அவளின்றி அசையா ஓர் அணு
காதல் கவிதை
கூட்டுப் புழுவின்
பரிணாம வளர்ச்சியே
பட்டாம்பூச்சி _ என்
கூட்டுப் பறவையின்
பரிணாம வளர்ச்சியோ
கூட்டுப் புழுவாய்
துடிக்க வைக்கிறது
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும் மீண்டும்
எழுகிறேன்_ உன்
பார்வை தீயில்
சாம்பலாகி
வளைந்து நெளிந்த
நதிகளின் பாதையைப் போன்ற
உன் வாலிப வனப்பில்
நீந்திக் கடக்க
நித்தம் வேண்டுகிறேன்
ஆயிரம் பிறைகள்
பூச்சூடி நின்றாலும் உன்
பிறை நிலா நெற்றிக்கு
ஈடானதில்லை
ஈடில்லா நெற்றியதில்
என் குருதி
பொட்டு வைக்க
குடி தெய்வம் கைகொடுக்க
காலத்திற்கும் வேண்டிருக்கேன்
விதவிதமான
சேலையில் நீ
கட்டி நடந்த வீதியெங்கும்
தேரோட்டம் நடக்கிறது
நாளெல்லாம்
பரிசம் போட
காத்திருக்கேன் உன்
பாசத்திற்கே
ஏங்கி யிருக்கேன்
ஆசை வச்சி
நானிருக்கேன் என்
ஆயுள் வரை
காத்திருப்பேன்
பேச துடித்த
வார்த்தை நூறு
பேசிப்போன
வார்த்தை வேறு
உள்ளுக்குள்
உவமையெல்லாம்
உன் பெயரை
உளறுது
உயிர்க் கூட்டில்
ஊசலாடுது உன்
நினைவே அங்கு
நிழலாடுது
பேச்சிப்பாறை ஓரத்தில
பிச்சுப் பூவு மலர்ந்திருக்கு
ஈரமில்லா கல்லில்
எப்படித்தான் வந்ததோ
ஆராய்ந்த என் மனசுக்குள்
அழகியே உன்னை காட்டுது
கணுக்காலில் வலியிருந்தால்
கடந்த தூரம் அதிகமாம்
அணுக்களெல்லாம் வலிக்குதடி என்
ஆசை கொஞ்சம் அதிகமோ
தூண்டி முள்ளில் சிக்கி
துடிக்கு மந்த
மீனைப் போல்
தூரத்திலே கண்டாலே
துடிக்கும் என் இதயத்தை
தொட்டில் கட்டி ஆட்டிடடி என்
துயரை கொஞ்சம் கேட்டுடடி
பித்தம் அதிகமென்றால்
சித்தரிடம் செல்லலாம் என்
சித்தமெல்லாம் உன்
பித்தமென்றால் எந்த
சித்தரிடம் நான் செல்ல
ஆசை குளத்தில்
நீந்தித் திரிபவளை
எந்த வலையை வீசி
நான் பிடிக்க
ஆயுளுக்கும் என்னோடு _ நீ
நிலைத்திருக்க
ஆருடம் கேட்டு
யாரிடம் நிற்க
தலைபாரம் வச்சி
வலிக்காம நடந்திருக்கேன்
வலிக்காமா நீ வந்த மனசுக்குள்ள
வசதியா இல்லையென்று
வலி தந்து போகிறாய் என்
வாலிபத்தை நசுக்குகிறாய்
ஆனாலும்
காத்திருப்பேன்
அந்த ஒரு நாளுக்கு
ஆசையெல்லாம் பூவா
வெடிச்சி யிருக்கும்
வெடிச்ச பூவ நீ
முடிச்சி யிருக்க
வெள்ளந்தி சிரிப்போடு
நாமிருக்க
விளையாடி தீர்க்க
இரவிருக்க
விடியாத இரவை
நாம் தேடியிருக்க _ ஒரு
நாள் வரும்
நாம் சேர்ந்திருக்க அதுவரை
காத்திருப்பேன் உன்
கை பிடிக்க
அவனின்றி அசையா
அகிலத்தில் என்
அகிலமும் அவளே என்
அணுவும் அவளே
அவளின்றி ஓர்
அணுவும் அசையாது
என்னுளே
What's Your Reaction?