பேராசை பிடித்த பலூன் | Greedy balloon | Small tamil stories with moral
சிறுவர் கதைகள்

ஒரு ஊரில் பலூன் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் விதவிதமாக பலூன்களை ஊதி அவற்றை கிராமத்தில் கொண்டு விற்று வந்தார். அதையே தன் தொழிலாக அவர் செய்து வந்தார்.
அவருக்கு பலூன்கள் தங்களுக்கிடையே பேசுவது கேட்கும் சக்தி உண்டு. அவரிடம் விதவிதமான பலூன்கள் நிறைய உண்டு. ஒரு நாள் அவர் வீட்டிலிருந்து பலூன்களை ஊதி, பெருக்கி அவற்றை தன் வண்டியில் கட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு பலூன் இவரிடம் பேச ஆரம்பித்தது. அதைக் கேட்டு அந்த வியாபாரி ஆச்சரியம் அடைந்தார். “இது என்ன இந்த பலூன்கள் தங்களுக்குள்ளே பேசுவது தானே எனக்கு கேட்கும் இப்போது என்னிடம் பேசுகிறதே”, என்று எண்ணிக் கொண்டார். அந்த பலூன், வியாபாரியிடம் சொன்னது, “நான் மற்ற பலூன்களை விட மிகவும் அழகான பலூனாக இருக்க வேண்டும். எனவே இன்னும் என்னுள் காற்றை அடைத்து என்னை பெரிதாக மாற்றுங்கள்” என்றது.
அதற்கு அந்த வியாபாரி சொன்னார், “இதற்கு மேல் உன்னை ஊதி பெரிதாக மாற்றினால் நீ வெடித்து விடுவாய், எனவே என்னால் இதற்கு மேல் உன்னை ஊதி பெரிதாக மாற்ற முடியாது” என்றார். ஆனால் அந்த பலூன் மீண்டும் அவரிடம், “தயவுசெய்து என்னை கொஞ்சம் ஊதி பெரிதாக்குங்கள்” என்று பணிவுடன் கேட்டது.
அந்த பலூன் வியாபாரியும் சரி என்று அந்த பலூனில் காற்று நிரப்ப ஆரம்பித்தார். அந்த பலூன் மற்ற எல்லா பலூன்களை விடவும் பெரிதாகவும் அழகாகவும் மாறியது. அந்தப் பெரிய பலூன் மற்ற பலூன்களிடம் சொன்னது “உங்கள் எல்லாரையும் விட நான் தான் மிகவும் பெரிதாகவும் அழகாகவும் இருக்கிறேன், எனவே இன்றைக்கு கிராமத்தில் விற்கும் போது குழந்தைகள் அனைவரும் என்னை தான் வேண்டும் என்று கேட்பார்கள்” என்று மற்ற பலூன்களிடம் ஏளனமாக கூறியது.
இதைக்கேட்ட பலூன் வியாபாரி நீ என்னிடம் பணிவாக கேட்டதால் தான் நான் மீண்டும் உன்னுள் காற்றை நிரப்பி பெரிதாக மாற்றினேன். நீ இவ்வாறு தற்பெருமையுடன் பேசக்கூடாது என்றார். பின்னர் பலூன் வியாபாரி அந்த பலூன்களை தன் வண்டியில் கட்டிக்கொண்டு கிராமத்திற்கு பலூன்களை விற்க சென்றார்.
அவர் கிராமத்தில் சென்று, “பலூன்…. பலூன்….! மிகவும் அழகான பலூன்கள் என்னிடம் உள்ளது ஓடி வாருங்கள் குழந்தைகளே” என்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரும் பலூன்களை வாங்க ஓடி வந்தார்கள்.
அப்போதே அந்த குழந்தைகள் அனைவருக்கும் அந்த பெரிய பலூன் மிகவும் பிடித்தது. எல்லா குழந்தைகளும் அந்த பெரிய பலூனை வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது அந்த பெரிய பலூன் மற்ற பலூன்களிடம் சொன்னது, “நான்தான் உங்களிடம் சொன்னேனே எல்லோருக்கும் என்னை தான் பிடிக்கும் என்று” சொல்லிக் கொண்டே சிரித்தது. பின்னர் ஒரு சிறுவன் அந்த பலூனை வாங்கிக் கொண்டு சென்றான்.
மற்ற குழந்தைகள் வேறு பலூன்களை வாங்கி அதை வைத்து விளையாட ஆரம்பித்தார்கள். அந்த சிறுவன் இந்த பெரிய பலூனை வைத்து விளையாடிக் கொண்டு சென்றான். அப்போது திடீரென்று அந்த பலூன் ஒரு சிறிய மரக்கிளையில் மாட்டி வெடித்தது. இதை அனைத்தும் அந்த வியாபாரி பார்த்துக்கொண்டே இருந்தார்.
அப்போது அவர் தன் மனதில் சிந்தித்தார் “இந்த பலூன் சிறிது நேரம் முன்பு வரை எவ்வளவு தற்பெருமையாக தன்னை பற்றி பேசிக்கொண்டிருந்தது சிறிய மரக்கிளையில் பட்டு இப்படி வெடித்து விட்டதே” என்று எண்ணி சிரித்தார்.
நீதி: அளவுக்கு மீறி தற்பெருமை கொள்ள கூடாது.
What's Your Reaction?






