிலாக்ஸ் ஆகுறதுக்கு புக் படிப்பேன்…”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த பெண்களில் சிலர் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர், அவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு அந்த பெண்கள் கூட்டத்தை இவர்கள் இருவரும் பார்த்தனர், ஆனால் அவர்கள் மலையாளத்தில் பேசியதால் அந்த பேச்சை கேட்க அவ்வளவு ஆர்வம் இல்லாமல், மீண்டும் இவர்கள் பேச்சை ஆரம்பித்தனர். 

நீங்க எப்பவுமே இப்படி டிராவல் பண்ணுவீங்களா!? என்றாள் பல்லவி…

ஆமா, நான் படிச்சதும் மங்களூர்ல தான், காலேஜ் சேர்ந்தப்போ டிராவல் பண்ண ஆரம்பிச்சேன், இப்பவும் அப்படியே கண்டின்யூ ஆகுது” 

நிறைய புக் படிப்பீங்களோ”

ம்…. நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன்” 

என் அம்மாக்கும் உங்க வயசு தான் இருக்கும், நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ அம்மா புக் படிச்சத பார்த்திருக்கேன்… இப்ப அவங்க அதெல்லாம் விட்டுட்டாங்க…”

அம்மாவும் புக் படிப்பாங்களா… அப்போ நீ புக் படிக்க இன்ட்ரஸ்ட் காட்டுறதுல என்ன ஆச்சரியம் இருக்கு…”

ஏன்… அம்மா படிக்கலன்னா புள்ளைங்க புக்ஸ் படிக்க மாட்டாங்களா?”

நான் அப்படி சொல்லல, புக்ஸ் படிக்கிறது ஒவ்வொருத்தரோட இன்ட்ரஸ்ட் தான், ஆனாலும் நம்ம கொழந்தையா இருக்கும் போது வீட்ல என்ன பார்க்குறமோ அது நமக்கு ஒரு இம்ப்ரஷன உருவாக்கும், அதுல இருந்து சூழ்நிலை மாற மாற கொஞ்சம் கொஞ்சமா நம்ம மோல்ட் ஆவோம், ஆனால் ஸ்டார்ட்டிங் வீடு தான், அதான் நீ சின்ன பிள்ளையா இருந்தப்போ அம்மா புக்ஸ் படிக்கிறத பார்த்து வளர்ந்ததால நீ படிக்கிறதுல ஆச்சரியம் இல்லைன்னு சொன்னேன்…” 

ம்…” என சொல்லி சிரித்தாள் பல்லவி

சாவித்திரியுடனான பேச்சு பல்லவிக்கு பிடித்திருந்தது, தன்னை விட வயதில் மூத்த ஒருவர் தன்னிடம் இவ்வளவு இயல்பாக தனக்கு பிடித்தது போல பேசுவது அவளுக்கு சாவித்திரியுடன் ஒரு இனக்கத்தை ஏற்படுத்தியது, தனக்கு பிடித்த புத்தகங்கள், தன் கல்லூரி வாழ்க்கை, எதிர்கால திட்டம் என என்னென்னவோ பேசினாள் பல்லவி, சாவித்திரியும் தன் பங்கிற்கு அவளுடைய கல்லூரி வாழ்க்கை வேலை என சிலவற்றை பேசினாள். சில மணி நேர உரையாடலில் இருவரும் பல வருடங்களாக தெரிந்தவர்கள் போல பேசிக் கொண்டிருந்தனர். தன் உடல் சோர்வை சாவித்ரியுடனான பேச்சில் கரைத்துக் கொண்டிருந்தாள் பல்லவி. 

உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?” என பல்லவி கேட்க,

நான் என் ஹஸ்பன்ட் அவ்வளவு தான்…” என பதிலளித்தாள் சாவித்திரி.

உங்க பசங்க?” என சட்டென கேட்டாள் பல்லவி…

பசங்க இல்ல” என சாதாரணமாக பதிலளித்தார் சாவித்திரி. 

சட்டென பல்லவியின் முகம் மாறியது, இந்த கேள்வியை கேட்டது அநாகரீகமாகிவிட்டதே, சாவித்திரி என்னை பற்றி என்ன நினைத்தாரோ என நினைத்து அமைதியானாள். பல்லவியின் முகம் மாறியதை கவனித்தார் சாவித்திரி, ஆனால் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. பல்லவிக்கு குற்ற உணர்வு ஒரு பக்கம் இருந்தாலும் அதை விட தன்னை சாவித்திரி தவறாக நினைத்து விடுவாரோ என்ற கவலை தான் அதிகமாக இருந்தது. 

ஸாரி” என மெல்லிய குரலில் பல்லவி சொன்னாள்.

இட்ஸ் ஓகே, ஃப்ரீயா விடு” என மிகச் சாதாரணமாக சொன்னார் சாவித்திரி.

உங்க ப்ரைவசில தலையிட்டது ஒரு மாதிரி இருக்கு எனக்கு, அக்செப்ட் மை அப்போலஜி ப்ளீஸ்” என பல்லவி உருக்கமாக சொன்னாள். 

இத்தனை வருஷத்துல நான் இந்த கேள்வியை ஒரு, ஒரு லட்சம் முறை ஃபேஸ் பண்ணியிருப்பேன், அட்லீஸ்ட் யூ ரியலைஸ்ட், அதுவே எனக்கு சந்தோஷம் தான், ஃப்ரீயா விடு பல்லவி” 

ஸாரி” என மீண்டும் சொன்னாள் பல்லவி,

சொசைட்டில எல்லாரும் யோசிக்கிறது தான, நீயும் அவங்கள பார்த்து தான வளர்ந்திருக்க, அப்போ நீ அப்படி சட்டுனு கேட்டதுல உன் தப்பு என்ன இருக்கு! ஃப்ரீயா விடு”

இல்ல, என்ன தான் இருந்தாலும் நான் அப்படி கேட்டிருக்க கூடாது, ஸாரி…”

பல்லவி, நீ ஸாரி சொல்றது முக்கியமில்ல, நெக்ஸ்ட் டைம் யாரு கிட்டயும் நீ இந்த கேள்வியை கேட்காம இருக்குறது தான் முக்கியம், அதுக்கு இந்த ரியலைசேஷன் உதவினா அது தான் நீ இப்ப ஸாரி சொல்றதுக்கான முழு அர்த்தத்தை கொடுக்கும்” என அழுத்தமாக சொன்னார் சாவித்திரி.

உங்கள ஹர்ட் பண்ணீட்டனா!”

இல்ல, இல்ல…”

ம்….” என மட்டும் சொல்லி மெளனமாக இருந்தாள் பல்லவி. 

ஆமா நம்ம என்ன பேசிட்டு இருந்தோம்” என சாவித்திரி பேச்சை தொடர முயற்சித்தார். பல்லவியால் குற்ற உணர்வில் இருந்து சட்டென வெளியே வர முடியவில்லை,

நீங்க எப்படி இவ்வளவு பொறுமையா பதில் சொல்லுறீங்க?” என்று கேட்டாள் பல்லவி

நான் என் கிட்ட ஒருத்தர் எப்படி பேசனும்னு நினைக்கிறானோ அப்படி தான் நான் மத்தவங்க கிட்ட பேசுவேன், அதனால தான் அப்படி இருக்கேன் போல…” என உதட்டோரம் சிறு புன்னகையுடன் சொன்னார் சாவித்திரி. 

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது பன்னிரண்டு பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் கையில் ஒரு ப்லாஸ்ட்டிக் கவருடன் அங்கு வந்து அவர்கள் சீட்டின் அடியில் போடப்பட்டிருந்த ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களை பொறுக்கி கையில் வைத்திருந்த ப்லாஸ்டிக் கவரில் போட்டுவிட்டு, அங்கிருந்த அனைவரிடமும் கையை நீட்டினான் சாவித்திரி அச்சிறுவனுக்கு ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார், அங்கிருந்த மற்ற சில பெண்களும் கையில் கிடைத்த சில்லறைகளை கொடுத்தார்கள். பல்லவியும் முணுமுணுத்துக் கொண்டே சில சில்லறை காசுகளை கொடுத்தாள். 

என்ன ஆச்சு…” என சாவித்திரி கேட்க,

சின்ன பையன இப்படி பிச்சையெடுக்க விட்டுட்டு, இவங்க அம்மா அப்பா என்ன தான் செய்றாங்க?” என பல்லவி சொல்லவும் 

அந்த பையன் பிச்ச எடுக்கல பல்லவி”

படிக்க வேண்டிய வயசுல இப்படி ரயில்ல எல்லார் கிட்டயும் கைய நீட்டி கேக்குறது, பிச்ச இல்லையா?” 

அந்த பையன் படிக்க வேண்டிய வயசுல இப்படி வேலை செய்யுறது அநியாயமான விஷயம் தான், ஆனாலும் அவன் வெறுமனே கையை நீட்டி பிச்சை போடுங்கன்னு கேட்காம, ஏதோ ஒரு வேலையை செஞ்சிட்டு அதுக்கு கூலி கொடுங்கன்ற மாதிரி தான் காசு வாங்கினான்”

நீங்க சொல்ற மாதிரி அவன் பிச்சை எடுக்கலன்னே வச்சிப்போம், படிக்க வேண்டிய வயசுல இப்படி வேல செய்ய விடுறது தப்பு தான?” 

எந்த அம்மா அப்பாவாவது அவங்க பசங்கள விரும்பி இப்படி வேலை செய்ய விடுவாங்களா, ஒரு ரெண்டு நிமிஷம் அந்த பையன பார்த்துட்டு அவன் அம்மா அப்பாவ வில்லன் மாதிரி புரிஞ்சிக்கிறது தப்பு பல்லவி!” 

நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”

அந்த பையன் பேக்கிரவுண்ட் என்ன அம்மா அப்பா இருக்காங்களா இல்லையான்னு கூட தெரியல, பட் ஸ்டில், இப்படி ஒரு பையன வேலைக்கு அனுப்புற அளவுக்கு அவங்க வீட்டு சூழ்நிலை இருக்குன்னா எந்த அளவுக்கு அவங்க கஷ்ட்டத்துல இருப்பாங்க?”

அதெல்லாம் சரி தான், ஆனாலும் இதுக்கு இப்படி காரணம் சொல்லிட்டு, இந்த மாதிரி பசங்க படிக்காம வேல செய்யுறத நியாயப் படுத்த முடியாதுல்ல?”

ம்…சரி தான், ஆனால் இதெல்லாம் ஒரு தனி மனுஷன் சம்பந்தப்பட்டது இல்ல பல்லவி, இந்த சமூகம் சம்பந்தப்பட்டது”

புரியல…”

இப்படி வறுமையில் இருக்குறவங்களுக்கு கவர்மென்ட் உதவி செஞ்சு அவங்களோட வாழ்வாதாரத்த சரி செஞ்சாலே இதெல்லாம் சரி ஆக வாய்ப்பிருக்கு” 

கவர்மென்ட் இதுக்கெல்லாம் எதுவும் ஆக்ஷன் எடுக்க மாட்டாங்களா!?”

வறுமை ஒழிப்புக்கு நிறைய திட்டங்கள் இருக்கு, ஆனாலும் சில மக்கள் கவர்மென்ட் கண்ணுலையே பட மாட்டாங்க, ஏன்னா அவங்களுக்கு கவர்மென்ட்ல இருந்து கிடைக்கிற எந்த ஐடி ப்ரூஃப்பும் இருக்காது, அவங்க அரசாங்க கணக்குலையே இருக்க மாட்டாங்க, அவங்கள மாதிரி இருக்குறவங்க தான் ரொம்ப வறுமையில இருப்பாங்க, அப்படித் தான் இந்த பையனும் இருப்பான்னு தோனுது, இல்லைன்னா அத்தியாவசிய வாழ்க்கை நடத்துற அளவுக்கு கூட வழியில்லாம, படிக்கிற வயசுல இவன் இப்படி வேலை செஞ்சுட்டு இருக்க மாட்டான், கண்டிப்பா ஒரு கவர்மென்ட் ஸ்கூல்லயாவது இவன் படிச்சிருப்பான், இதெல்லாம் அரசாங்கம் புரிஞ்சிக்கிட்டு சரி செய்ய இன்னும் பல வருஷம் ஆகும் போல”

நீங்க சொல்றதெல்லம் எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியல, எல்லாம் புதுசா இருக்கு”

நீ இப்ப தான இந்த உலகத்த பார்க்க ஆரம்பிச்சிருக்க, நம்மள சுத்தி உள்ள விஷயங்கள அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சா எல்லாம் புரிய ஆரம்பிச்சிரும், நீயும் சீக்கிரம் புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்” 

நீங்க இதெல்லாம் எப்ப யோசிக்க ஆரம்பிச்சீங்க….?”

சரியா இந்த நாள் இந்த தேதின்னு சொல்ல முடியாது… நான் எப்ப என் ஊர விட்டு வெளிய வந்து, உலகத்த பார்க்க ஆரம்பிச்சனோ அப்ப இருந்து என் பார்வையும் சிந்தனையும் மாறியிருக்கும்னு நினைக்கிறேன்…”

நீங்க நல்லா பேசுறீங்க…”

சாவித்திரி பல்லவியின் முகத்தை பார்த்து மெல்லிய புன்னகை பூத்தாள்.

உங்கள பார்க்கும் போது ஏதோ ரொம்ப வருஷம் பழகினா மாதிரி இருக்கு…” என பல்லவி சொன்னாள்.

அப்படியா..? எனக்கு உன்ன பார்க்கும் போது என்னோட காலேஜ் நாட்கள்ல நான் உன்ன மாதிரி தானே இருந்தேன்னு தோனுது…” 

என்ன மாதிரின்னா…”

நீ இப்ப பேசுற மாதிரி தான் நானும் அப்போ பேசினேன், உனக்கு இருக்குற சின்ன சின்ன தயக்கம் பயம் இதெல்லாம் பார்க்கும் போது பலவருஷத்துக்கு முன்னாடி இருந்த என்னை நானே பார்க்குற மாதிரி இருக்கு, அத தான் சொன்னேன்…”

ஊர விட்டு வெளிய வந்ததுல இருந்து தான் உலகத்த பார்க்க ஆரம்பிச்சேன்னு சொன்னீங்கல்ல, அப்போ உங்க ஊரு ரொம்ப உள்கிராமமா

அப்படியில்ல…. நேரடியா அத அப்படி புரிஞ்சிக்க கூடாது, நம்ம வீட்டுக்குள்ளேயே அம்மா அப்பா கைக்குள்ளையே இருந்து வளர்ந்திருப்போம், அவங்க எத நமக்கு காட்டுறாங்களோ அது தான் நம்ம உலகமா இருந்திருக்கும், ஆனால் நம்ம தனியா படிப்புக்காகவோ வேலைக்காகவோ அவங்க கைய விட்டு வெளிய வந்ததுக்கு பிறகு தான், இந்த உலகத்த நம்ம நம்மளோட பெர்ஸ்பெக்டிவ்ல பார்ப்போம், அப்படி பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஒரு சுதந்திர உணர்வு வரும், அந்த சுதந்திர உணர்வோட நம்ம எல்லா விஷயத்தையும் பார்த்து புரிஞ்சிக்கும் போது எல்லாமே நமக்கு புதுசா தெரியும், அத தான் அப்படி சொன்னேன், அன்ட் அந்த லிபர்ட்டி தான் இருக்குறதுலையே பெஸ்ட் ஃபீலிங், அப்போ நமக்கு அப்படியே ரெண்டு ரெக்க முளைச்ச மாதிரி இருக்கும்…” என சொல்லி கண்களை மூடி சிலாகித்து சொன்னார் சாவித்திரி… பல்லவி சாவித்திரியையே பார்த்துக் கொண்டிருந்தாள்… மீண்டும் சாவித்திரியே தொடர்ந்தார்…

இப்படி சுதந்திரமா வெளிய வர்ற வர, நம்ம வீட்ல சொல்லிக் கொடுத்தது எல்லாமே சரின்னு நினைச்சிட்டு இருப்போம், ஆனால் அதுல சில விஷயங்கள் தப்பா கூட இருக்கலாம், தப்ப தப்புன்னு புரிஞ்சிக்க கூட இந்த எக்ஸ்போஷர் தேவை, அது நம்ம வெளி உலகத்தோட பழகும் போது தான் நமக்கு கிடைக்கும்…”

ம்… புரியுது” என சொன்னாள் பல்லவி, தானே ரொம்ப நேரம் பேசி விட்டது போல சாவித்திரிக்கு தோன்றவும்

இப்ப உடம்புக்கு பரவாயில்லையா!?” என சாவித்திரி கேட்டு, பல்லவியையும் பேச்சில் இணைக்க முயற்சித்தார்,

ம்… உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல மைண்ட் டைவர்ட் ஆயிருச்சு, வலியை பற்றி யோசிக்கவே இல்ல, ஃபீலிங் பெட்டர்…” என சொல்லி சிரித்தாள் பல்லவி. பேச்சின் சுவாரசியத்தில் எந்தெந்த ரயில் நிலையங்கள் கடந்தது என தெரியவில்லை இருவருக்கும், சாவித்திரி கைக்கடிகாரத்தை பார்த்தார், மணி 4.35 என காட்டியது

இன்னும் கொஞ்ச நேரத்துல சொர்னூர் வந்துரும், அப்புறம் பாலக்காடு கோயம்புத்தூர்” என பொதுவாக சொன்னார் சாவித்திரி. பல்லவி சாவித்திரியை பார்த்து சிரித்து விட்டு, மீண்டும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் துவங்கினாள். சாவித்திரியும் கையில் வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் திறந்து பக்கங்களை புரட்ட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் சொர்னூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். இவ்வளவு நேரம் கொஞ்சம் கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்த பெண்களுக்கான பெட்டியில் இப்போது மீண்டும் பெண்கள் கூட்டம் அலைமோதியது, சாவித்திரியின் அருகில் வந்து அமர்ந்த பெண்

நீங்க எங்க இறங்குவீங்க?” என கேட்டார்

கோயம்புத்தூர்…” என பதில் சொன்னார் சாவித்திரி

பெண்கள் பெட்டியில் கல்லூரி மாணவிகள் கூட்டம் ஒன்றும் ஏறியது, சில மாணவிகளுக்கு இடம் கிடைத்தது சிலருக்கு கிடைக்கவில்லை, இடம் கிடைத்தவர்களிடம் தங்கள் தோள்ப் பையை கொடுத்து விட்டு நின்று கொண்டிருந்தார்கள் இடம் கிடைக்காதவர்கள். பல்லவியின் பக்கத்தில் ஒரு மாணவி அமர்ந்திருந்தாள், அவள் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஒரு நடுத்தர வயது பெண்

எப்ப பாரு ஃபோன் தான் இந்த கால பிள்ளைகளுக்கு” என முணுமுணுத்தார், அது அந்த மாணவிக்கு கேட்டுவிட்டது, “என் ஃபோன் நான் பேசுறேன், உங்களுக்கு என்ன? உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க” என வெடுக்கென சொன்னாள் மாணவி. அந்த நடுத்தர வயது பெண் “நல்லது சொன்னா சண்டைக்கு வர்றத பாரு” என சற்று காட்டமாக சொல்லி தான் ஒன்றும் அந்த மாணவியின் பேச்சால் வருத்தப்படவில்லை என்று காட்டிக் கொண்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பல்லவியும் சாவித்திரியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். “யாரு என்ன செஞ்சா மத்தவங்களுக்கு என்ன, எல்லாத்துலையும் மூக்க நுழைச்சா இப்படி தான் நோஸ் கட் ஆகும்…” என அந்த நடுத்தர வயது பெண்ணை பார்த்து  நினைத்துக் கொண்டாள் பல்லவி. கூட்ட நெரிசல் இருந்ததால் இருவராலும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ள முடியவில்லை. இடையிடையே பார்த்து சிரித்துக் கொண்டனர். 

நெரிசலில் பல்லவிக்கு மூச்சு முட்டியது, ஜன்னல் பக்கமாகவே தலையை வைத்துக் கொண்டு கொஞ்சம் காற்று வாங்க முயற்சித்தாள். எப்போது தான் இந்த கூட்டம் குறையும் என தவிப்புடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தினாள். ஒரு மணி நேரம் ஒரு யுகம் போல சென்றது, கடைசியாக பாலக்காடு ரயில் நிலையம் வந்தடைந்தனர், அங்கு பலரும் இறங்கியதால் கூட்டம் சற்று குறைந்தது. பல்லவி கைப்பேசியை எடுத்து தான் பலாக்காடு ரயில் நிலையம் வந்து சேர்ந்ததை அவள் அம்மாவிடம் சொன்னாள். பிறகு சாவித்திரியை பார்த்தாள், சாவித்திரியும் பல்லவி அழைப்பை துண்டிக்க காத்திருந்தது போல, “டீ ஏதாவது குடிக்கிறயா” என கேட்டார். “இல்ல, வேண்டாம்” என சொன்னாள் பல்லவி.

என்ன ஒரு மாதிரி இருக்க…”

ரொம்ப நேரம் உக்காந்துட்டு வர்றேன்ல, அதன் டயர்ட்டா இருக்கு”

இன்னும் ஒன்றரை மணி நேரம் தான், சீக்கிரம் போயிரலாம்” என ஆறுதலாக பேசினார் சாவித்திரி.

ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றாக கடந்தது மாலை நேரம் வெயிலின் தாக்கம் இல்லாமல் கூட்ட நெரிசல் இல்லாமல் சற்றே அமைதியாக இருந்தது சூழல். ஜன்னல் வழியே வந்த காற்று பல்லவிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது, கொஞ்சம் குளிரும் அனுபவப்பட்டது. முகத்தில் குளிர்ந்த காற்று வீசினால் காய்ச்சல் அதிகமாகிவிடும் என தன் பக்கமிருந்த ஜன்னலை மூடினாள் பல்லவி. ஆனாலும் சாவித்திரி பக்கம் இருந்த ஜன்னல் வழி காற்று வந்து கொண்டிருந்தது, சாவித்திரி தன் பக்கம் இருந்த ஜன்னலையும் மூடினார், காற்று உள்ளே வருவது குறைந்தது. பல்லவியின் சீட்டில் யாரும் இல்லாததால் காலை தூக்கி மேலே வைத்துக் கொண்டு கொஞ்சம் சௌகரியமாக உட்கார்ந்தாள். இவர்கள் இருவரும் இறங்குவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருந்தது, கையில் இருந்த புத்தகத்தை சாவித்திரி தன் பையில் வைத்தார். அப்போது “என்ன யாருன்னே உங்களுக்கு தெரியாது, ஆனாலும் எனக்கு என்ன ஏதுன்னு கேட்குறீங்க, அக்கறையா பேசுறீங்க, நிறைய விஷயம் புதுசா என்ன யோசிக்க வச்சிருக்கீங்க, இதுக்கெல்லம் நன்றின்னு சொன்னா பத்தாது, ஆனால் வேறென்ன சொல்றதுன்னு தெரியல” என்றாள் பல்லவி சாவித்திரியியை பார்த்து.

இதுல என்னம்மா இருக்கு” என சாவித்திரி எந்த அலட்டலும் இல்லாமல் சிறு புன்னகையுடன் சொன்னார். 

நீங்க எப்பவுமே இப்படி தானா?” என சலனமில்லாத முக பாவத்துடன் பல்லவி கேட்க,

இப்படி தனான்னா, எப்படி? என்றாள் சாவித்திரி

எல்லார் கிட்டயும் அன்பா, எல்லாருக்கும் பிடிச்சா மாதிரி…”

அப்படியெல்லாம் சொல்ல முடியாது, எனக்கும் கோவம் வரும், நானும் மத்தவங்கள திட்டுவேன், எல்லா மனுஷங்களுக்கும் இருக்குற எல்லா குணங்களும் எனக்கும் இருக்கு, என்ன அதோட அளவு வேணா கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்”, சாவித்திரியின் இந்த பதிலைக் கேட்டு பல்லவி சிரித்தாள். கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு, “உங்களுக்கு எல்லாத்த பற்றியும் ஒரு கருத்து இருக்குல்ல, எதை கேட்டாலும் ஆமா இல்லைன்னு கடமைக்கு பதில் சொல்லாம விளக்கமா உங்க ஸ்டான்ட் என்னன்னு சொல்றீங்க” என சொன்னாள் பல்லவி.

ஒரு கேள்விக்கு ஆமா இல்லைன்னு பைனரியா பதில் சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல பல்லவி, ஏன்னா இங்க எதுவுமே பைனரி இல்ல, எல்லா விஷயமும் ஒரு ஸ்பெக்ட்ரமா தான் இருக்குன்றது என் புரிதல், அதுல நம்ம எங்க இருந்து எப்படி பார்க்குறோம்றத பொறுத்து நம்ம கருத்து ஒவ்வொரு சூழ்நிலையிலையும் மாறும், அப்படி இருக்கும் போது எப்படி ஆமா இல்லைன்னு மட்டும் பதில் சொல்ல முடியும்!?” என்றார் சாவித்திரி..

நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க…”

ரெண்டாவது முறை இத சொல்ற…”

உண்மை தான, எத்தன முற வேணாலும் சொல்லலாம்…”

சாவித்திரி பல்லவியை பார்த்து சிரித்தார். 

எப்படி இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டீங்க?” என பல்லவி கேட்க

“45 வயசுக்கு மேல ஆகுதுல்ல, அதுவா புரிஞ்சிருச்சின்னு நினைக்கிறேன்…” என சொல்லி மெளனமாக சிரித்தார் சாவித்திரி. 

அந்த சிரிப்பிற்கு பிறகு இருவருக்குமிடையில் ஒரு மெளனம் நிலவியது, ஏதோ சொல்ல வருவது போல பல்லவி சாவித்திரியின் முகத்தை பார்க்கவும், அதே நேரத்தில் சாவித்திரியும் பல்லவியை பார்த்தார், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். இருவரும் இறங்க வேண்டிய கோயம்புத்தூர் சந்திப்பு வந்தது, தங்கள் தோள் பைகளை எடுத்து இறங்க தயாராக தங்கள் இருக்கைகளின் முன் எழுந்து நின்றார்கள். ஒரு கையில் தோள் பையை மாட்டிக் கொண்டு எழுந்த சாவித்திரி, கோழிக்கோட்டில் பல்லவி டீ குடித்த கோப்பையை மடித்து வைத்த காகிக பொட்டலத்தை எடுக்க திரும்பிய போது, அது அங்கு இல்லை, கீழே விழுந்து விட்டதோ என கீழே தேடிவிட்டு எதேச்சையாக பல்லவியின் கையை பார்த்தார், அந்த பொட்டலம் பல்லவியின் கையில் இருந்தது, சாவித்திரி பல்லவியின் முகத்தை பார்க்கவும், “நானே குப்ப தொட்டியில போட்டர்றேன்” என்றாள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow