விரைவில் சபரிமலையில் ‘ரோப் கார்’ சேவை.. மத்திய அரசு திட்டம்!
அமர்நாத் குகை கோயில் முதல் கேரளாவில் உள்ள சபரிமலை வரை நாடு முழுதும் உள்ள 18 ஆன்மீக தலங்களில் 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரோப் கார் என்பது, கேபிள்களைக் கொண்டு இயக்கப்படும் தொங்குவண்டி வகையாகும். இது கம்பி வட ஊர்தி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ரோப் கார் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ரோப் கார் சேவையானது கோயில்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலைக்கோயில்களுக்கு செல்ல பக்தர்கள் இந்த ரோப் கார் சேவையை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணிசுவாமி கோயில் உள்ளிட்ட பல இடங்களில் ரோப் கார் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை லிமிடெட் தலைமையிலான, 'பர்வத்மாலா பரியோஜனா'வின் கீழ் 18 ஆன்மீக தலங்களில் 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவில், உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயில், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோயில் ஆகியவற்றுக்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலின் பால்டல் பகுதியில் இருந்து 11.6 கி.மீ., தொலைவுக்கு ரோப் கார் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பம்பையில் இருந்து, 2.62 கி.மீ., தொலைவிற்கு ரோப்கார் திட்டம் அமைய உள்ளது. தமிழகத்தில் உள்ள பர்வதமலை, காஷ்மீரின் தாஜிவாஸ் பனிப்பாறை, ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள அமர்கோட்டை, மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி பிறந்த இடமான ஷிவ்னேரி கோட்டை உள்ளிட்ட 18 இடங்களில், இந்த திட்டத்தின் வாயிலாக ரோப் கார் சேவை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






