நோபல் பரிசு எப்படி உருவானது? இதற்கு பின்னால் இப்படியொரு கதையா?
நோபல் பரிசு எப்படி உருவானது? இதற்கு பின்னால் இப்படியொரு கதையா?

24 காரட் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட பதக்கம், பாராட்டுரையுடன் கூடிய பட்டயம், சுமார் 8 கோடி ரூபாய் பரிசு, ஆயிரத்துக்கும் குறைவானோர் அடங்கியிருக்கும் பட்டியலில் பெயர், உலகளாவிய புகழ். இத்தகைய மரியாதைக்குரிய ஒரு பரிசை உருவாக்கி, அமைதியின் தூதுவராகவும், நல்லிணக்கத்தை விரும்புபவராகவும் தற்காலத்தில் அறியப்படும் ஆல்ஃப்ரடு நோபல், ஒரு நாசகார விஞ்ஞானி. ராணுவத்திலும் சுரங்கம் உள்ளிட்ட கட்டுமானத் துறையிலும் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட வெடிபொருள்களைக் கண்டுபிடித்தவர். இவற்றில் அதிகமாக பொதுவெளியில் அறியப்படுவதுதான் டைனமைட். உண்மையில் டைனமைட்டை விடவும் சக்திவாய்ந்த பல வெடிபொருள்களை ஆல்ஃப்ரடு நோபல் கண்டுபிடித்திருக்கிறார்.
அப்படியொரு ஆய்வின்போது, பெரும் விபத்து நடந்தது. அதில் தனது சகோதரர் எமிலையும் பல தொழிலாளர்களையும் பறிகொடுத்தார் ஆல்ஃப்ரடு நோபல். பல நாட்டு அரசுகள் இவரது வெடிபொருள்களைத் தடைசெய்தன. இருப்பினும் தலைமறைவாக இருந்தபடியே பலவெடிபொருள்களை உருவாக்கினார். இவற்றுக்குக் காப்புரிமை பெற்றதன்மூலம் வாழ்நாள் முழுவதும் பெரும்பணம் இவருக்குக் கிடைத்தது.
இன்று முதல் நோபல் பரிசு அறிவிப்பு..!
ஸ்வீடனின் மிகப்பெரிய பொறியியல் குடும்பத்தில் 1864ஆம் ஆண்டு பிறந்த ஆல்ஃப்ரடு நோபலுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். 1888 ஆம் ஆண்டில், சகோதரர் லுட்விக் நோபலின் மரணத்தின்போது பல செய்தித்தாள்கள் ஆல்ஃப்ரடு நோபல் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டன. அதில் ஒரு பிரெஞ்சு இதழ். மரணத்தின் தூதர் இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தது. இறப்பதற்கு முன்னரே தனது இரங்கல் குறிப்பைக் கண்ட ஆல்ஃப்ரடு நோபலின் மனம் வெடித்தது. வரலாற்றில் இப்படியொரு மோசமான மனிதனாக தாம் பதிவு செய்யப்படக்கூடாது என்று விரும்பினார். கொடூரமான வழியில் சம்பாதித்த தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவுசெய்வது என முடிவெடுத்தார். அதற்காக பல உயில்களை எழுதினார்.
அதில் கடைசி உயில்தான் இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் நோபல் பரிசு பற்றியது. தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94 சதவீதத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியில், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் பணியாற்றியவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய். 1896இல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக நோபல் இறந்தார். அவரது விருப்பப்படி, 1901ஆம் ஆண்டு முதல் 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1969ஆம் ஆண்டு முதல் ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபலின் பெயரிலேயே பொருளாதாரத்துக்கான பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சர்ச்சை, மகிழ்ச்சி, ஏமாற்றம், புறக்கணிப்பு என பல பண்புகளைக் கொண்டிருந்தாலும் இப்போதும் உலகிலேயே மிகவும் மதிக்கப்படும் விருதாக நோபல் பரிசு திகழ்கிறது.
What's Your Reaction?






