ஏஸி பொருத்துவது முதல் பராமரிப்பு வரை முழுமையான கைடு!
ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா அதுவும் கொளுத்தும் வெயிலில் என்று எப்பாடுபட்டாவது ஏ.சி வாங்குபவர்கள் அதை பொறுத்தும் முறை முதல் பராமரிப்பு வரை முழுமையாக தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதனால் ஏ.சி நீண்ட நாள்களாக பழுதாகாமல் இருக்கும் என்பதோடு வெடிக்கும் அபாயகரமான நிலைக்கும் ஆளாகாது. ஏ.சி வெடித்து உயிரிழந்தார்கள் என்னும் செய்தி கேட்கும் போது மட்டுமே ஏசி பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
முதலில் ஏ.சி வாங்கும் போது வீட்டில் நீங்கள் பொருத்தும் இடத்தின் சதுரடியை கணக்கில் கொள்ளுங்கள். உங்கள் அறை மொத்தம் 100 சதுரடி கொண்டிருந்தால் 1 டன் அளவுள்ள ஏ.சி போதுமானது. அதற்கு மேல் இருந்தால் ஒன்றரை டன். 200 சதுரடி இருந்தால் 2 டன் கொண்ட ஏ.சி பொருத்தலாம். தேவையெனில் இரண்டு ஏ.சிக்கள் வாங்கியும் பொருத்தலாம்.
ஏ.சி வாங்கும் போது இலவச ஸ்டெபிலைசர் கொடுப்பார்கள். தரம் குறைந்த ஸ்டெபிலைசராக இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். நல்ல தரமான ஸ்டெபிலைசரை தேர்வு செய்யுங்கள். அதே போன்று ஏ.சியில் உயர் மின்னழுத்தத்தை தாங்க கூடிய அளவுக்கு கேபிள், சுவிட்ச் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
ஏ.சியை நீங்கள் படுக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறடி உயரத்துக்கு பொருத்துங்கள். அப்படி செய்தால் தான் ஏ.சியிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அந்த அறை முழுக்க கிடைக்கும்.
ஏ.சி பொருத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. அந்த மாதிரி இருந்தால் நீங்கள் அறையில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். சூரிய ஒளி அறைக்குள் இருந்தால் ஏ.சி குளிர்ச்சி அடைய சிறிது நேரம் பிடிக்கும். அதோடு கரண்ட் அதிகம் பிடிக்கும்.
அறை வாசனைக்கு நறுமணம் கமழும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதுண்டு ஆனால் இதை தவறுதலாக ஏ.சியின் மீது அடித்துவிட வேண்டாம்.குறிப்பாக. ஏ.சி இயங்கிகொண்டிருக்கும் போது. இவை ஏ.சியின் உள்ளிருக்கும் காயிலில் பட்டுவிட்டால் காயில் பழுதாகிவிடக்கூடும்.
ஏ.சி இருக்கும் அறையில் அதிக பொருள்களை வைக்க வேண்டாம். குறிப்பாக வேண்டாத பொருள்களை வைக்கும் இடமாக மாற்ற வேண்டாம். அவசியமான பொருள்களை வைப்பதாக இருந்தாலும் அறையில் கபோர்டு போட்டு வைப்பதால் ஏ.சி வீணாகாது.
ஏ.சி பயன்படுத்தும் போது அதிக டிகிரியில் வைக்க கூடாது. ஏ.சி பயன்பாட்டில் அறிவுறுத்திய அளவான டிகிரி இடைவெளியில் 23-24 அளவில் பழக்கப்படுத்தி கொள்ளலாம். 22 டிகிரிக்கு கீழ் வைக்க கூடாது. அதே போன்று ஏ.சி பயன்படுத்தும் போது அறையில் ஃபேனையும் ஓடவிடக்கூடாது. இதனால் ஃபேனில் இருக்கும் தூசிகள் ஏ.சியின் உள்ளே செல்ல வாய்ப்புண்டு.
ஏ.சி பொருத்திய பிறகு அதன் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாதமிருமுறை ஏ.சி ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். இதில் இருக்கும் தூசிகள் தான் ஏ. சி யை நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் போது வெப்பம் உருவாகும் போது தீப்பற்றி வெடிக்க செய்கின்றன.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி சர்வீஸ் செய்ய வேண்டும். அனுபவமிக்க ஏ.சி மெக்கானிக்குகளை கொண்டு சர்வீஸ் செய்ய வேண்டும். புகை அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். ஏ.சி சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக குளிர்காலங்களில் ஏ.சியை பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள். நீண்ட நாள்கள் கழித்து ஏ.சியை பயன்படுத்தும் போது ஏ.சியை சர்வீஸ் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும். ஏ.சி சர்வீஸ் செய்யும் போது கம்ப்ரஸர்,காயில், ஏ.சியின் உள்ளே செயல்படும் ஃபேன் மோட்டார்கள், உள்ளிருக்கும் பெல்ட், கேஸ் அளவு அனைத்தையும் சரிபார்ப்பதும் அவசியம். கேஸ் அளவு குறைந்தாலும் குளிர்ச்சி கிடைக்காது. இதையும் சரிபார்த்து நிரப்ப வேண்டும்.
அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்குகிறோம். அவை பழுதாகும் வரை காத்திருந்து சர்வீஸ் செய்வதை விட அவ்வபோது உரிய முறையில் பராமரித்தால் பொருள்களின் ஆயுள் நீண்ட நாளாக இருக்கும். இது அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். தற்போது கோடைக்காலம் என்பதால் ஏ.சியின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அவ்வபோது ஏ.சி பில்டரை சுத்தம் செய்யுங்கள். குளிர்ச்சியும் அதிகரிக்கும். பொருளும் பாதுகாப்பாக இருக்கும்.
What's Your Reaction?