உங்க பேர்ல மொத்தமா எவ்வளவு கடன்கள் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா? பான் நம்பர் இருந்தா போதும்..!!
நம்முடைய பல்வேறு தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் என குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் நாம் கடன் பெற்றுக் கொண்டு மாதந்தோறும் ஈஎம்ஐ-ஆக அவற்றை திரும்ப செலுத்தி வருகிறோம். இவ்வாறு கடன் பெறும்போது நம்முடைய நிதி ரீதியான ஆவணங்களை பெறுவதற்கு வங்கிகள் கட்டாயம் நம்முடைய பான் எண் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை கோருகின்றன.

இந்த பான் எண்ணை கொண்டே ஒருவர் பெயரில் எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை நாம் எளிமையாக கண்டறிய முடியும். அதற்கான வழிமுறைகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
கிரெடிட் சேவை நிறுவனங்கள்: இந்தியாவில் TransUnion CIBIL, Equifax , Experian , CRIF High Mark ஆகிய அமைப்புகள் தனிநபரின் சிபில் ஸ்கோரை பரிசோதிக்க உதவியாக இருக்கின்றன. இந்த இணையதளங்களில் ஏதேனும் ஒன்றுக்கு செல்லுங்கள். அதில் உங்கள் பெயர், பான் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்து புதிய பயனராக பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதனை உள்ளிட்டால் உங்களின் கிரெடிட் ரிப்போர்ட் பிடிஎஃப் வடிவில் வந்துவிடும். அதில் உங்கள் பான் எண்ணில் என்னென்ன கடன்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஃபின் டெக் செயலிகள்: இந்தியாவில் தற்போது ஃபின் டெக் செயலிகள் கூட இந்த சேவைகளை வழங்குகின்றன. நம்பகமான ஒரு ஃபின் டெக் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அதில் உங்களின் பான் எண் மற்றும் கேஒய்சி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். லாகின் செய்து lending என்ற பிரிவுக்கு செல்லவும். அதில் உங்கள் பெயரில் உள்ள கடன்களின் விவரங்கள் காட்டி விடும்.
நேரடியாக கடன் வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்: உங்களுக்கு கடன் வழங்கிய நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்களின் மொபைல் பேங்கிங் செயலியை பயன்படுத்தி லாகின் செய்யுங்கள். பான் எண், கணக்கு எண் மற்ற விவரங்களை உள்ளீடு செய்து "Loans" என்ற பிரிவை கிளிக் செய்தால் உங்கள் பெயரில் இருக்கும் கடன் விவரங்களை காட்டி விடும். இந்தியாவில் தற்போது நிதி சார்ந்த மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் யாரேனும் மோசடியாக உங்கள் பெயரில் கடன் வாங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். உங்கள் பெயரில் இருக்கும் நிலுவை கடன்களை முறையாக செலுத்தினால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதுகாக்கப்படும்.
What's Your Reaction?






