பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது | Don’t speak and hurt any one | tamil stories
Don't hurt anyone
பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது | Don’t speak to offend others | tamil stories
விஜயபுரி என்ற நாட்டை விஜயவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவருடைய அரசவையில் மகிபாலன் என்ற அமைச்சர் இருந்தார். நகைச்சுவை உணர்வும், புத்தி கூர்மையும் நிறைந்திருந்த அவர் சமயத்திற்கு ஏற்றபடி பேசும் ஆற்றலும் பெற்றிருந்தார்.
ஆனால், அவர் தோற்றத்தில் மிகவும் குள்ளமாக இருந்தார். ஒரு சமயம் மன்னன் விஜயவர்மன் அவரை பக்கத்து நாட்டிற்கு தூதராக அனுப்பினார். அந்த நாட்டு அரசன் பிறர் மனம் புண்படும்படி பேசுவதில் விருப்பம் உடையவனாக இருந்தான்.
அதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. தூதுவராக வந்த அமைச்சர் மகிபாலன் குள்ளனாக இருப்பதை பார்த்த அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
உடனே, அவன் அமைச்சரை பார்த்து, “தூதுவனாக அனுப்ப உன்னை விட சிறந்த ஆள் கிடைக்கவில்லையா? இவ்வளவு குள்ளமாக இருக்கும் உன்னை போய் தூதராக அனுப்பி இருக்கிறாரே, உங்கள் மன்னர்” என்று கேலியாக கேட்டான்.
இந்த பேச்சைக் கேட்டு அமைச்சர் மகிபாலனுக்கு கோபம் தலைக்கேறியது. தான் இருக்கும் சூழ்நிலையை அறிந்து கோபத்தை அடக்கி கொண்டார். உடனே அவர் அரசரைப் பார்த்து, “அரசே, எங்கள் நாட்டில் பெருமிதமான தோற்றம் உடையவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் உருவத்தைப் பார்த்தால் அனைவரும் ஆச்சரியப்பட்டு போவார்கள். அவர்கள் எழுந்தால் அவர்களின் தலை சூரியனை மறைக்கும். ஒரு அடி வைத்தால் ஒரு கிலோ மீட்டர் தூரம் போவார்கள்” என்றார்.
இதைக் கேட்ட அந்த அரசன் “அப்படிப்பட்டவர்கள் உங்கள் நாட்டில் இருந்தால் உன்னைப் போன்ற ஒரு குள்ளனை ஏன் தூதுவனாக இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்று கேட்டான்.
இதனால் அமைச்சர் பெரிதும் மனவேதனை அடைந்தார். உடனே அவர், “அரசே, எங்கள் நாட்டிற்கு ஒரு வழக்கம் உண்டு, அந்த வழக்கத்திற்கு ஏற்ப என்னை இங்கே தூதுவனாக அனுப்பி உள்ளார்கள்” என்றார்.
“உங்கள் நாட்டு வழக்கம்தான் என்ன?” என்று குத்தலாக கேட்டான் அரசன். உடனே அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார், “அரசே, ஒவ்வொரு நாட்டின் இயல்புகளுக்கு ஏற்றபடியே தூதர்களை அனுப்புவது எங்கள் மன்னரின் வழக்கம்.
அறிவு உள்ள அரசர் ஆளும் நாட்டிற்கு அறிவுள்ள தூதர்களை அனுப்புவார். முட்டாளான அரசர் ஆளும் நாட்டிற்கு முட்டாளை அனுப்புவார். எங்கள் நாட்டிலேயே வடிகட்டிய பெரிய முட்டாள் நான்தான். அதனால் தான் என்னை இந்த நாட்டுக்கு தூதனாக அனுப்பியுள்ளார்” என்றார்.
இதைக் கேட்டதும் அந்த அரசர் அவமானத்தால் தலை குனிந்தார். இனிமேல் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்று அவர் தன் மனதில் எண்ணிக்கொண்டார். அதன்படியே வாழ்விலும் நடந்தார்.
நீதி : பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. அவ்வாறு பேசுபவர்கள் தாங்களே அவமானப்பட வேண்டி வரும். எனவே, எப்பொழுதும் பிறர் மகிழும்படியாகவே பேச வேண்டும்.
What's Your Reaction?