SPG Commando:பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?
பிரதமர் மோடி பாதுகாப்புக்கு.. தினசரி ரூ.1.34 கோடி.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம் செலவு!

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கும் 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்படும் நிதி தொடர்பான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி பிரதமரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5.5 லட்சம் செலவிடப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணிக்குத் தனது நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிலையில், அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
எஸ்பிஜி படைக்கு எவ்வளவு?
மேலும், எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி உள்துறை அமைச்சகத்திற்கு ரூ 2,33,210.68 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் சுமார் 70%, அதாவது ரூ 1,60,391.06 கோடி நாட்டின் பாதுகாப்புப் படைகளான சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் படைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த படைகள் தான் உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.. அதேபோல பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரின் பாதுகாப்பிற்கு ஒரு நாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 9303 ரூபாயும் செலவிடப்படுகிறது.
எஸ்பிஜி படை என்றால் என்ன?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1988ஆம் ஆண்டு இந்த எஸ்பிஜி உருவாக்கப்பட்டது. இந்த எஸ்பிஜி படை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எஸ்பிஜி படையில் உள்ள வீரர்கள் அனைவருமே அதிநவீன சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இந்தியப் பிரதமரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதே எஸ்பிஜி அமைப்பின் பிரதான பணியாகும். இந்த எஸ்பிஜி படையில் சுமார் 3000 பேர் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?






