ரயில்... - Train kavithai in tamil
ரயில்... - Train kavithai in tamil
ரயில்...
இணையாத பாதை கொண்டு
இணைத்திடும்
பல உறவுகளை...
இதற்கு
எதைப்பற்றியும் கவலையில்லை..
மழையோ வெயிலோ
தன் பாதையில்
தயங்காமல் சென்று கொண்டேயிருக்கும்...
கல்லோ முள்ளோ
தகர்த்தெறிந்து
தன் இடம் அடையும்...
போராட்டம் செய்யும்
மனிதர்களைக் கண்டால் மட்டும்
ஏனோ அடங்கி நின்றுவிடும்...
இதில் பயணிப்போரில் பெரும்பாலோர்
தனியாய் செல்வதாய் சொல்வதுண்டு
எத்தனை கூட்டமிருந்தாலும்...
இதுதானோ ரயில் ஒருமைப்பாடு!
தனிமை ரயிலுக்கு பிடிக்காது
பயணிப்போர் யாருமில்லாவிட்டாலும்
தண்டவாளத்தையும் சத்தத்தையும்
துணைக்கு வைத்துக்கொள்ளும்...
அன்றொரு காலத்தில்
ரயிலும் புகைபிடித்தது
யார் தந்த மாற்றமோ
அந்த பழக்கம் இன்று விட்டேவிட்டது..
அதனால் ரயிலுக்கு 'கேன்சர்' வராது
ஆனால் சிலசமயம் 'கேன்சல்' என்ற செய்தி வரும் - தேவையின்றி
ரயிலுக்கும் குயிலுக்கும் ஒரு ஒற்றுமை
ரயில் கூவ காணமுடியும்
குயில் கூவ காணமுடியாது...
ரயிலுக்கும் மயிலுக்கும் ஒரு ஒற்றுமை
ரயிலும் ஆடும்
மயிலும் ஆடும்
ரயிலும் வெயிலும்
கணக்கின்றி நிழல்கொடுக்கும்
அளவேயின்றி அசதிகொடுக்கும்
ரயில்
சில்லறை வியாபாரிகளுக்கு
வாழ்க்கை கொடுக்கும்
சிலுசிலுவென காலை மாலையில்
நல்ல காற்றையும் கொடுக்கும்
ரயிலுக்கும் ஆப்பு வைக்கும்
மனிதன் உண்டு
ரயிலுக்கு மட்டும் உயிர் இருந்தால்
கேடு விளைவிக்கும் அவனுக்கு முன்பே
கேடு விளைவித்திருக்கும்...
ஆக,
ரயில்
என்றும் தொடரும் நட்பு...
எட்ட முடியாத சிலருக்கு
தூர இருந்தே தரிசனம் தரும்
ஒரு கடவுள்...
காசு காய்த்ததால்
வானத்தில் மட்டும் பறக்கும் சிலருக்கு
எங்கோ எப்போதும்
பயணித்துக்கொண்டிருக்கும்
ஒரு தூரத்து உறவு.....!
What's Your Reaction?