இனிமையான சொற்கள் எதற்கு சமம் ..?
இனிமையான சொற்களை விட்டு கடுமையான சொற்களை பேசலாமா..

தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று என்று ஒரே கூச்சல்.
ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அப்போது ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான் பிறகு ஆட்டம் கலைந்தது.
இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் அந்தப் பையனை தன் வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்தார்.
அவன் எதிரில் ஒரு தட்டு, அதில் இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ நன்றாக விளையாடினாய் அதற்குப் பரிசு தான் இது எடுத்து சாப்பிடு என்றார்.
அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து உண்டான் பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.
அவனைத் தடுத்தப் பெரியவர், தட்டில் மீதமிருப்பத்தையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம் அய்யா. ஏன்? அவை காய்கள். பெரியவர் காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? எனக்குப் பிடிக்காது. ஏன்? அவை புளிக்கும்.
பரவா இல்லை சாப்பிட்டு பாரேன். இல்லை அய்யா அந்த சுவையை என் உள்ளம் ஏற்காது என்றான்.
″ உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ விரும்புகின்றவற்றை கொடுக்கின்றாயே அது நியாயமா?
புரியவில்லை அய்யா?
சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்க்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா? இல்லை அய்யா. அவனுக்கு துன்பம் தந்திருக்கும்.
நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய் ஆனால் பிறர; உள்ளம் ஏற்க விரும்பாத சொற்களை அள்ளி வீசுவாயா? தம்பி உனக்கு கோபம் வந்தால் சுடு சொற்களை வீசவேண்டும் என்பதில்லை.
உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய சொற்கள் இருக்கின்றனவே அவைகளை வீசி அந்தப் பையனின் தவறை சுட்டிக் காட்டி தலை குனிய வைத்திருக்கலாம்.
அதை விட்டுவிட்டு அவன் உள்ளத்தை காயப்படுத்தி விட்டாயே. தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
What's Your Reaction?






