வேப்பிலை பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்! (Veppilai Benefits in Tamil)
வேப்பிலையின் பல்வேறு மருத்துவ பலன்கள் பற்றியும், பயன்பாடுகள் பற்றியும் சத்குருவின் பார்வைகள் சிலவற்றை இங்கே அறியுங்கள். வேம்பு மிகவும் தனித்துவமான ஒரு மரம். வேப்பிலைகள் பூமியின் மிகவும் நுட்பமான இலைகளாகும். வேப்பமரத்தில் உயிரியல் ரீதியாக செயல்படும் 130க்கும் மேற்பட்ட சேர்மங்கள் உள்ளன. மேலும், நீங்கள் பூமியில் காணக்கூடிய மிகவும் நுட்பமான இலைகளில் வேப்பிலை ஒன்றாகும். இலை, பூ, பட்டை, வேர் என வேம்பின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறப்பம்சங்களையும், மகத்துவங்களையும் ஆராய்ந்தறிந்திடுங்கள்.
1. வேப்பிலை தினமும் சாப்பிடலாமா? பயன் என்ன?
வேம்பு பல நம்பமுடியாத மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமான ஒன்று புற்றுநோய் செல்களை அழிப்பதாகும். ஒவ்வொருவரின் உடலிலும் புற்றுநோய் செல்கள் உள்ளன, ஆனால் அவை பொதுவாக ஒருங்கிணையாதவை. ஆனால், நீங்கள் உடலில் குறிப்பிட்ட சூழ்நிலைகளை உருவாக்கினால், அவை ஒருங்கிணைக்கப்படும். இந்த செல்கள் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் வரை, அது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தாக்கினால் பிரச்சனையாகிவிடும். இது சிறு குற்றத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு மாறுவது போன்றது. இது ஒரு தீவிர பிரச்சனை. நீங்கள் தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்கும். இதனால் அவை உங்கள் உடலமைப்பிற்கு எதிராக குழுவாக ஒன்றிணையாது.
2. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது
இந்த உலகமே பாக்டீரியாக்களால் நிறைந்தது. உடலும் அதுபோலத்தான். நீங்கள் கற்பனை செய்யக்கூடியதை விட அதிகமான நுண்ணுயிரிகள் உங்களுக்குள் வாழ்கின்றன. இந்த பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் இல்லாமல், நீங்கள் எதையும் ஜீரணிக்க முடியாது. உண்மையில், அவர்கள் இல்லாமல் நீங்கள் உயிருடன் இருக்கமுடியாது. ஆனால் சில பாக்டீரியாக்கள் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியாக்களை நிர்வகிக்க உங்கள் உடல் தொடர்ந்து சக்தியை செலவழிக்கிறது. அதிகப்படியான பாக்டீரியாக்கள் உருவானால், நீங்கள் சோர்வடைவீர்கள். ஏனெனில் உங்கள் தற்காப்பு மண்டலம் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கும்.
வேப்பிலையை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்துவதன் மூலம், இந்த பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகாத விதத்தில் நீங்கள் நிர்வகிக்க முடியும். மேலும், அவற்றை எதிர்த்துப் போராட உங்கள் உடல் அதிக சக்தியைச் செலவிட வேண்டியதில்லை. நீங்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு வேப்பிலையை உட்கொண்டால், அது குடல் பகுதியிலுள்ள தீமை தரும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். மேலும், உங்கள் பெருங்குடல் பொதுவாக சுத்தமாகவும் தொற்று இல்லாமலும் இருக்கும்.
மேலும், உங்கள் உடலின் சில பாகங்களில் சிறிது துர்நாற்றம் ஏற்பட்டால், அங்கே பாக்டீரியாக்கள் அதிகம் செயல்படுகின்றன என்று அர்த்தம்.
3. சருமத்திற்கான வேப்பிலையின் பயன்கள்
பெரும்பாலும் நம் அனைவருக்குமே ஏதேனும் சிறிய தோல் பிரச்சனை இருக்கிறது. ஆனால் உங்கள் உடலை வேப்பிலைகளால் கழுவினால், அது சுத்தமாகவும் பொலிவாகவும் மாறும். குளிப்பதற்கு முன், வேப்பிலையை அரைத்து உடலில் தேய்த்து, சிறிது நேரம் உலர வைத்து, பிறகு தண்ணீரில் கழுவினால், அது ஒரு நல்ல பாக்டீரியா அழிப்பானாக செயல்படும். மாற்றாக, சில வேப்பிலைகளை இரவுமுழுக்க தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரில் குளிக்கலாம்.
4. வேப்பிலை சாறு பயன்கள் (Neem Juice Benefits in Tamil)
வேப்பிலைச் சாறு அருந்துவது, ஒருவரின் செரிமான செயல்முறையை மறுசீரமைக்க உதவும். மேலும் இது, வளர்சிதை மாற்றத்தையும் குறிப்பிடத்தக்க விதத்தில் மேம்படுத்துகிறது. ஜூஸாக உட்கொள்ளும்போது, உடல் கொழுப்பைக் குறைப்பதில் வேம்பு சிறப்பாக செயல்படுகிறது. இது பெருங்குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் உடலின் கழிவுநீக்க செயல்முறையை மேம்படுத்துகிறது. இதில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிசெப்டிக் என்சைம்கள் இருப்பதால், தேவையற்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேற்குறிப்பிட்ட பல காரணங்களால் வேப்பிலை சாறு உட்கொள்வதற்கு மிகவும் பயனுள்ள சாறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இதை அதிகபட்சம் எவ்வளவு எடுக்கமுடியும் என்பதை ஆராய்ச்சிகள் இன்னும் நிறுவவில்லை. மேலும், வேப்பிலைச் சாறு உட்கொள்ளும்போது மிதமான அளவில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
5. வேப்பிலை பொடி பயன்கள் (Veppilai Podi Uses in Tamil)
வேம்பு பொடியாகவும் கிடைக்கிறது. மேலும் இது பல நாட்களுக்கு வருவதனால், பயணத்தின்போது எடுத்து செல்ல ஏதுவாகிறது. வேப்பிலையை பொடி செய்வதன் மற்றொரு நன்மை என்னவென்றால், வேப்பமரம் வளராத உலகின் பகுதிகளுக்கு இதை எளிதாகக் கிடைக்கச்செய்யலாம். வேப்பிலை பொடியை உட்கொள்ளவும் முடியும், வெளிப்புறமாக தோலில் பூசிக்கொள்ளவும் முடியும். வேப்பிலையை வெயிலில் உலர்த்தி, பின் நன்றாக அரைத்து, வீட்டிலேயே பொடியாக்கிக் கொள்ளலாம்.
What's Your Reaction?