தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு அதிசயத்துக்கு இணையான கதைகளும் உண்மைகளும்

History of Thanjai Periya kovil

Jan 1, 2025 - 15:02
 0  12
தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு அதிசயத்துக்கு இணையான கதைகளும் உண்மைகளும்

 

 

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம்

ஆண்டு அதிசயத்துக்கு இணையான

கதைகளும் உண்மைகளும்

 

 

தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும் இந்தக் கோவிலைப் பற்றி உலா வருகின்றன. இந்தக் கோவிலின் சிறப்புகள் என்னென்ன?

ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் மிகப் பெரிய இந்துக் கோவில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பிரபல இந்து கோவில்களைப் பட்டியலிட்டால், தமிழகத்திலிருந்து திருவரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவில் ஆகிய கோவில்கள் நிச்சயம் இடம்பெறும்.

இந்த கோவில்களில் தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது.

கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் முத்தரைய மன்னன் ஒருவரைத் தோற்கடித்து பிற்கால சோழ பேரரசை நிறுவியபோது, தஞ்சையை சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். இதற்குப் பிறகு சுமார் 176 ஆண்டுகள், அதாவது ராஜேந்திரச் சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை தஞ்சையே சோழர்களின் தலைநகராக இருந்தது.

இந்த 176 ஆண்டுகளில் தஞ்சாவூரில் மிகப் பெரிய அரண்மனைகளும் கோவில்களும் கட்டப்பட்டன. கி.பி. 1218ல் தஞ்சை மீது படையெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சை முழுமையையும் சோழர்களின் அரண்மனை உட்பட அனைத்தையும் அழித்தான். ஆனால், கோவில்கள் தப்பின. ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, கோவில்களும் தாக்கப்பட்டன. இருந்தபோதும் பெருவுடையார் கோவில் பெரும் சேதமின்றி தப்பியது.

தஞ்சாவூரில் சோழப் பேரரசு மலரும் முன்பே, தளிக்குளத்து மகாதேவர் கோவிலும் பிரம்மகுட்டம் கோவிலும் இருந்தன. விஜயாலயச் சோழன் தலையெடுத்தபோது, நிசும்பசூதனி என்ற தேவிக்காக கோவில் ஒன்றை எழுப்பினான்.

ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது சோழநாடு வளமடைய ஆரம்பித்திருந்தது. பெரும் செல்வம் குவிய ஆரம்பித்தது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜ சோழனை பெரிதும் கவர்ந்தது. "அதன் விளைவாகவே தஞஅசையில் ராஜராஜீச்சரம் எனும் பெருங்கோவில்" எழுந்தது என தனது இராஜராஜேச்சரம் என்ற நூலில் குறிப்பிடுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை ராஜராஜசோழன்தான் கட்டினான் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு யாருக்கும் தெரியாது. அதனால், இந்தக் கோவிலைப் பற்றி பல கற்பனைக் கதைகள் வலம்வந்தன. கிருமி கண்ட சோழன் கட்டினான் என ஒரு சிலரும் காடு வெட்டிச் சோழன் கட்டினான் என ஒரு சிலரும் கூறிவந்தனர்.

1886ல் இந்தியத் தொல்லியல் துறையில் கல்வெட்டியல் துறை துவங்கப்பட்டபோது, ஜெர்மனியைச் சேர்ந்த யூஜின் ஜூலியஸ் தியோடர் ஹூல்ஸ் (Eugen Julius Theodor Hultzsch) என்பவர் அந்தப் பிரிவின் தலைமைக் கல்வெட்டாய்வாளராக நியமிக்கப்பட்டார்.

தென்னிந்தியாவில் உள்ள பல கல்வெட்டுகளைப் படித்து Epigraphia Indica என்ற தொகுப்பு நூலின் பல பகுதிகளை பதிப்பித்தார்.

அசோகரின் கல்வெட்டுகளை படித்து விளக்கிய இவர், தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் இருந்த கல்வெட்டுகளைப் படித்து, அதனை Epigraphia Indicaவின் இரண்டாம் தொகுப்பில் விளக்கினார்.

அப்போதுதான் இந்தக் கோவிலைக் கட்டியவன் ராஜராஜ சோழன் என்பது தற்காலத்திற்கு தெரியவந்தது. அதற்குப் பிறகு, சென்னை மாகாணத்தில் தலைமைக் கல்வெட்டாய்வாளராக நியமிக்கப்பட்ட வலையத்தூர் வெங்கையா 1892ல் பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் பெருவுடையார் கோவிலின் கல்வெட்டுகள் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன.

அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்த,

"பாண்டி குலாசினி வலநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத்

தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்"

என்ற வாக்கியம், இதைக் கட்டியவன் ராஜராஜசோழன் என்பதை ஐயமின்றி உறுதி செய்தது.

ராஜராஜசோழனும் கோவில் கட்டுமானமும்

 

மதுராந்தகன் என்ற உத்தம சோழன் மறைந்த பிறகு ராஜராஜசோழன் கி.பி. 985ல் ஆட்சிக்கு வந்தான். இதற்குப் பிறகு தஞ்சையில் அமைதி நிலவ ஆரம்பித்தபோது தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட ஆரம்பித்தான் ராஜராஜன்.

இந்தக் கோவிலின் தலைமைக் கட்டடக் கலைஞனாக வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் நியமிக்கப்பட்டான்.

நித்தவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகியோர் இரண்டாம் நிலை கட்டடக் கலைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

தஞ்சைப் பகுதி மலைகளே இல்லாத சமவெளிப் பகுதி. ஆகவே இந்தக் கோவிலுக்கான கற்களை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது அடுத்த கேள்வி.

"புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்னாண்டார் கோவில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்களையே இங்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். தஞ்சாவூருக்கு தெற்கு தென் மேற்கு திசைகள் தவிர அனைத்து திசைகளும் கால்வாய்களால் சூழப்பட்டுள்ளன. அந்தத் திசைகளின் வழியாக கனமான பெரிய கற்பாறைகளைக் கொணர்தல் கடினமானது. மேலும், தஞ்சைக்கு மிக அருகில் கற்பாறைகள் கிடைக்கும் இடம் இந்தப் பகுதிதான். தவிர தஞ்சைக் கோவிலில் பயன்படுத்தப்பட்ட கருங்கற்பாறைகள் எந்த வகையைச் சேர்ந்தனவோ அந்த வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி குன்னாண்டார் கோவில் பகுதி" என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்த இடம் தஞ்சாவூரில் இருந்து சுமார் 75 கி.மீ. தூரத்தில் உள்ளது

 

பெருவுடையார் கோவிலின் நுழைவாயில் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகிறது. இந்த நுழைவாயில் மீது ஐந்து நிலைகளுடன் கோபுரம் ஒன்று உள்ளது. அதற்கு முன்பு தென்னிந்தியாவில் கோபுரங்களை உயரமாகக் கட்டும் மரபு கிடையாது. முதன் முதலில் உயரமாகக் கட்டப்பட்ட கோபுரம் இந்தக் கோவிலின் கோபுரம்தான்.

இந்த வாயிலுக்கு அடுத்து உள்ளது ராஜராஜன் திருவாயில். இதன் மீது கேரளாந்தகன் திருவாயிலை விட உயரம் குறைந்த கோபுரம் ஒன்று உள்ளது. வாசலுக்கு வெளியில் பிரமாண்டமான துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. இந்த வாயில்கள் தவிர, தென் திசையில் இரண்டும் வட திசையிலும் மேற்கு திசையிலும் ஒவ்வொன்று என நான்கு வாயில்கள் உள்ளன.

இதில் வடபுறம் உள்ள அணுக்கன் திருவாயில் வழியாகவே ராஜராஜன் கோவிலுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மதில் சுவர்கள் நாற்புறமும் சூழ்ந்திருக்க பெருவுடையார் கோவில் நடுவிலும் அதற்கு வடபுறத்தில் சண்டீசர் கோவிலுமே ராஜராஜ சோழனால் கட்டப்பட்டவை.

திருச்சுற்று மாளிகை எனப்படும் மதிலோடு ஒட்டிய மண்டபங்கள் இரண்டு தளங்களாக இருந்திருக்க வேண்டும். அதில் ஒரு தளம் சிதைந்திருக்கலாம்.

இந்தத் திருச்சுற்று மாளிகையில் 36 பரிவார ஆலயங்கள் உள்ளன. இது தவிர, உமா மகேஸ்வரி அம்மனுக்கென்று தனித்த திருக்காமக் கோட்டம் ஒன்றும் இருந்திருக்க வேண்டும்.

தமிழக கோவில்கலை வரலாற்றில் அம்மனுக்கென்று தனியாக கோவில் அமைக்கப்படுவது இந்தக் கோவிலில் இருந்துதான் துவங்குகிறது என்கிறார் பாலசுப்பிரமணியன்.

தஞ்சைப் பெரிய கோவிலின் விமானம், தமிழகக் கோவில் கலை அதிசயங்களில் ஒன்று. இந்த விமானத்திற்குக் கீழே 11 அடி கனமான சுற்றுச்சுவருடன் கருவறை அமைந்துள்ளது. இதன் நடுவில் பிரம்மாண்டமான ராஜராஜேச்வரமுடையார் எனப்படும் லிங்கத் திருமேனி அமைந்துள்ளது.

இதற்கு மேலே, முதல் தளத்தில் ஒரு சுற்றறை ஒன்று உள்ளது. இந்தச் சுற்றறையில் சோழர் கால, நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. சிவபெருமானே நாட்டியம் ஆடுவதைப் போன்ற கரணச் சிற்பங்களும் உள்ளன.

இந்த முதல் தளத்திற்கு மேலே 13 அடுக்குகளாக விமானம் கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து 60.4 மீட்டர் உயரமுள்ளது.

தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் கதைகளில் முக்கியமான கதை, கோவில் விமானத்தின் மேல் உள்ள கல் 80 டன் எடையைக் கொண்டது என்றும் இதனை அழகி என்ற கிழவி பரிசாகக் கொடுத்தாள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தக் கூற்றை முற்றிலும் மறுக்கிறார் பாலசுப்பிரமணியன் "ஸ்தூபிவரை மேலே சென்று ஆராய்ந்தபோது, இக்கட்டுமானம் முழுவதும் பல துண்டுக் கற்களால் ஆனது என்பது உறுதியாய்த் தெரிந்தது" என்கிறது இராஜராஜேச்சுரம் நூல்.

216 அடி உடைய விமானத்தைப் பொறுத்தவரை அவை எப்படி கட்டப்பட்டன என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் கிடையாது.

சாரப்பள்ளம் என்ற ஊரில் இருந்து சாரம் அமைத்து உச்சியில் உள்ள கல்லை ஏற்றினர் என்று பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தாலும் அது கதை என்கிறார் பாலசுப்பிரமணியன்.

மாறாக எகிப்து நாட்டில் பிரமிடுகளை கட்டப் பயன்படுத்திய சுருள் சாய்வு தளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர். கோவில் கட்டப்பட்ட பிறகு இந்த சாய்வுதளம் அகற்றப்பட்டிருக்கலாம்.

அதேபோல, இந்தக் கோவிலைப் பற்றிக்கூறப்படும் இன்னொரு கதை, இந்தக் கோவிலின் விமானத்தின் நிழல் தரையில் விழாது அல்லது கலசத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறுவது.

ஆனால், ஒரு சாதாரண தினத்தில் சென்றாலே, விமானத்தில் எல்லா பகுதியின் நிழலும் தரையில் விழுவதைப் பார்க்க முடியும்.

அதேபோல, பெருவுடையார் முன்பு உள்ள நந்தி தினமும் வளர்ந்து வந்ததாகவும் அதன் தலையில் ஆணி ஒன்றை அடித்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதாகவும் கூறுவார்கள்.

ஆனால், இந்த நந்தியே பிற்கால மன்னர்களால் அங்கு வைக்கப்பட்டது. ராஜராஜன் காலத்தில் உருவாக்கப்பட்ட நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் உள்ளது.

கோவிலா, கலைக்கூடமா?

 

இந்தக் கோவிலில் ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை, தன் பெற்றோரான சுந்தர சோழர் மற்றும் வானவன் மாதேவியின் உருவத் திருமேனிகளை வழிபாட்டிற்காக அளித்துள்ளதை ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஆனால், அந்த திருமேனிகள் பிற்காலத்தில் மறைந்துவிட்டன.

அதேபோல, ராஜராஜசோழன், அவனுடைய பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோர் உயிரோடு இருக்கும்போதே, செப்புச் சிலைகள் உருவாக்கப்பட்டன. அவை 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் காணாமல் போய், தற்போது மீட்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக, ஒரு செப்புப் திருமேனி ராஜராஜனாகக் கருதப்பட்டு வீதி உலாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது 19 அல்லது 20ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்கிறார் பாலசுப்பிரமணியம்.

இது தவிர, கோவிலின் தென்புற வாசல் படிக்கட்டுகளின் மேற்கு திசையில், சாமியை வழிபட வரும் அடியார்களை வணங்கும் வகையில் ராஜராஜன் மற்றும் அவனுடைய மகன் ராஜேந்திரனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.தஞ்சை பெரிய கோவில், வெறும் கோவில் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம் என்று சொல்லும் வகையில் மிக அற்புதமான சிற்பங்களையும் அதைவிட அற்புதமான ஓவியங்களையும் கொண்டிருந்தது. ராஜராஜன் காலத்தில் கோவில் முழுவதுமே ஓவியங்களால் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது கருவறை சுற்றறையில் மட்டுமே ஓவியங்கள் உள்ளன.

நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆட்சி செய்தபோது, இந்த ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசப்பட்டு, நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்டன. ஒரு கட்டத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் சிதைந்து சிறிதளவு சோழர் கால ஓவியங்கள் வெளிப்பட்டன. இதையடுத்து இந்தியத் தொல்லியல் துறை தொடர்ந்து சோழர் கால ஓவியங்களை வெளிகொணரும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

இந்தக் கோவிலின் கட்டுமானம் மிக அற்புதமான ஒன்று. ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் இடையில் எவ்விதமான ஒட்டுப் பொருளும் பயன்படுத்தாமல் கற்களை மிக நேர்த்தியாக இடைவெளியின்றி அடுக்கி, மேலே உள்ள கற்களின் எடையால் அவை நிற்கும்படி செய்யப்பட்டுள்ளன.

கோவிலின் கர்ப்பகிரகத்தைப் பொறுத்தவரை, உள்ளே லிங்கத் திருமேனியை வைத்த பிறகே, சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது கோவிலைச் சுற்றியுள்ள அகழி, கோட்டைச் சுவர்கள், கொத்தளங்கள் ஆகியவை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow