களரி

களரி என்பது தமிழர்களின் போர்க்கலைகளுள் முதன்மையானது. இதன் மூலமாகவே உலகின் பிறப் போர்க்கலைகள் உருவாகியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

Jan 30, 2025 - 10:37
Jan 30, 2025 - 10:36
 0  1
களரி

களரியைப் பற்றியக் குறிப்புகள் அனைத்தும் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. எனவே, இந்தக் கலை தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. களரிப்பயட்டு என்று அழைக்கப்படும் இந்தக் கலை தற்காப்புக் கலைகளின் தாயாகும். குன்ஃபூ, கராத்தே, ஜியூ-ஜுட்ஸு ஆகியக் கலைகள் களரியின் வாயிலாகத் தோற்றம் பெற்றன என்பது பலரின் ஆய்வுக் கருத்தாக உள்ளது. அமெரிக்க அறிஞரான பிலிப் சார்லி என்பவர், தன்னுடையப் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் பின்னர் ‘உடம்பெல்லாம் கண்ணானால்’ என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதன் மூலமாகவே களரிப்பயட்டு குறித்த விளக்கம் வெளிநாடுகளுக்குச் சென்றது.

களரிப்பயட்டு எனப்படும் சொல்லானது பழந்தமிழ் வார்தைகளான களரி (களம்) + பயிற்று (பயிற்சி) ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும். பண்டையத் தமிழகத்தில் களரி எனும் கலை சிறந்தப் போர் கலையாகத் திகழ்ந்துள்ளது. சங்கப்பாடல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பாடல்களில் களரி குறித்தத் தகவல்கள் கிடைக்கின்றன. சங்ககால மன்னர்களின் படைவீரர்களுக்கு களரிப் பயிற்சி தரப்பட்டுள்ளது. பண்டைக்காலத்தில் களரிக்கான பயிற்சிக் கூடங்கள் "சாலைகள்" என்று அழைக்கப்பட்டுள்ளன. காந்தளூர் சாலை, பரவூர் சாலை, மூழிக்குளம் சாலை போன்றவை அக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டது தெரியவருகிறது. இச்சாலைகளுக்குத் தலைமை ஏற்றவர்கள் பட்டதிரி என்றும் மாணவர்கள் சட்டர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தச் சாலைகளுக்கு அரசர்கள் நிலங்களைத் தானமாக வழங்கியது பல கல்வெட்டுகள் மூலம் உறுதியாகிறது. கி.பி.7-9ம் நூற்றாண்டு வரையில் நிறைய களரிப்பயட்டுச் சாலைகள் பழக்கத்தில் இருந்தன. ஒரு சாலை இன்னொரு சாலையை விடச் சிறப்பாகச் செயலாற்ற வேண்டி, புதிய தாக்குதல் முறைகள் கண்டறியப்பட்டன. இதுவே களரிப்பயட்டின் பொற்காலம் என நோக்கப்படுகிறது.

களரிப்பயட்டு நான்கு நிலைகளில் பயிற்றுவிக்கப் படுகிறது. முதல் நிலையான மெய்ப்பயட்டு முறையில் சிறிய உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்படும். இரண்டாவது நிலை கோல்தாரி பயட்டு எனப்படும். இங்கு மரத்தால் ஆன ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். மூன்றாவது நிலை அங்கத்தாரி பயட்டு/ஆயுத்தப்பயட்டு எனப்படும். வெட்டும் முனைகளை கொண்ட கூரிய உலோக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சிகள் இதன்போது வழங்கப்படும். இறுதியாக அங்கைப்பயட்டு எனும் ஆயுதம் அல்லாத சண்டைபயிற்சி வழங்கப்படும். இந்த முறையில் எந்த வகையானத் தாக்குதல்களையும் ஆயுதங்கள் ஏதுமின்றி சமாளிக்க முடியும். இதுவே தற்காப்புக் கலைகளுக்கான அடிநாதம் ஆகும். இதனைப் பின்பற்றியே குன்ஃபூ, கராத்தே போன்ற இன்றையக் கலைகள் இயங்குகின்றன.

தாக்குதல் முறைகள் மட்டுமின்றி மருத்துவ முறைகளும் களரியில் அடங்கும். மெய்யுழிச்சல் எனப்படும் முறையில், மருத்துவ முறையில் தயார் செய்யப்பட்டத் தைலங்களை உடலில் பூசி, கால்களால் உடலை நீவி விட்டு, தசைகளை இளக்கமடையச் செய்வார்கள். தற்காலத்தில் நரம்புகோளாறுகளுக்குச் சிகிச்சையாக இந்த மெய்யுழிச்சல் கையாளப்படுகிறது.

களரியின் பிரயோக முறைகளைக் கொண்டு வடக்கன் முறை களரி, தெற்கன் முறை களரி என இரு வகையாக பிரிக்கலாம். பரசுராமரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் வடக்கன் முறையில் வாள் மற்றும் உருமி பயிற்சி முதன்மையாகக் கற்றுத்தரப்படுகிறது. அக்காலத்தில், போர்வீரர்களுக்கு இந்தப் பயிற்சி முறை அளிக்கப்பட்டது. அகத்தியரால் உருவாக்கப்பட்ட தெற்கன் முறையானது போர்க்குரியதாக இல்லாமல் ஒரு தற்காப்புக் கலையாகக் காணப்படுகிறது. வெறுங்கை அல்லது அங்கைப்பயட்டு எனப்படும் ஆயுதமில்லாதத் தாக்குதல்கள் இங்கு முதன்மைப் பெறுகின்றன. படுவர்மம், தொடுவர்மம், நோக்குவர்மம், தட்டுவர்மம், நுனிவர்மம் மெய்தீண்டா வர்மம் முதலிய வர்மத் தாக்குதல்கள், தாக்குதல் முறையாக மட்டுமில்லாது சிகிச்சை முறையாகவும் உள்ளன.

முற்காலத்தில் வளம் பெற்றுத் திகழ்ந்த இந்தக் கலை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மெல்லமெல்ல சரியத்தொடங்கியது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் களரிப்பயட்டு தன்னுடைய போர்க்கலை எனும் அடையாளத்தை இழந்தது. ஒரு தற்காப்புக்கலையாகவும், கதக்களி முதலிய ஆட்டவகைகளுக்கானப் பயிற்சியாகவும் களரி இன்று இருக்கிறது. இந்த கலையை முழுமையாக கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியதிருக்கும். தன்னம்பிக்கை இல்லாமல் தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்களுக்குக் களரி நல்லதொரு பாடமாக அமையும்.

இன்று உலக அரங்கில், தற்காப்புக் கலைகளில் மிகவும் மூத்தக் கலையாக, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டக் கலையாக களரி திகழ்கிறது. நிகரில்லாத இந்தக் கலை தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்பது உலக மக்களிடையே தமிழர்களுக்கு பெருமதிப்பைப் பெற்றுத் தருவதாக உள்ளது. இந்தக் கலையை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் படி, குழந்தைகளுக்கு இதனைப் பயிற்றுவிப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow