பெண்கள் ஏன் தினமும் உடற்பயிற்சி செய்யணும் தெரியுமா?
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது என்பதை அனைவரும் அறிவோம். மேலும் இதை உணர்ந்து தற்போது நிறைய பேர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் ஆண்கள் தினசரி உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பெண்களை எடுத்துக் கொண்டால், அது குறைவு.

இருப்பினும் பல பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தங்களால் இயன்ற வரை உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களை எடுத்துக் கொண்டால், திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் திருமணத்திற்கு முன் பெண்கள் தங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் நிறைய பேருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள் மற்றும் நன்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் பல்வேறு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் கர்ப்பம், குடும்ப பொறுப்புகள் மற்றும் பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு, அலுவலக வேலைப்பளு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த விஷயங்களால் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
எப்படியெனில், கர்ப்ப காலத்தில் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். பின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் அடிக்கடி மனநிலை மாற்றங்கள், மாதவிடாய் பிரச்சனைகளை சந்திப்பதோடு, ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்து, தசைகளின் வலிமை குறையலாம். அதுமட்டுமின்றி உடலின் மெட்டபாலிசம் குறைந்து, உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறையும், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் குறையும் மற்றும் தசைகளின் திடத்தன்மை குறையும்.
இதன் விளைவாக சரும நிறத்தில் மாற்றம், தலைமுடி உதிர்வது, தூங்குவதில் சிரமம், மன இறுக்கம், மன அழுத்தம், பதட்டம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் சந்திக்கும் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு என்றால் அது உடற்பயிற்சி தான்.
பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பெண்கள் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவையாவன:
* உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
* உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் மேம்படும்.
* ஹார்மோன்கள் சீராக இருக்கும். * மனநிலை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.
* ஆஸ்டியோபோரோசிஸ் வருவது தடுக்கப்படும்
பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் தற்போது 30 வயதை கடந்த பல பெண்கள் கால்சியம் குறைபாட்டினால் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க வேண்டுமானால் கால்சியம் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்று பலரும் நினைக்கலாம். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது தான். ஆனால் அப்படி சாப்பிடும் ஆரோக்கியமான உணவுகளில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படுகிறதா என்றால், அது தான் இல்லை. ஆனால் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் முறையாக உடலால் உறிஞ்சுப்பட்டு, உடல் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எனவே தங்கள் அழகில் அக்கறை காட்டும் பெண்கள், தங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தினமும் உடற்பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபட்டு வந்தால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். டெய்லி உடற்பயிற்சி செய்யுங்க.. ஃபிட்டா இருங்க...
What's Your Reaction?






