பாரம்பரியம் மாறாத 'பொங்கல் சீர் வரிசை' அளிக்கும் பழக்கம்..! சொல்லும் வாழ்வியல் மரபு என்ன
Pongal Seervarisai Pazhakkam
பாரம்பரியம் மாறாத 'பொங்கல் சீர் வரிசை' அளிக்கும் பழக்கம்..! சொல்லும் வாழ்வியல் மரபு என்ன?
திருநெல்வேலி: 'தமிழ்நாடு' என்றாலே பாரம்பரியம். 'பாரம்பரியம்' என்றாலே தமிழ்நாடு என்று சொல்லலாம். உணவில் தொடங்கி உடைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, மருத்துவம், கலை, ஆன்மீகம், வாழ்க்கை முறை என அனைத்திலும் பாரம்பரியம் தமிழர்களின் பின்புலமாக அமைந்துள்ளது. அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா (Pongal Festival), ஆண்டுதோறும் தைத்திங்கள் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்விற்கு பெரிதும் உதவியாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறும் விழாதான், இந்தப் பொங்கல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாக, புகுந்த வீட்டிற்கு சென்ற மகளிற்கு 'பொங்கல் சீர்' கொடுக்கும் முறையும் பாரம்பரியமாக இன்றுவரை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் 'பொங்கல் சீர் கொடுக்கும் முறை' இன்றும் நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் பொங்கல் சீர் என்பதை 'பொங்கல் படி' என்பர். பேச்சுவழக்கில் அது பொங்கல் பொடி என்று மருவியுள்ளது. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற தங்களது மகள், எந்த குறையும் இல்லாமல் கடைசிவரை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பொங்கல் சீர் கொடுப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது.
திருமணமான முதல் வருடத்தில் வரும் பொங்கலை, 'தலை பொங்கல்' என்று கூறி, பெற்றோர்கள் தங்கள் வசதிக்கேற்ப பொங்கல் சீர் கொடுத்து வருகின்றனர். சிலர் திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகள் வரையும், சிலர் கடைசி வரையிலும் இந்த பொங்கல் சீர் வழங்குவர். நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் பொங்கல் சீர் வழங்கும் நடைமுறை பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே களைக்கட்டத் தொடங்கும்.
புகுந்த வீட்டில் தன் மகள் பொங்கல் வைப்பதற்கு பித்தளை பானைகள், மண்பானைகள், கரண்டி, அரிசி, சர்க்கரை, கரும்பு, காய்கறிகள், கிழங்குகள், மஞ்சள் கொத்து, மசாலா சாமான்கள் எனப் பல வகையான பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி, அதை ஊரார் வேடிக்கைப் பார்க்கும் வகையில் வண்டி கட்டி, சம்பந்தி வீட்டுக்கு எடுத்துச் செல்வர். கிராமங்களில் இது வெறும் பாரம்பரியாகமாக மட்டுமல்லாமல் ஒருவித கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.
பொங்கல் சீர் வரிசை கொடுப்பதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே காய்கறிகள், கரும்புகள், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் விற்பனை களைக்கட்டும். அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார், வாழை இலை கட்டு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைக்கட்டியுள்ளது.
இந்த மார்க்கெட்டிற்கு பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாமல் சீவலப்பேரி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொங்கல் சீருக்கு தேவையான காய்கறிகள், கரும்பு, மசாலா சாமான்கள் போன்ற பொருட்களை வாங்கிச் சென்றனர். அதேசமயம், இந்த ஆண்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது பொங்கல் சீர் வாங்கும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
.
பொங்கல் விழாவில் முக்கிய அங்கம் வகிக்கும் கரும்பு கடந்த ஆண்டு போல, 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 600-க்கும், தனி கரும்பு ஒன்று ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. இந்த கடும் விலை ஏற்றத்தால் பொங்கல் சீர் பொருட்கள் வாங்கும் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலையேற்றத்தால் வியாபாரமும் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தினசரி மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரி பீர் முகமது கூறுகையில், “கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, இந்த ஆண்டு காய்கறிகள் விலை அதிகரித்துள்ளன. இருப்பினும், பொங்கல் சீர் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மகளுக்கு பொங்கல் சீர் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “மழையின் காரணமாக, காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது. இருந்தாலும், தலைமுறை தலைமுறையாக கொடுக்கும் பொங்கல் சீரை தவிர்க்க முடியாது என்பதால் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க வந்துள்ளோம். பெற்றமகளுக்கு புகுந்த இடத்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக பொங்கல் படி கொடுக்கப்படுகிறது.
இதை வைத்துதான் தங்களது மகள், பொங்கல் வைக்க வேண்டும் என்பது மரபு. காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் ரொம்ப கஷ்டபடுகிறோம்” என்று கூறினர். 20 ஆண்டுகளாக தன் மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து முதியவர் சுப்ரமணியன் இது குறித்து கூறும்போது, “பொங்கலுக்கு என் மகளுக்கு பொங்கல் படி கொடுக்க வந்தேன்.
20 ஆண்டுகளாக கொடுத்து வருகிறேன். என் மகள் சந்தோசமாக இருக்க இதைக் கொடுக்கிறோம். பொருட்களின் விலை ரொம்ப உயர்ந்துள்ளது. இருப்பினும், என் உயிரருள்ள வரை என் பிள்ளைக்கு இந்த பொங்கல் படி கொடுப்பேன்” என்றார். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பொங்கல் சீர் வழங்குவதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகின்றனர்.
எனவே கடன் வாங்கி, காய்கறிகள், மசாலா சாமான்கள் மட்டுமில்லாமல், பித்தளை பாத்திரங்கள், வெண்கல பாத்திரங்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பாத்திரங்கள், செவ்வாழைத்தார், குத்து விளக்கு, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என அக்கம்பக்கத்தினர் அசந்துபோகும் அளவிற்கு பொங்கல் சீர் கொடுத்து அசத்துவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மகள்களுக்கு வண்டி வண்டியாக பொங்கல் சீர் வழங்கி தங்கள் கௌரவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், லட்சக்கணக்கில் செலவு செய்து சீர் கொண்டுவரும் மணப்பெண் வீட்டாரை மகிழ்விப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் சார்பில், கறி விருந்து வழங்கப்படுவதும் வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் பொங்கல் சீர் கொண்டு வழங்க செல்லும் பெற்றோர்களுக்கு மணப்பெண் வீட்டார் கறி விருந்து வழங்கி அசத்தி வருகின்றனர்
What's Your Reaction?