கல்யாண வீட்டு ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா செய்வோமா? 10 நிமிடம் போதும்! - WEDDING STYLE POTATO MASALA
அச்சு அசல் கல்யாண வீட்டு சுவையில் இருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வீட்டில் எப்படி சுவையாக செய்வது என பார்க்கலாம் வாங்க..

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர்க்கு பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. வறுவல், பொரியல் தொடங்கி குழம்பு, குருமா வரை உருளைக்கிழங்கில் என்ன செய்தாலும் சுவையாக தான் இருக்கும். அதிலும், கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறப்படும் உருளைக்கிழங்கு மசாலா என்றால் சொல்லவா வேண்டும்? என்ன தான் உருளைக்கிழங்கு மசாலாவை வீட்டில் செய்து பார்த்தாலும், கல்யாண வீட்டு சுவையில் இல்லையே என பலரும் நினைத்திருப்போம். அந்த வகையில், கல்யாண வீட்டு சுவையில் இருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வீட்டில் முறையாக எப்படி செய்வது என ரெசிபி கொண்டு வந்துள்ளோம். ட்ரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு - 3
- தக்காளி - 1
- வெங்காயம் - 2
- பூண்டு பல் - 5
- பச்சை மிளகாய் - 3
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கொத்து
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
-
செய்முறை:
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர், கடுகு சீரகம் சேர்த்து பொரிந்ததும், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- இப்போது, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியதும், பூண்டு மற்றும் சோம்பை ஒன்றாக சேர்த்து தட்டி வெங்காயத்துடன் சேர்க்கவும்.
- பூண்டு பச்சை வாசனை போனதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- இப்போது, வேக வைத்து ஒன்னு இரண்டாக மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்க்கவும். அதனுடன், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும் (உருளைக்கிழங்கை நன்கு கழுவி 4 விசில் விட்டு வேக வைத்து, தோல் உரித்து மசித்து வைத்துக்கொள்ளுங்கள்).
- 5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கி உருளைகிழங்கில் மசாலா சேர்ந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் கல்யாண வீட்டு சுவையில் இருக்கும் உருளைகிழங்கு மசாலா தயார்..மறக்காம செய்து பாருங்கள்.
What's Your Reaction?






