பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்...!!

What course can students choose next after completing Plus 2...!!

Feb 23, 2025 - 12:50
 0  0
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்...!!

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன

 படிப்பை தேர்வு செய்யலாம்...!!

 

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ஏராளமானோருக்கு உள்ளது. இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் படிப்புக்குச் செல்லலாமா அல்லது மருத்துவம் இன்ஜினியரிங் படிப்பு படிக்கலாமா அல்லது டிப்ளமோ படிப்பு படிக்கலாமா என்ற குழப்பம் மாணவர்களுக்கு உள்ளது. பிளஸ் 2வுக்குப் பிறகு மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து கீழே காணலாம்.

பிளஸ் 2 வுக்கு பின் மேற்கொண்டு படிக்க விருப்பம் இருந்தால் மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ என பட்டப்படிப்புகளையும், எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளையும், விவசாயம், சட்டம் (பிஎல், எல்எல்பி) இன்ஜினியரிங், பிடெக் போன்ற படிப்புகளையும், சிஏ, ஏவியேஷன் போன்ற எண்ணற்ற படிப்புகள் மாணவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் ஏராளமான டிப்ளமோ படிப்புகள் காத்திருக்கின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்...!!

சட்டப்படிப்பைப் படிக்க விரும்புகிறவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பிஏ எல்எல்பி, பிஎஸ்சி எல்எல்பி, பிகாம் எல்எல்பி போன்ற 5 ஆண்டு சட்டப் படிப்பை படித்தால் நீதிமன்றம் சென்று வழக்காட முடியும். பின்னர் மூத்த வழக்கறிஞராக மாறி சில ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிபதியாக பதவி உயர்வையும் நாம் பெற முடியும்.

பிஎல், எல்எல்பி படிக்க முடித்தவர்கள் கம்பெனி லா, கார்ப்பரேட் லா, இன்டலக்ச்சுவல் பிராப்பர்ட்டி லா, ஸ்பேஸ் லா (Company Law, Corporate Law, Intellectual Property Law, Space Law) ஆகிய துறைகளில் சட்ட ஆலோசகராக செயல்பட்டு சிறப்புப்பெறலாம்.

பிளஸ் 2 வகுப்பில் என்ன பாடத்தை எடுத்து மாணவர்கள் படித்தார்களோ அதற்கேற்றார் போல அவர்கள் அடுத்த படிப்புகளைத் தொடங்குவதும், அதில் சேர்வதும் நல்லதாக அமையும்.

பிளஸ் 2 வகுப்பில் உயிரியல், வேதியல், இயற்பியல் பாடங்கள் கொண்ட முதல் குரூப் எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க முடியும். அவர்கள் நீட் தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து 5 வருடங்கள் படித்து டாக்டராகலாம். அவர்கள் பிடிஎஸ் படிப்பையும் இதன்மூலம் படிக்க முடியும். ஆனால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது முக்கியம்.

மேலும் பிடிஎஸ் படிப்பு மட்டுமல்லாமல் இந்திய மருத்துவப் படிப்புகளாக விளங்கும்
ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் நேட்சுரோபதி போன்ற படிப்புகளையும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் படிக்க முடியும்.

இதே குரூப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பார்ம் டி, விவசாயம், பிஷரீஸ் (மீன்வளம்), மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி போன்ற படிப்புகளை எடுத்துப் படிக்கலாம்.

இதுதவிர மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. பிஸியோதெரப்பி உள்ளிட்ட ஏராளமான துணை மருத்துவப் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும், எதிர்காலமும் காத்திருக்கிறது.

இது தவிர மெடிக்கல் டெக்னாலஜி தொடர்பாக மட்டும் 10க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்...!!

இந்த குரூப்பைச் சேர்ந்தவர்கள் இன்ஜினியரிங் படிப்பிலும் (பிஇ) சேர முடியும்.
அதேபோல் பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துப் படித்தவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர முடியும்.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் வழியாக இன்ஜினியரிங் கல்லூரிகளிலோ, நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலோ, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலோ சேரலாம்.

தமிழகத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளும், ஏராளமான படிப்புகளும் காத்திருக்கின்றன. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை மறக்கக்கூடாது.
இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் கணினி அறிவியல் (Computer Science) துறையை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கணினி அறிவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), சைபர் செக்யூரிட்டி(Cyber Security), மெஷின் லேர்னிங் (Machine Learning), பிளாக் செயின்(Block Chain), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) போன்ற படிப்புகளும் பிரபலமாகி வருகின்றன. இதுபோன்ற படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தரவு அறிவியல் (Data Science) எனப்படும் டேட்டா சயிந்ஸ் துறைகளில் ஒரே ஆண்டில் வேலைவாய்ப்பு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே டேட்டா சயின்ஸ் துறையில் மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த துறை பெற்றுள்ள அசுரத்தனமான வளர்ச்சியும், படித்து முடித்தவுடன் சென்னை, பெங்களூருவில் அசுரத்தனமாக வளர்ந்துள்ள ஐடி தொழில்நுட்ப நிறுவனங்களில் கிடைக்கும் அருமையாந ஊதியமும் மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் மாணவர்கள் கணினி அறிவியல் படிப்பை படித்துவிட்டு, அதன் பின்னர் டேட்டா சயின்ஸ், ஏஐ போன்ற படிப்புகளில் சேர்வது நல்லது கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வளர்ச்சி பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கு அடுத்த 6 ஆண்டுகளில் மாற்று அம்சங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல கரோனா பெருந்தொற்றை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. கரோனா பேரிடருக்குப் பின் நாட்டில் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உயர்ந்துள்ளன. தமிழ் நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.O.T. (Bachelor of Occupational Therapy), Accident and Emergency Care, Cardiac Technology, Audiology and Speech Therapy உட்பட உடனடி வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் 29 வகையான படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்புகளிலும் மாணவச் செல்வங்கள் சேர்ந்து படிக்கும்போது அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்...!!

ஐஐடி-ஜேஇஇ

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றிருப்பது அவசியமாகும்.
இதேபோல் இன்ஜினியரிங் டிசைன் படிப்பு பயில விரும்பவர்கள் சிறுசேரியில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட்,

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இதில் சேர விருப்பம் இல்லாதவர்கள் பிஎஸ்சி படிப்புகளில் சேரலாம். பிஎஸ்சியில் கணிதம், இயற்பியில், வேதியல், தாவரவியல், விலங்கியல், பயோடெக்னாலஜி, பிளாண்ட் பயாலஜி, சைக்கலாஜி உள்ளிட்ட ஏராளமான பாடப்பிரிவுகள் மாணவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

பி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட ஏராளமான பாடப்பிரிவுகள் காத்திருக்கின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. இதில் சேர்ந்து இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் படிப்புகளை மாணவர்கள் படித்து அதன் பின்னர் முதுநிலை படிப்பில் சேர முடியும்.

அதன் பின்னர் பிளஸ் 2 வில் வணிகவியல், கணக்குப் பதிவியல் படித்த மாணவர்கள் சிஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) போன்ற படிப்புகளில் சேர முடியும்.

சில மாணவர்கள் பிளஸ் 2 படிப்புக்கு பின்னர் ஆர்வத்துடன் வேறு துறைக்கு செல்ல விரும்புவார்கள். அதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளந. உதாரணமாக சிஏ என்ற ஆடிட்டர் படிப்பை படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2-வில் காமர்ஸ் (பொருளாதாரம்) படிக்காததால் நமக்கு இனி வாய்ப்பில்லை என்று பயப்பட வேண்டிய தேவையில்லை. சில அடிப்படை படிப்புகளை முடித்துவிட்டு அவர்கள் சிஏ படிப்பில் சேர முடியும்.

இதேபோல் பிளஸ் 2-வில் எந்த படிப்பு எடுத்தாலும் சேர வாய்ப்புள்ள ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற தொழில் சார்ந்த ஏராளமான படிப்புகளும் நமக்கு உள்ளன. அதில் மாணவர்கள் சேர்ந்து தங்களது உயர்கல்வியைத் தொடர முடியும்.

இதுதவிர மாணவச் செல்வங்களுக்கு ஏராளமான கல்வி வாய்ப்புகள் நாள்தோறும் உருவாகி வருகின்றன.
டிஜிட்டல் மார்க்கெட்டிங், இன்டீரியர் டிசைன், டூரிசம் மேனேஜ்மெண்ட், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஜர்நலிசம், பேஷன் டிசைனிங், யோகா (Digital Marketing, Interior Design, Tourism Management, Hotel Management, Journalism, Fashion Designing, Yoga) போன்ற பிரிவுகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தப் படிப்புகளைப் படிக்கும்போது அவர்களுக்கு உடனடியாகவே வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. மேலும், கலை, ஓவியம், ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் பிஎஸ்சி விஸ்காம், டிசைனிங், கிராபிக்ஸ் அன்ட் அனிமேஷன் படிப்புகளை தேர்ந்தெடுத்து சாதிக்கலாம்.

சினிமாவில் சாதிக்க விரும்புவர்கள் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பல்வேறுப் படிப்புகளை படிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் ஏராளமான தொழில் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் உள்ளன. ஆக மொத்தம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் முன்னே இருக்கின்றன. நமக்கு எந்தப் பிரிவில் ஆர்வம், நாம் எதில் சேர்ந்தால் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை மாணவர்கள் ஆய்வு செய்து பின்னர் அந்தப் படிப்பில் சேர வேண்டும். இதுதொடர்பாக தங்களது ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

நீங்கள் உயர்கல்வியில் சிறக்க வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே...!!

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow