வீரபாண்டிய கட்டபொம்மன் [ஜனவரி 3, 1760] வரலாற்றில் இந்த நாள்
பிறப்பு :
1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி ஆறுமுகத்தம்மாள், திக்குவிசய கட்டபொம்முவிற்கு மகனாக பிறந்தார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்தவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசுவாமி (ஊமைத்துரை), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.
வீரப்பாண்டிய கட்டபொம்மன் - பெயர்க்காரணம்:
விஜயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்தான் கட்டபொம்மனின் முன்னோர்கள். அப்பொழுது, "வீரபாண்டியபுரம்" (இப்போதுள்ள ஒட்டப்பிடாரம்) என்ற ஊரை ஜெகவீர பாண்டியன் (நாயக்கர் வம்சம்) ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரசவையில் 'பொம்மு' என்ற கெட்டி பொம்மு அமைச்சராக பணியாற்றினார். இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கில் ' கெட்டி பொம்மு ' என்று சொல்லுக்கு வீரமிகுந்தவர் என்று பொருள். இந்த கெட்டி பொம்மு எனும் சொல்லே நாளடைவில் 'கட்டபொம்மு' என்ற சொல்லாக மாறியது. தமிழகத்தில் இந்த சொல்லை 'கட்டபொம்மன்' என்று அழைத்தனர்.
ஜெகவீர பாண்டியனின் இறப்பிற்கு பிறகு கட்டபொம்மு அரச பதவியை ஏற்றார். இவர் மக்களால் 'ஆதி கட்டபொம்மன்' என்று அழைக்கப்பட்டார். பொம்மு மரபில் இவர்தான் முதல் கட்டபொம்மன். இந்த மொம்மு வம்சத்தாரில் வந்தவர்களே திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களுக்குப் புதல்வராகப் பிறந்தவரே வீரபாண்டியன் என்ற இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தொடர்ந்து நாயக்கர் வம்சத்தில் அரசாண்டு வருவதால் 'பொம்மு நாயக்கர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றும் அழைக்கப்படுகிறார்.
நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
வரி, வட்டி, திறை, கித்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர்பாய்ச்சி நெடுவயல் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலம் பெண்களுக்கு மஞ்சளரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே. யாரைக்கேட்கிறாய் வரி, எவரை கேட்கிறாய் வட்டி? இந்த வரிகளால் ஆங்கிலேயே ஆதிக்கத்தையே அதிர வைத்த முதல் பாளையக்காரர். வீரம் இவரது பெயரில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் உண்டு. சுந்திர மன்னர்களாகிய நாங்கள் உங்களுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர்.
வீரபாண்டியனின் வீரவாழ்க்கை:
தந்தைக்கு பிறகு தனது முப்பதாவது வயதில் பிப்ரவரி 2 - ம் தேதி 1790 ஆண்டு 47- வது, பாளையக்காரராக பொறுப்பேற்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களின் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். இந்த கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்ற, ஆங்கிலேயர்கள் ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். அப்போது நெல்லை மாவட்டத்தில் வரி வசூலிக்கும் பொறுப்பை 'மாக்ஸ்வெல்' என்ற தளபதி பெற்றிருந்தார். ஆனால் அவரால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்து வரியை வரி வசூலிக்க முடியவில்லை. பாளையக்காரராக முதன்முதலில் கப்பம் கட்ட மறுத்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் தான். இவரின் வீரம் சுற்றியிருந்த அனைத்து மன்னர்களுக்கும் தெரியவர, ஆங்கிலேயரை எதிர்க்கும் நம்பிக்கை அளித்தது.
எனவே கி.பி 1797 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய தளபதி ஆலந்துரையின் பெரும்படை பாஞ்சாலம் குறிச்சியை கைப்பற்ற வந்தனர். இந்தப் போரில் வீரபாண்டியனிடம் தோற்று ஆலன் துரை ஓடினார். இந்த முதல் போருக்குப் பிறகு மாவட்டக் கலெக்டரான ஜாக்சன் துரை கட்டபொம்மனை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பல்வேறு இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். கடைசியாக 1798 இல் இராமநாதபுரத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி இருவரும் சந்தித்தனர் அப்போது சூழ்ச்சி செய்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய நினைத்தார், ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அந்த தந்திரவலையை முறியடித்து, அங்கிருந்து தப்பி பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.
செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியின் தலைமையில் நடைபெற்ற கடும்போரில் இருதரப்பிலும் பல உயிர்களை இழந்தனர். இருந்தாலும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். பின் 1799 ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதியில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1 தேதி 1799 புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானிடம் தஞ்சம் புகுந்தார், வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கு பயந்து புதுக்கோட்டை மன்னன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் ஆங்கிலேய நிர்வாகிகள் அவரை கைது செய்தனர். கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 9 ஆண்டுகள், 8 மாதம் 14 நாட்கள் அரசு பொறுப்பில் இருந்தார், கட்டபொம்மன்.
இறப்பு:
கட்டபொம்மன், அக்டோபர் 16 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேய தளபதி பேனர்மேன் உத்தரவின் படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். அப்பொழுது கட்டபொம்மனின் வயது 39.
இல்லற வாழ்க்கை:
வீரசக்கம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கட்டபொம்மன். ஆனால் இவர்களுக்கு குழந்தை கிடையாது.
நினைவு சின்னங்களும், மரியாதைகளும்,..
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் அவரின் நினைவிடம் ஒன்று உள்ளது.
கட்டபொம்மமனின் வாழ்க்கை வரலாறு தமிழ் புராணம், காவியம், கவிதைகள், வரலாறுகளில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வெலங்டனில் கட்டபொம்மனின் நினைவாக, ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டு தபால் முத்திரை ஒன்றை, இரு நூறாம் ஆண்டு விழாவில் வெளியிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம் )என்ற அமைப்பு அவரது நினைவாக செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டு விழாவை பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக கொண்டாடுகிறது.
நூல்கள் 'கட்டபொம்மன் வரலாறு' என்ற ஒரு நூல் தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசன் நடிப்பில்,பி.ஆர் பந்தலு தயாரிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1959 - ல் கட்டபொம்மனின் வீரவாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாக திரையிடப்பட்டது.
What's Your Reaction?