சப்பாத்திக்கு 5 மினிட்ஸ் தால் செய்முறை - Tamil Recipe
சப்பாத்திக்கு 5 மினிட்ஸ் தால் செய்முறை - Tamil Recipe

சப்பாத்திக்கு 5 மினிட்ஸ் தால் செய்முறை
சுட சுட மிருதுவான சப்பாத்தியுடன் தொட்டுக்க சைட் டிஷ் என்ன இருக்கிறது? என்பது தான் பிரதானமாக இருக்கும். என்னதான் உருளைக்கிழங்கு, வெங்காய தொக்கு எல்லாம் வைத்தாலும், இந்த தால் ரெசிபி வேற லெவல் காம்பினேஷன் ஆக இருக்கும். வட இந்திய மாநில மக்கள் அதிகம் விரும்பும், இந்த தால் ரெசிபி செய்வதற்கு 5 நிமிடம் கூட ஆகாது. ரொம்பவே சுலபமாக மற்றும் ருசியான சப்பாத்திக்கு தொட்டுக்க இந்த பருப்பு தால் எப்படி தயாரிக்கப் போகிறோம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
சப்பாத்தி தால் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பூண்டு – நான்கு பல்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
-சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
இஞ்சி – ஒரு இன்ச்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
சப்பாத்தி தால் செய்முறை விளக்கம்:
சப்பாத்தி தால் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து முழுதாக அப்படியே சேருங்கள். இவற்றுடன் ரெண்டு தக்காளியை பொடியாக நறுக்கி சேருங்கள். நாலு பூண்டு பற்களை தோலுரித்து சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். பருப்புக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதும், அதிகம் ஊற்றாதீர்கள். பருப்பு வெந்து கெட்டியாக வர வேண்டும். பருப்பு நன்கு வெந்து வந்த பின்பு தாளிக்க வேண்டும். தாளிக்க தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வையுங்கள். தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு படபடவென பொரிந்து வந்ததும் சீரகம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இவை பொன்னிறமாக வந்தவுடன், கருவேப்பிலை சேர்த்து பொரிய விடுங்கள். நீள நீளமாக இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி சேருங்கள். -.
பின்னர் இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி சேர்க்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போனதும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பை நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் தாலுடன் சேர்த்து கலந்து வையுங்கள். கெட்டியாக சுவையான இந்த தால் ரெசிபியை (Thova) என்பார்கள். நீங்களும் இதே மாதிரி பருப்பு தால் செய்து பாருங்கள், எவ்வளவு சப்பாத்தி கொடுத்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்க தோன்றும், அவ்வளவு ருசியாக இருக்கும்
What's Your Reaction?






