வேண்டிய வரங்களைத் தரும் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா!
Annai velankanni madha kovil history
வேண்டிய வரங்களைத் தரும்
ஆரோக்கிய அன்னை
வேளாங்கண்ணி மாதா!
வங்கக் கடலோரம், அமைதியான சூழலில் சுமையோடு வரும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா. உலகப் புகழ் பெற்றுத் திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பாசலிக்க அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.
இதனால் எல்லாச் சமயங்களைச் சார்ந்த பக்தர்களும், அன்னை மரியாளை வழிபட்டு தன்னை செபத்தின் மூலமாக ஒப்புக்கொடுக்கிறார்கள். இங்கு, திருவிழா நாட்கள் என்று இல்லாமல் எப்போதும் பல வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றார்கள்.
திருமண தடை, குடும்ப பிரச்னை, நினைத்த காரியம் நிறைவேறத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாத் திருவிழாவில் கலந்துகொள்ள வருவார்கள். அதேபோல், தனது வேண்டுதலுக்காகக் குறைந்தது மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தொடர்ந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி புதுக்கோயிலின் பின் பக்கம் வாசலில் இருந்து, பழைய வேளாங்கண்ணி கோயில் மாதா குளம் வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள். முக்கியமாக முழந்தாட்படியிட்டுச் புதுக்கோயிலில் இருந்து பழைய கோயில் வரை பக்தியுடன் நடந்து சென்றால், வேண்டியது நிச்சயம் நடந்தேறும் என்பது பக்தர்களின் காலம் காலமான அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பாத யாத்திரையாக நடந்து வந்தாலும், முழந்தாட்படியிட்டுச் நடந்து வந்தாலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும், வேளாங்கண்ணி பழைய கோயிலின் ஆலமரத்தில்.. திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தாலிக் கயிற்றையும், குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டவர்கள் தொட்டிலையும், தீராத நோய் மற்றும் உடல் நலம்பெற வேண்டியவர்கள் அந்த உடல் உறுப்பு பகுதிளை தகடுகளாக அந்த ஆலமரத்தில் கட்டிவிட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், பின் மீண்டும் வந்து தங்களது பிரார்த்தனை மூலமாக நன்றியை பக்தர்கள்த் தெரிவிக்கிறார்கள்.
சுமையோடு வருபவர்களின் மனதை சுகமாக்குவதாலும், வேண்டிக் கொண்டவர்களின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் மட்டுமல்லாமல், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களைக் கருணையோடு தருவதாலேயே அனைவருக்கும் ஆரோக்கிய அன்னையாகத் திகழ்கிறார் அன்னை வேளாங்கண்ணி மாதா. இத்தகைய மாட்சிமிக்க வேளாங்கண்ணி மாதா புனித திருத்தலத்தில், இந்த ஆண்டுக்கான புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி மாதா பிறந்த நாளுடன் நிறைவடையும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர் பவனி, செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், பல அற்புதங்களைப் தமது வாழ்வில் பெறுகிறார்கள். அன்னையின் கருணை மழையில் நாமும் நனைந்து, வாழ்வில் இன்னும் இன்புற்று இருப்போம்!
What's Your Reaction?