கருவேப்பிலை பயன்களும் சுவையான சட்னி ரெசிபியும் – Tamil Recipes

Karuveppilai Chutney Recipe in tamil

Dec 24, 2024 - 12:29
 0  16
கருவேப்பிலை  பயன்களும் சுவையான சட்னி ரெசிபியும் –  Tamil Recipes

 

 

கருவேப்பிலை  பயன்களும் சுவையான

 சட்னி ரெசிபியும்  Tamil Recipes

இன்றைய காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதில் மிகவும் அதீத உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்களாகவே திகழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு அதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிக அளவில் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு. இவற்றை சரி செய்வதற்கு கடைகளில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இரும்பு சத்து மிகுந்த பொருட்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருட்களுள் ஒன்றுதான் கருவேப்பிலை. கருவேப்பிலையை நாம் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதோடு மட்டுமல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளரும், கண்பார்வை தெளிவடையும், ரத்த அழுத்தம் சீராக இருக்கும் என்று அதன் பலன்களை கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட கருவேப்பிலையை சாப்பிடாதவர்களுக்கு கூட இப்படி சட்னி செய்து தருவதன் மூலம் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கருவேப்பிலையை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்

 தேவையான பொருட்கள்

கருவேப்பிலை – 2 கப்,

 வெங்காயம் – 2,

 தக்காளி– 2,

காய்ந்த மிளகாய் – 5,

பூண்டு– 5 பல்,

 உப்பு – தேவையான அளவு,

 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

 உளுந்து – 2 ஸ்பூன்

 செய்முறை

 முதலில் கருவேப்பிலையை நன்றாக உருவி சுத்தம் செய்து அதை அலசி ஈரம் இல்லாமல் உலர வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை தோலை உரித்து அதை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். அதேபோல் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டின் தோலை உரித்து அதையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரை ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவேப்பிலையை அதில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். - கருவேப்பிலையை எடுத்து அழுத்தும் பொழுது அது நொறுங்கும் அளவிற்கு வறுபட வேண்டும். குறைந்த தீயில் வைத்து வறுப்பதன் மூலம் அது நன்றாக வறுபடும். இப்படி நன்றாக வறுபட்ட பிறகு அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் காய்ந்ததும் உளுந்தை போட்டு சிவக்க வறுக்க வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து நன்றாக பொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும். அது பொன்னிறமான பிறகு அதில் தக்காளி காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து இந்த சட்னிக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து தக்காளி குழையும் வரை நன்றாக வதக்க வேண்டும். தக்காளி குழைந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரை எடுத்து நம் வெங்காயம் தக்காளி வதக்கி வைத்திருக்கிறோம் அல்லவா? அதை முதலில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு கருவேப்பிலையை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அதையும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். சட்னி தயாராகிவிட்டது. இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு இதற்கு தாளிப்பதற்காக அரை ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சத்தான கருவேப்பிலை சட்னி தயாராகிவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow