தமிழர் கலைகள்
History of Tamil kalaigal
தமிழர் கலைகள்
மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையே கலைகளின் வெளிப்பாடுகள். தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைகள் வாயில்களாக அமைகின்றன. கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கின்றன. மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன.
கலைகளைக் கவின்தரு கலை என்றும் பயன்தரு கலை என்றும் வகுத்துக் கூறுவர் கண்ணையும் செவியையும் கவர்ந்து அவற்றின் வாயிலாக மனதிற்கு இன்பம் ஊட்டும் கலை கவின்கலை. இக்கலையை அழகுக்கலை என்றும் நுண்கலை என்றும் அழைப்பர். இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம் போன்றவை இன்கலைகளில் அடங்கும். மாந்தனிடம் இயல்பாக உள்ள அழகியல் உணர்ச்சியின் வெளிப்பாடே அழகுக்கலை.
இக்கலை வாழ்க்கையை மகிழ்ச்சி உடையதாக்குகின்றது. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கப் பயன்படும் கலைகள் பயன்தரு கலைகள் எனப்படும். உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் உழவர், நூல்களைத் திரித்து ஆடைகளை நெய்யும் நெசவாளர், மண்ணைக் குழைத்து மட்பாண்டங்களைச் செய்யும் குயவர், பொன்னை உருக்கி வண்ண அணிகலன்களைச் செய்யும் பொற்கொல்லர் போன்றவர்கள் பயன்தரு கலைகளைப் பயின்று பணி செய்கின்றனர். நம் முன்னோர் கலைகளை அறுபத்து நான்காக வகுத்துள்ளனர்.
கட்டடக்கலை:
தமிழர் கட்டிய வீடு, மாளிகை, அரண்மனை, கோயில்கள் போன்றவை கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இவற்றுள் கோயில்களே காலத்தைக் கடந்து தமிழரின் கட்டடக்கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்கின்றன. சங்ககாலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான மனை நூல்கள் இருந்ததாக 'நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்' என இளங்கோ அடிகள் குறிப்பிட்டுள்ளார்.
பழங்காலத்தில் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன. பின்பு களிமண், சுட்டசெங்கல், பாறைக் கோயில்கள் என அமைக்கப்பட்டு ஏழாம் நூற்றாண்டில் கற்றளிகள் அமைக்கும் முறை ஏற்பட்டது. கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்கள், கற்றளிகள்.
தமிழகக் கட்டடக்கலை வரலாற்றில் சோழர் காலம் பொற்காலம் ஆகும். இக்கால மன்னர்கள் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்களை கருங்கற்களான கோயில்களாக மாற்றி அமைத்தனர். இராசராச சோழன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலையின் மணிமகுடமாக விளங்குகின்றது. நாயக்கர் காலக் கட்டடக்கலையில் நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்புதல் தனிச்சிறப்பாக இருந்தன. திருமலை நாயக்கர் மகால், இராமேசுவரம் இராமசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபம், திருச்சி மலைமீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் ஆகியன எடுத்துக்காட்டாடுகளாகும். தமிழர் கட்டடக்கலையின் நெடிய வரலாறு தமிழர் பழைமையையும் வளமையையும் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.
சிற்பக்கலை:
இயற்கை உருவங்களையும், கற்பனை உருவங்களையும் வடிப்பது சிற்பக்கலை எனப்படும். நடுகற்கள் சிற்பக்கலையின் தோற்றுவாயாகக் கருதப்படுகின்றன. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு நூல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நடுகல் என்பது போரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் ஆகும். தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த நடுகல் வழிபடும் முறை, பிற்காலத்தில் வீரர்களின் உருவத்தைச் செதுக்கி வழிபடும் முறையாக வளர்ந்தது. தெய்வங்களுக்குச் சுதை உருவங்கள் செய்து வழிபட்டனர். இதுவே, கல்லில் சிற்பம் செய்யும் கலையாக வளர்ச்சி பெற்றது. சிற்பக்கலை கோயில்களை அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது.
தமிழர்கள் உலகத்திற்கு வழங்கிய செப்புத்திருமேனிகள் சங்ககாலத்தில் உலோகச் சிற்பங்களாக இருந்திருக்கலாம் என்ற செய்தியைத் தருகிறது. இருப்பினும் சோழர் காலமே செப்புத்திருமேனிகளின் பொற்காலம். மன்னர்கள் கட்டடக்கலையில் கொண்டிருந்த ஆர்வம் சிற்பக்கலையிலும் வெளிப்பட்டது. கோபுரங்களிலும்இ கோயில் விமானங்களிலும் சிற்பங்களை அமைத்தனர். உயர்ந்த தூண்களுடைய மண்டபங்கள் அமைத்தல், மண்டபங்களின் தூண்களில் யாளி, குதிரை, மனித உருவங்கள் அமைத்தல், புராணத் தொன்மைகளை விளக்கும் சிற்பங்கள் போன்றவை தனித்தன்மையானவை.
ஓவியம்:
கட்டடக்கலையும் சிற்பக்கலையும் போன்றே ஓவியக்கலையும் கண்ணால் கண்டு மகிழத்தகுந்த கலையாகும். அழகினைப் பாராட்ட, புலவர்கள் ஓவியத்தை உவமையாகக் கூறுவர். தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மேல் எழுத்துகளும் பல உருவங்களும் காணப்படுகின்றன. தொடக்க காலத்தில் ஓவிய எழுத்துகள் வரிவடிவில் இருந்தன. பழங்கால தமிழர் சொற்களை அறியும் முன்பே தம் எண்ணங்களைக் காட்சிகளாக உணர்த்தினர் இயற்கையோடு கலந்து வாழ்ந்த மக்கள் தாங்கள் கண்ட காட்சியினையும் வேட்டைக் காட்சியினையும் வரைந்தனர். ஓவியங்களாகக் குகைகளில் தீட்டியுள்ளனர். பச்சிலைச்சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டு அவ்வோவியங்களுக்கு வண்ணம் தீட்டினர். பாறை ஓவியங்கள் அந்த நிலப்பகுதியின் தொன்மையைக் குறிக்கும் சான்றுகளாக அமைகின்றன. பண்டைய தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்காகத் தங்கள் அரண்மனைகளிலும் கோயில்களிலும் ஓவிய மாடம் என்ற தனிப்பகுதியை அமைத்தனர். புழங்காலத்தில் சுவர் ஓவியங்களே பெரிதும் காணப்பட்டன. அதனால் சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்ற பழமொழி தோன்றியிருக்கலாம்.
இசைக்கலை:
தமிழர் இசையின் நுணுக்கங்களைத் தொன்மைக் காலத்திலிருந்தே அறிந்திருந்தனர். ஏழிசையேழ் நரம்பின் ஓசையை என்ற திருப்பதிகத் தொடர் மூலம் இசை ஏழு என்பதையும்இ இவை தனித்தனி நரம்புகளில் இசைக்கப்பட்டன என்பதையும் அறியலாம். இயற்றப்பட்ட செய்யுளை உரிய ஓசையோடு இசைப்பதால் இசை ஆகிறது. இசைக்கு உரிய கருவிகளைத் தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக் கருவிகள், தாளக்கருவி எனத் தமிழர் வகைப்படுத்தினர்.
தமிழர் கல்லிலும் கலை வண்ணம் கண்டனர். தமிழகத்தில் மதுரை மீனாட்சி கோவில்இ அழகர் கோவில் போன்றவற்றில் இசைத்தூண்கள் உள்ளன. பண்டைய காலந்தொட்டே தமிழர் வாழ்வியலோடு கலந்து இசைக்கலையை வளர்ந்து வந்துள்ளனர். சங்ககாலத்தில் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு இசைக்குப் பெயர்கள் சொல்லப்பட்டன.
நடனக்கலை:
மனித இனம் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் இருந்தே தங்கள் உணர்வுகளை நடனத்துடன் வெளிப்படுத்தி உள்ளனர் நடனக்கலை ஆடற்கலை, கூத்துக்கலை என்றும் அழைக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் சில கூத்து வகைகள் கூறப்பட்டுள்ளது. தாளத்துக்கும் இசைக்கும் ஒத்திசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். இலக்கியக் கதைகள், வரலாற்று, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை அசைவுகள் மூலம் உணர்த்தும் கலை ஆகும். கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் முதலியன கிராமியக் கலைகள். சிலம்பம் கம்பு சுற்றும் தற்காப்புக்கலை ஆகும்.
நாடகம்:
மையக் கருவான கதையுடன் நடிப்பு, ஒப்பனை, ஓவியம், திரை மற்றும் ஒலி, ஒளியுடன் ஒருங்கமைக்கப்பட்ட அரங்கமைப்புடன் இயலும் இசையும் சேர்ந்து படைக்கப்படுவது நாடகம் ஆகும்.
பட்டிமன்றம்:
தமிழர் சிந்தனை கலை வெளிப்பாட்டு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலவற்றை விவரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன.
வில்லுப்பாட்டு அல்லது வில்லிசை:
இது நாட்டுப்புறக் கலைகளில் தனிச்சிறப்புடன் திகழும் தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றுது. உடுக்கை, வில்லுக்குடம், தாளம், வீசுகோல் கட்டை போன்ற துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகின்றது.
கைவினைக்கலைகள்:
இவை தொழில் சார்ந்த கலைகள் ஆகும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரித்து வந்தனர். மண்பாண்டங்கள் செய்தல், முங்கில் கூடைகள் வனைதல், பாய் முடைதல், பட்டு நெசவு செய்தல், பிரம்பு பின்னுதல், மண் பொம்மை தயாரித்தல் போன்றவை கிராமப்புறக் கைவினைக் கலைகள் ஆகும்.
தமிழரின் சிறப்பையும் திறமையையும் கலைகள் எடுத்துக்கூறுகின்றன. எமது பண்பாட்டின் ஆழத்தை கீழடியில் நிகழ்ந்த புதைபொருள் ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. இருக்கின்ற பெருமைகளைக் கட்டிக் காப்பதும், அவற்றை தலைமுறை தாண்டி நிற்கச் செய்வதும் தமிழர்களாகிய எமது கடமையாகும்.
What's Your Reaction?