இரயிலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள்; அவசியம் தெரிஞ்சுகோங்க
இரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்கள், குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் இந்திய இரயில்வேயில் நடைமுறையில் உள்ளன. திருப்பூரில் இருந்து வேலூருக்கு பெண்கள் வகுப்பில் பயணித்த கர்ப்பிணிக்கு இதயமற்ற கொடூரன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனி அரங்கேறாமல் இருக்க இந்தியன் இரயில்வே பாதுகாப்பு சட்டங்களை பெண்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
1. இரயில் பயணம்

தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் இரயில் சேவையில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல் அவலம் நிகழ்ந்துள்ளது. தொலைக்காட்சிகளுக்கு தனக்கு நடந்த அநீதியை அவர் விவரிக்கும் போது எந்த ஒரு பெண்ணிற்கும் மனம் பரிதவிக்கும். இரயில் பயணங்களை திட்டமிடும் பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இரயில்களில் பயணிக்கும் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்திய இரயில்வே சட்டம் 1989ல் பிரிவு 139 நடைமுறையில் உள்ளது. 1989ல் இயற்றப்பட்ட சட்டங்கள் குறிப்பாக இரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்கள், குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
2. இந்தியன் இரயில்களில் பெண்களின் பாதுகாப்பு

இரயிலில் ஒரு பெண் டிக்கெட் இன்றி பயணித்தாலும் அவரை டிக்கெட் பரிசோதகரால் இரயிலில் இருந்து வெளியேற்ற முடியாது. மாறாக அப்பெண் அபராதம் செலுத்தி இரயில் பயணத்தை தொடரலாம். சில நேரங்களில் அப்பெண்ணிடம் அபராதம் செலுத்த கட்டணமில்லை என்றாலும் டிக்கெட் பரிசோதகரால் அவரை இரயிலில் இருந்து வெளியேற்ற முடியாது.
2020ல் “என் தோழி” இரயில்வே பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை இந்த படை உறுதி செய்கிறது.
3. இரயில்களில் பெண் பாதுகாப்பு சட்டங்கள்
- ஒரு பெண் ஏதாவது பிரச்னையில் ஈடுபட்டு அவரை இரயிலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தால் அங்கு ஒரு பெண் காவல் அதிகாரி இருக்க வேண்டும்.
- 12 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் தங்கள் தாயோடு பெண்கள் வகுப்பில் பயணிக்கலாம் என பிரிவு 162 அனுமதிக்கிறது.
- பெண்கள் வகுப்பில் நுழையும் ஆண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்திய இரயில்வே சட்டம் 1989 பிரிவு 311ன் படி இராணுவ ஆட்களும் பெண்கள் வகுப்பில் நுழைய அனுமதி கிடையாது.
- தொலைதூரம் செல்லும் இரயில்களின் படுக்கை வகுப்பில் 6 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதே போல ஏசி 3ஆம் வகுப்பிலும் 6 இடங்கள் ஒதுக்க வேண்டும். எந்த வயது பெண்ணாக இருந்தாலும் இந்த ஒதுக்கீடு இடம்பெறுவது அவசியம்.
- பல்வேறு இரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையில் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றன.
- தனக்கு யாராவது தொந்தரவு அளித்தால் அல்லது அத்துமீறினால் அப்பெண் டிக்கெட் பரிசோதகர் அல்லது காவல் அதிகாரிக்காக காத்திருக்காமல் புகார் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், சமூக வலைதளங்களில் இந்தியன் இரயில்வே பக்கத்தையும், இரயில்வே அமைச்சரின் கணக்கையும் குறிப்பிட்டு புகார் தெரிவிக்கலாம்.
What's Your Reaction?






