மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் இணைப்பு : ஜூன் மாதம் முதல் வரும் சர்ப்ரைஸ்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்கள் எப்போது இணைக்கப்படுவார்கள், விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க கூடாது, அவர்களது உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற இரு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதைக் கொண்டு அவர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு செலவிடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு செலவிடப்படும் தொகை மூலம் கிராமங்களில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டை பின் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் விரிவடைந்து வருகிறது. அதிலும் இந்த மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிக தொகையை வழங்குகின்றன.
புதிய பயனாளர்கள் காத்திருப்பு!
தமிழகத்திலும் உரிமைத் தொகை எப்போது அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் புதிய பயனாளர்கள் இணைப்பு கோரிக்கையை அரசு எப்போது செயல்படுத்தும் என்ற கோரிக்கை தான் அதிகமாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். சுமார் 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் இணைய காத்திருக்கின்றனர்.
அமைச்சர் கொடுத்த அப்டேட்!
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதெல்லாம் மக்களை சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு கேட்பது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கையை எப்போது அதிகரிப்பீர்கள், அதற்கான விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது தான். இது தொடர்பாக சட்டமன்றத்தில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதிலளித்தனர்.
புதிய ரேஷன் அட்டைதாரர்கள்!
அந்த வகையில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும், அது தொடர்பான விவாதத்தின் போதும் மூன்று மாதங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், தகுதி உள்ள அத்தனை பெண்களும் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தனர். புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள், ஏறகனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் விசாரிக்கையில், “நிதியமைச்சரும், துணை முதலமைச்சரும் கூறிய படி மூன்று மாதங்களில் அதாவது ஜூன் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும். அதாவது ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்தநாள். அதை முன்னிட்டு இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து விண்ணப்பித்தால் ஜூலை மாதத்திலிருந்து புதிய பயனாளர்களுக்கு உரிமைத் தொகையான 1000 ரூபாய் மாதந்தோறும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.
What's Your Reaction?






