போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்துக் கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனம். இதன் தலைவராக பதவி வகித்தவர் தான் போப் பிரான்சிஸ்.

ஜார்ஜ் மேரியோ என்பதுதான் இவரது இயற்பெயர். 2013ஆம் ஆண்டு இவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக பதவியேற்றார். பதவிகாலத்தில் தன்னுடைய எளிமை மூலமும் கத்தோலிக்க திருச்சபையை நேர்மையாகவும் நடத்தி சமூக நீதிக்கான ஒரு அமைப்பாக மாற்றிய பெருமை போப் பிரான்சிஸுக்கு உண்டு.
உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட மத அமைப்புகளில் ஒன்றாக கத்தோலிக்க திருச்சபை இருக்கிறது. இதன் தலைவர் தான் போப் பிரான்சிஸ். ஆனால் இதற்கான தலைக்கணம் ஒருபோதும் அவரிடம் இருந்தது கிடையாது. அனைவரும் அணுகும் வகையில் எளிமையாக இருந்தவர். சிறுவயதில் இருந்தே தனக்கான வேலைகளை தானே செய்து கொள்ள வேண்டும் என விரும்பியவர் .
1.3 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக பதவி வகித்திருந்தாலும் அவரது சொத்து மதிப்பை கேட்டால் நாம் அனைவரும் ஆச்சரியமடைந்து விடுவோம். கத்தோலிக்க திருச்சபை மூலம் தனக்கு வந்த மாத சம்பளத்தை வேண்டாம் என கூறியவர். போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தங்குவதற்கு என அதிகாரப்பூர்வமான இல்லங்கள், 5 கார்கள் ஆகியவை திருச்சபையாலே வழங்கப்பட்டுள்ளன. அது தவிர அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது ஏற்படக்கூடிய செலவுகள் அனைத்தும் கத்தோலிக்க திருச்சபையாலேயே பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பு பதவி வகித்த போப்புகள் ஆடம்பரமான மாளிகையை தேர்வு செய்து வசித்த நிலையில் ஆடம்பர குடியிருப்பு வேண்டாம் எனக் கூறி விருந்தினர்கள் தங்கும் இல்லத்தை தனக்கு ஏற்ற எளிமையான ஒரு குடியிருப்பாக மாற்றி அதில் வசித்து வந்தாராம்.
2018 ஆம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் போப் பிரான்சிஸுக்கு 2 லட்சம் டாலர்கள் மதிப்பிலான லம்போர்கினி காரை பரிசாக அளித்தது. ஆனால் போப் பிரான்சிஸ் அந்த காரை தன்னுடைய சொந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவில்லை அதை பெற்று அதை ஏலத்தில் விடுத்து அந்த பணத்தை எடுத்து பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் தானமாக வழங்கினார்.
உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட ஒரு திருச்சபை தான் கத்தோலிக்க திருச்சபை. 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரொக்க பணம், 17 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கலைப் பொருட்கள் மற்றும் பங்குகளில் முதலீடு, தங்க நாணயங்கள் என இதன் சொத்து மதிப்பை நம்மால் கணக்கிடவே முடியாது.
கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தும் நேர்மையாகவும் மக்கள் நலனுக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்தவர் தான் போப் பிரான்சிஸ். குறிப்பாக புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு தலைவராக அவர் தொடர்ந்து நீடித்து இருக்கிறார்.
What's Your Reaction?






