காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஒரு நிறுவனமே இருக்கு.. 24 வயது இளைஞரின் அசத்தல் ஸ்டார்ட் அப்..!

தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கும் தகவலின்படி இந்தியாவில் 2016 இல் இருந்து 2021 ஆம் ஆண்டுக்குள் அதாவது 6 ஆண்டுகளில் மட்டும் 20.36 லட்சம் பேர் காணாமல் போய் உள்ளனர். அதாவது ஓராண்டுக்கு 3.4 லட்சம் பேர், ஒரு நாளுக்கு 930 பேர், ஒரு மணி நேரத்துக்கு 39 பேர் காணாமல் போயுள்ளனர்.

Apr 24, 2025 - 10:40
 0  1
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஒரு நிறுவனமே இருக்கு.. 24 வயது இளைஞரின் அசத்தல் ஸ்டார்ட் அப்..!

இப்படி காணாமல் போனவர்களை தேடி மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க உதவும் நிறுவனம் தான் KHOJI. துருவ் குப்தா என்ற 24 வயதான ஜான்சியை சேர்ந்த இளைஞர், 25 வயதான சகோதரர் அபிஷேக் குப்தா என்ற இளைஞருடன் இணைந்து தொடங்கியதுதான் கோஜி என்ற நிறுவனம்.

ஒரு முறை துருவ் குப்தாவின் உறவினர்களில் வயதானவர் ஒருவர் திடீரென காணாமல் போனாராம். காவல்துறையினரிடமும் புகார் அளித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது இந்தியாவில் அடிக்கடி செய்தித்தாள்களில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வருவது நினைவு வந்ததாம். இப்படி நம்மை போல உறவுகளை இழந்துவிட்டு பலரும் வேதனையில் இருப்பார்கள் அவர்கள் வேதனையை தீர்க்க ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.

பி.டெக் படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய சகோதரருடன் இரண்டு ஆண்டு காலம் உழைத்து இந்நிறுவனத்தை தொடங்கினாராம். பல்வேறு ஆதாரங்களை திரட்டி அரசு துறை அதிகாரிகளை சந்தித்து 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இந்த நிறுவனத்தை அவர் தொடங்கி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவிலேயே உரிமம் பெற்ற இணையதளத்தை அடிப்படையாகக் கொண்ட காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முதல் தளம் ஆகும்.

பாரம்பரிய தேடுதல் நடைமுறைகளை மாற்றி அமைக்கிறது இந்த கோஜி இணையதளம். இரண்டு ஆண்டுகளில் இதுவரை 62 காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை தங்கள் நிறுவனம் தீர்த்திருப்பதாக இவர் தெரிவிக்கிறார். சிறுவயதில் காணாமல் போனவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய புகைப்படத்தை பதிவு செய்துவிட்டால் காலப்போக்கில் அவர்களின் முகம் எப்படி மாறி இருக்கும் என்பதை சரியாக இந்த தளமானது மாற்றி அவர்களை தேட உதவுகிறது.
 

அரசு வழங்கிய ஐடி கார்டுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடைபெறுகிறது. காணாமல் போன நபர் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட உறவினருக்கு தகவல் சென்றுவிடும். மூன்று மாதம் மற்றும் ஓராண்டு என சந்தா அடிப்படையில் குடும்பத்தினர் இணைந்து கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு 599 ரூபாய், ஓராண்டு காலத்திற்கு 1200 ரூபாய் மாதத்திற்கு என கட்டணம் செலுத்த வேண்டும்.

அரசின் டிஜி லாக்கருடன் இணைந்து செயல்படுவதால் இதில் தேடுதல் என்பது எளிமையாகியுள்ளது. காவல்துறையினரே கூட தற்போது இந்த இணையதளம் வாயிலாக தேடுதலை மேற்கொள்கிறார்களாம். காணாமல் போன வாகனங்களை தேடுவதற்கான தொழில்நுட்பமும் இதில் கொண்டு வரப்பட இருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் யாரேனும் காணாமல் போனால் அவர்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து சந்தா செலுத்தினால் போதும் விரைவில் அவர்கள் உங்களை வந்து சேர்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.