கால்நடை பராமரிப்பு – கோழி வளர்ப்பு முறை

Feb 27, 2025 - 16:29
Feb 27, 2025 - 16:29
 0  0

1. நாட்டுக் கோழிகளின் வகைகள்:

நாட்டுக் கோழிகளின் வகைகள்:

குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி, கருங்கால் கோழி, கழுகுக்கோழி, கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி ஆகிய இனங்கள் உள்ளன.

2. உயர்ரக கோழி இனம்:

நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு, வனராஜா, கிரிராஜா, சுவர்ணதாரா ஆகியவை உயர்ரக கோழி இனம் ஆகும்.

3. வீட்டு மேலாண்மை:

கோழியானது பண்ணை மூலமாகவும், பண்ணை இல்லாமலும் வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக்கோழி வளர்ப்பை கூண்டு முறை, கூண்டு இல்லா முறை என இரண்டு வகையாக பிரிக்கலாம். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காகவும், கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காகவும் பயன்படுகிறது

4. கட்டற்ற கோழி வளர்ப்பு:

கட்டற்ற கோழி வளர்ப்பு:

இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழி வளர்ப்பு மேற்கொள்ளலாம். இதில் கோழிகளின் நடமாட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன.

5. கூண்டு முறை:

கூண்டு முறை:

முட்டைக்கோழிகளை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். இந்த 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

6. கூண்டு இல்லா முறை:

இம்முறைக்கு அதிக இடம் தேவைப்படும். இதில் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற பொருட்களால் அமைக்க வேண்டும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுமே காணப்படும். முட்டை உற்பத்தியானது கூண்டு முறையை விட குறைவாக இருக்கும்.

7. தீவன மேலாண்மை:

கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.

கூண்டு முறை கோழி வளர்ப்பில் குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

கூண்டு இல்லா கோழி வளர்ப்பில் கோழிகளுக்கான உணவு, நீர் ஆகியவற்றை குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டும். மக்காச்சோளம், கம்பு ஆகியவற்றை அரைத்து உணவாக கொடுக்கலாம். காலை, மாலை என இருமுறை தீவனம் போட வேண்டும். ஆனால் இதில் தீவனம் மிகுதியாக வீணாகும்.

8. இனப்பெருக்க மேலாண்மை:

கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் காணப்படும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.

9. முட்டையிடுதல்:

முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண்பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.

ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாட்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

10. அடை காத்தல்:

நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓரு கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.

அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும். கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாட்கள் ஆகும். அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாட்களில் குஞ்சு பொரிக்கும்.

11. சுகாதார மேலாண்மை:

கோழிகளை எந்த முறையில் வளர்த்தாலும் அதன் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கட்டற்ற முறையில் கோழிகள் அடையும் இடத்தை இரு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

கூண்டில்லா முறையில் அடியில் போட்டுள்ள இடுபொருட்களை இரு நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். இவற்றில் நீர் சிந்துவதால் அந்த இடம் நனைந்து நோய் கிருமிகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கவனமாக பராமரிக்க வேண்டும்.

12. பாதுகாப்பு முறைகள் தடுப்பூசி:

நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது.

13. இயற்கை மருந்து:

நாட்டுக் கோழிகள் உணவு உண்ணாமல் ஒரே இடத்தில் அமர்ந்து காணப்பட்டால் அதற்கு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அரைத்து உணவாக வைக்க வேண்டும்.

14. விற்பனை:

கோழிகளில் முட்டை உற்பத்தியை மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய முட்டை தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழியின் எருவானது இரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. முட்டை பருவம் முடிந்த கோழிகளுக்கு நன்கு உணவளித்து சற்று கனம் ஆனவுடன் வியாபாரிகளிடம் விற்று விடலாம். விற்பனை கோழிகளை 2 முதல் 3 கிலோ வந்தவுடன் விற்பனை செய்ய வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0