மகளிர் தினம்: சென்னையில் பிங்க் ஆட்டோக்களை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்! என்னென்ன வசதிகள்?
சென்னை: மகளிர் தினத்தையொட்டி சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ஆட்டோவில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சமூகநலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் பிங்க் ஆட்டோ திட்டத்தை இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
250 பெண்கள்
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் பிங்க் ஆட்டோ சேவையை வழங்கவுள்ளார்கள். இவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதையடுத்து தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ 3000 கோடியில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழு
அது போல் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தோழி மகளிர் விடுதி திட்டம் மேலும் விரிவடைய இன்று அறிவிப்புகள் வெளியாகலாம்
யாரெல்லாம் பிங்க் ஆட்டோவுக்கு விண்ணப்பிக்கலாம்
ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்க் ஆட்டோ பெற தகுதிகள்
சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். பெண்களுக்கு மட்டுமே இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முற்றிலும் பெண்களாலேயே இயக்கப்படும். இதனால் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோக்களில் பாதுகாப்புக்காக மகளிர் காவல் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் கருவி, பெண்களுக்கான உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோ திட்டத்திற்காக மொத்தமாக ரூ 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ 1 லட்சம் மானியம்
இந்த ஆட்டோக்களை பெற தகுதியானவர்கள்- பெண்கள் மட்டும்தான், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சென்னையில் குடியிருக்க வேண்டும். CNG/Hybrid ஆட்டோ வாங்க தமிழக அரசு ரூ 1 லட்சத்தை மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்குவதற்கு தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடனாக பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும். இந்த ஆட்டோக்களை மானிய விலையில் பெற குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
What's Your Reaction?






